Ad

ஞாயிறு, 30 மே, 2021

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கை கொடுக்குமா தமிழக அரசு? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"முதல் தலைமுறை பட்டதாரி" என்ற வார்த்தைகள் கருணாநிதி ஆட்சியில் அதிகம் உச்சரிக்கப்பட்டவை. இப்போது மீண்டும் ஸ்டாலின் ஆட்சியில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...!

ஒவ்வொரு ஆண்டும் 6,000 - 10,000 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வை 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். 10,000 பேர் போக மீதி நபர்களின் நிலை? இது போக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக 15 - 30 வருடங்களாக காத்திருக்கும் 90 லட்சம் மனிதர்களின் நிலை?

Representational Image

வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு நூலகம் போன்றவற்றில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தரம் குறைந்ததாக பெயரளவில் மட்டுமே செயல்படக் கூடிய பயிற்சி நிலையங்களாக உள்ளன.

பேப்பரில் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வந்ததும் அலையாய் வந்து குவியும் இளைஞர் இளைஞிகள் அடுத்த சில நாட்களிலயே வகுப்பை விட்டு நின்று விடுகின்றனர். மாணவ மாணவிகள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் பெயரளவில் மட்டுமே செயல்படக் கூடிய பயிற்சி நிலையங்களாக அவை மாறிவிடுகின்றன. இவை ஒருபக்கம் இருக்க தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி இலவச பயிற்சி வகுப்புகள் செயல்படுவது குறித்து துளியும் தெரியாமல் இருக்கின்றனர். அது மட்டுமின்றி தெருவுக்கு தெரு இப்போது தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்து உள்ளன.

Representational Image

இந்த மாதிரி இலவச வகுப்புகள், லோக்கல் கோச்சிங் சென்டர்களில் எல்லாம் படித்தால் ஜென்மத்திற்கும் அரசு வேலை வாங்க முடியாது என்று பீதியை கெளப்ப நாலு பேர் டிஎன்பிஎஸ்சின்னா சென்னை, ஐஏஎஸ்ன்னா டெல்லி போகணும் அப்பத்தான் எதிர்பாக்குறது கிடைக்கும் என்று திசைதிருப்பிவிட நாலு பேர் அவர்களை சுற்றி இருப்பார்கள். அவர்களால் அரசுப் பணிக்காக நடக்கும் இந்த தேர்வுகளை பார்த்து பயந்து விடுகின்றனர் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர் இளைஞிகள்.

அவர்களை விட அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், "இன்னும் எத்தன வருசத்துக்கு படிக்கணும்... கெவுர்மெண்டு வேலையலாம் நம்ப முடியாது... பரீட்சை எப்ப வரும், ரிசல்ட் எப்ப வரும்னு தெரியாது... பணங்கட்டாம கவுர்மெண்டு வேல கெடைக்காது... காலம் தான் ஆகுமே ஒழிய நாம எதிர்பாக்குறது நமக்கு கிடைக்காது... " என்று மனம் வருந்த, அவர்களும் "நம்ம பேமிலி சுவிட்சுவேசனுக்கு மாதம் எட்டாயிரம் பத்தாயிரம் சம்பளத்துக்காவது வேலைக்குப் போறதுதான் சரி" என்று எதோ ஒரு வேலைக்கு ஓடிவிடும் இளைஞர் இளைஞிகள் அரசு வேலைவாய்ப்பை கலங்கிய கண்களுடன் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். அதற்கு தகுந்தது போல் போட்டி அதிகம் என்பதால் கட் ஆப் எளிதில் அடைய முடியாத உயரத்தில் இருக்கிறது.

இவை ஒருபக்கம் இருக்க படிக்காத அம்மா அப்பாக்கள் 27ல் பையனுக்கு கல்யாணம், 24ல் பெண்ணுக்கு கல்யாணம் என்று அவர்கள் தங்கள் கடமையில் உறுதியாக இருப்பார்கள். அதே போல மூன்று வருடங்களாக படித்தும் கட்ஆப் பத்தாமல் அரசு வேலை கிடைக்காமல் சுற்றும் இளைஞர்கள் ஏகப்பட்ட பேர். அவர்களை எல்லாம் பார்க்கும்போது முதல் தலைமுறை பட்டதாரிகள் ரொம்பவே பயந்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.

1- 12th தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, இரண்டு வருடங்கள் டைப்பிங் முடித்துவிட்டு மூன்றாவது வருடத்தில் 200க்கு 130 - 140 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ், வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசின் ஊக்கத் தொகை போன்றவை இருந்தபோதிலும் அவர்கள் அரசு வேலையை பார்த்து தேர்வுகளை பார்த்து இன்னும் அதிகம் பயப்படுகின்றனர். பயத்தின் காரணமாகவே மனதுக்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் வேற வேலைக்கு ஓடிவிடுகிறார்கள்.

Representational image

முதல் தலைமுறை பட்டதாரிகள் பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் மகன்களாக மகள்களாக இருப்பார்கள். அவர்கள் டிகிரி முடித்து பட்டம் வாங்குவதற்குள் கடும் மன உளைச்சலை அடைந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகிறார்கள்.

இந்நிலையில் இரண்டு மூன்று வருடங்கள் படிக்க வேண்டுமென்றால் அவர்களின் தலையில் மேலும் பாரத்தை வைத்தது போல் உள்ளது.

சுருங்க சொல்ல வேண்டுமென்றால் முதல் தலைமுறை பட்டதாரிகளால் கல்லூரி முடித்த பின் கூடுதலாக இரண்டு மூன்று வருடங்கள் அமர்ந்து தேர்வுக்கு படிக்க முடியாது. காரணம் அவர்கள் டிகிரி முடித்த அடுத்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் முட்களில் நடப்பது போல் உணர்கின்றனர். ஒவ்வொரு விஷயத்தையும் முட்டி மோதி வெந்து நொந்துபோய் வாங்குவதாக உள்ளது.

Also Read: பழிக்குப் பழி தீர்வல்ல... நச் என உணர்த்திய 5 படங்கள்! - வாசகர் பார்வை #MyVikatan

ஆகவே அவர்களால் தேர்வு எழுத முடியாது. கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த "முதல் தலைமுறை பட்டதாரி" திட்டம் 2011 முதல் அமலில் இருந்து வருகிறது. அவ்வகையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சீனியாரிட்டி மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி ஆகிய மூன்றிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாவட்ட வாரியாக முதல் தலைமுறை பட்டதாரிகளை கணக்கிட்டு அவர்களின் மதிப்பெண்களுக்கு தகுந்த வேலை வழங்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் மையக் கருத்து.

Representational Image

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று தேர்தல் நேரத்தில் அதிமுக சொன்னபோது சிக்கிம் முதல்வரை உதாரணமாக கூறினார்கள் பலர். அதே போல நம்ம முதல்வரும் "முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை" என்று சொல்லி கையெழுத்து இட்டதோடு எந்தவித தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி வகுப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த காலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் (குறிப்பாக கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு) அரசுப்பணிகள் (கடைநிலை ஊழியர்களான இளநிலை உதவியாளர்கள் பணிகள் போன்றவை) வழங்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருப்பாரா?

-ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-first-graduates-job-opportunities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக