Ad

திங்கள், 31 மே, 2021

"இலக்கியம் எனும் பங்கருக்குள் ஒளிந்திருக்கிறேன்!"- எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

தமிழிலக்கியத்தின் தனித்துவமான ஆளுமை யுவன் சந்திரசேகர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, குறுங்கதைகள், நாவல், குறுநாவல், கவிதை என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் யுவன் ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட!

'ஒளிவிலகல்', 'ஏமாறும் கலை', 'நீர்ப்பறவைகளின் தியானம்' உள்ளிட்ட 7 சிறுகதைத் தொகுப்புகள், 'பகடையாட்டம்', ‘கானல்நதி’, ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ உள்ளிட்ட 8 நாவல்கள், ‘வேறொரு காலம்’, ‘புகைச்சுவருக்கு அப்பால்' உள்ளிட்ட 5 கவிதைத் தொகுப்புகள் என யுவன் சந்திரசேகரின் பங்களிப்பு விரிவும் ஆழமும் கூடியது; ‘குதிரைவேட்டை’, ‘கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்’ போன்ற நாவல்கள், ‘பெயரற்ற யாத்ரீகன்’ ஜென் கவிதைகள் என மொழிபெயர்ப்பிலும் யுவனின் பங்களிப்பு அபாரமானது!

இத்தகைய நெடிய இலக்கியப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் கதைசொல்லி யுவன் சந்திரசேகரின் ஊரங்கு நாட்கள் எப்படி இருக்கின்றன?!
நாவல்

"பிறந்துவிட்டாலே ஒருவருக்கு மரணம் உறுதியானது என்ற எண்ணத்தில், வாழ்தல் பற்றி எந்தக் கவனமும் இல்லாமல் இருந்தோம். ஆனால், இந்தக் காலகட்டம் உயிர் வாழ்தல்மேல் மிகப்பெரிய வேட்கையை எல்லோரிடத்திலும் உருவாக்கி இருக்கிறது. ஓர் எழுத்தாளனாக எனக்கென்று ஓர் ஆகாயத்தை உருவாக்கிக்கொண்டு, அதில் சதா பறந்தபடி இருந்தவன்தான். ஆனால், அந்தப் பறத்தலும் அகநெருக்கடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. அகநெருக்கடி வரும்போது உங்களுடைய வானம் உங்களுடையதாக இல்லாமல் போகும். ஆனால் திரும்பத்திரும்ப நான் அதனிடம்தான் போகவேண்டியிருக்கிறது.

எந்நேரமும் பீதியால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்; பிழைத்திருத்தல் என்பதுதான் எல்லோருடைய கவலையாகவும் இருக்கிறது. ’பிழைத்திருத்தல்’ என்பது பொருளாதார, சமூகரீதியான தேவைகளிலிருந்து விலகி, ‘உயிர்வாழ்தல்’ என்பதாக மாறிவிட்டது. கலைஞர்கள், சாமானியர்கள் என எல்லோருக்குமான, முற்றிலும் புது வகை இருத்தலியல் பிரச்னையாக இந்தக் காலகட்டம் ஆக்கிவிட்டது.

"முதல்தடவையாக எழுத்தைத் தப்பிக்கும் மார்க்கமாகப் பார்க்கிறேன்"

பயணத்துக்குத்தான் வழியில்லை, இசை கேட்கலாம் என்றால் அதற்கான அகநிலையும் இல்லாமல் போகிறது. பீதியும் பதட்டமும் நிறைந்திருக்கும்போது எதை ரசிக்கமுடியும்?

நான் வங்கியில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றினேன். அதில் 30 ஆண்டுகள் காசாளராக இருந்திருக்கிறேன். மற்ற பிரிவுகளைவிட மேலதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய பணி அது. என்னுடைய அதிகபட்ச எழுத்துகள் அந்த ஆண்டுகளில் எழுதப்பட்டவை. என்னுடைய மேல்மனம் அன்றாடங்களின் மனமாகவும், ஆழ்மனம் படைப்பூக்கம் கொண்டதாகவும், செயல்பட்டு வந்தன. வீடுதிரும்பி என்னுடைய அறைக்குள் நுழைந்தவுடனே எழுத்தாளனாக மாறிவிடுவேன்.

நாவல்

இப்போதைய பீதியிலிருந்து விடுபடுவதற்கும் இலக்கியம்தான் உதவுகிறது. நடப்புக் காலகட்டம் என்றில்லாமல், இலக்கியத்துக்கான நிரந்தரக்கவலைகள், அக்கறைகள், கரிசனங்கள் சில எனக்கு உண்டு. அவற்றைத் தொட்டு ஓடுவேன். இப்போது இலக்கியத்துடன் முழுநேரமும் செலவிட்டு, அன்றாடத்தின் நெருக்கடியை சமாளிக்க முயல்கிறேன். நான் ஆர்வத்துடன் ஈடுபட்ட துறையாக மட்டுமில்லாமல், திடீரென்று ஒரு சரணாலயமாக, புகலிடமாக இலக்கியம் மாறிவிட்டதை நினைத்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.

போர்ச்சூழலில் மக்கள் பங்கரில் இருப்பார்கள், இல்லையா? அது மாதிரி, இலக்கியம் என்னுடைய பங்கராக இப்போது இருக்கிறது. இலக்கியம் எனும் பங்கருக்குள் இப்போது நான் ஒளிந்திருக்கிறேன்.

எழுத்தை என்னைத் தேடி அடையும் மார்க்கமாகவே வைத்திருந்தேன், இதுவரை. முதல்தடவையாக, எழுத்தைத் தப்பிக்கும் மார்க்கமாகப் பார்க்கிறேன். என்னுடைய சாகசத்தைக் காகிதத்தில் நிகழ்த்த முயல்கிறேன்.

அந்தவகையில், மிகவும் ஆச்சர்யகரமாக, இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் இரண்டு நாவல்கள் எழுதி முடித்திருக்கிறேன். நான் கட்டுரைகளை அதிகம் விரும்பி எழுதுபவனில்லை; இந்த காலகட்டத்தில் நாலைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

எப்போதுமே எனக்கு உவப்பான குறுங்கதை வடிவத்தை மறுபடியும் கையிலெடுத்து, நூற்றுச் சொச்சம் குறுங்கதைகள் எழுதினேன்; தலைப்பில்லாத அவற்றை ‘தலைப்பில்லாதவை’ என்ற தலைப்பிலேயே நூலாக வெளிக்கொண்டுவர உத்தேசம்.

கடலில் எறிந்தவை
நான் எழுதவந்த தொண்ணூறுகளின் காலகட்டத்தை ஒப்பிடும்போது இன்றைய பதிப்புச்சூழலும் பத்திரிகைகளும் மேம்பட்டிருக்கின்றன; இணைய இதழ்கள் பரவலாகியிருக்கின்றன. சிறுகதையாசிரியர்கள் நிறையப்பேர் உருவாகியிருக்கிறார்கள். பெயர்கள், எழுத்துமுறை பரிச்சயமாகியிருக்கிறது; ஆனால், தனித்துவமான எழுத்துமுறை என்று அதிகம் கண்ணில்படவில்லை!

மொழிமீதான ஈடுபாடு ரொம்பக் குறைவாக இருப்பதாகப்படுகிறது. இலக்கியத்தின் இந்தக் காலகட்டத்தை, தன்முனைப்பின் காலகட்டம் என்றே சொல்வேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் இதற்கு உதவியிருக்கின்றன. எழுத்தாளர்களுக்குத் தான் முன்னணியில் இருக்கவேண்டும், பரவலாக கவனிக்கப்படவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது; ஆனால், அதற்குத் தேவைப்படுகிற உழைப்பைச் செலுத்துகிற மாதிரித் தென்படவில்லை. இதை ஓர் ஆதங்கமாகத்தான் சொல்கிறேன்!"



source https://www.vikatan.com/arts/literature/writer-yuvan-chandrasekar-interview-on-his-experience-about-the-pandemic-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக