Ad

வியாழன், 27 மே, 2021

புதுக்கோட்டை: கொரோனா நோயாளிகளுக்கு மூலிகைத் தாம்பூலம்; சித்த மருத்துவ பிரிவின் புது முயற்சி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதுடன், சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவும் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டது.

சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு

இங்கு 30-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இந்த நிலையில்தான், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவதைத் தடுக்கவும், நுரையீரல் வீங்கிப் போவதைத் தடுக்கவும், நுரையீரலை வலுப்படுத்தவும் மூலிகைத் தாம்பூலம் என்ற ஒன்றைச் சித்த மருத்துவப் பிரிவு அறிமுகப்படுத்தியிருக்கிறது. மதிய உணவுக்குப் பிறகு இந்த மூலிகைத் தாம்பூலத்தைச் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றனர் மருத்துவர்கள்.

இதுபற்றி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா கூறும்போது, ``கடந்தாண்டு தொற்றால் பாதிக்கப்பட்டு நுகரும் தன்மை இல்லாமல் போனவர்களுக்காக ஓமப் பொட்டணம் வழங்கினோம். அப்போது அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இந்த வருடம் மூலிகைத் தாம்பூலத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மூலிகைத் தாம்பூலம் என்பது வழக்கமாக நாம் பயன்படுத்தும் வெற்றிலையோடு ஓமம், கிராம்பு, தாளி சாதி வடகம், பனங்கற்கண்டு ஆகிய 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பு. இந்த மூலிகைத் தாம்பூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதையும், கொரோனா வைரஸ் உடலுக்குள் பரவுவதால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் வீங்கிப் போவதையும் தடுக்கிறது. வெற்றிலை வழக்கம்போல் பசியைத் தூண்டி உடலுக்குத் தேவையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் வழங்கும் மிக முக்கியமான ஒன்று.

மூலிகைத் தாம்பூலம்

பூஞ்சைக்கு எதிராகவும் வெற்றிலை வேலை செய்யக்கூடியது. கிராம்பு காரத்தன்மையும், அமிலத்தன்மையும் கொண்டது. ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. இவற்றுடன் சேரும் தாளி சாதி வடகம் என்பது, சித்த மருத்துவ மாத்திரை, தாளிச பத்திரி என்ற மூலிகையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 17 வகையான மூலிகைப் பொருட்களைக் கலந்து செய்யப்படுவது" என்றார்.

மதிய உணவுக்குப் பிறகு இந்த மூலிகைத் தாம்பூலத்தைச் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றனர் மருத்துவர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-siddha-covid-treatment-centre-gives-herbal-paan-to-patients

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக