Ad

ஞாயிறு, 30 மே, 2021

`மோடி அரசுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லைதான்..!’ - சிவசேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனாலும் மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியில்தான் இருந்தனர். தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இப்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொண்டு சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதையடுத்து சிவசேனா நரேந்திர மோடி அரசை விமர்சனம் செய்ய தயங்குவதில்லை.

சஞ்சய் ராவுத்

இப்போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில், ``நரேந்திர மோடி அரசு மீது இப்போது எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``மத்தியில் தற்போதுள்ள அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று எனக்கு தெரியும். இப்போது மக்களுக்கு அத்தியாவசியத் தேவை ரொட்டி மற்றும் கப்டா(துணி) போன்றவையாகும். யாரும் ரத்தன் டாடா, அதானி, அம்பானியாக விரும்பவில்லை. எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள பிரச்னைகளை தீர்க்கவும் தயங்கக்கூடாது. கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு புதிதாக எதையும் செய்யவில்லை.

மேற்கு வங்க விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு உடன்படுகிறேன். மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு புதிதல்ல. ஆனால் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு வேறு மாநில எதிர்க்கட்சி தலைவர்களை அழைக்கவேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மோடி

மகாராஷ்டிரா அமைச்சர் அனில் பரப் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், ``எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டை கூறி ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறி வருகின்றன” என்று தெரிவித்தார். அதேசமயம் மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப் மற்றும் போக்குவரத்து கமிஷனர் அவினாஷ் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க போலீஸார் 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/no-corruption-charges-against-narendra-modi-government-shiv-sena

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக