Ad

ஞாயிறு, 30 மே, 2021

`நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்' - கொரோனா வார்டு விசிட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை முந்தி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் பிடித்துள்ளது.

கோவை

Also Read: கோவை விசிட்: பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு.. தேசிய அளவில் ட்ரெண்ட்டான #GoBackStalin

100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், கிட்டத்தட்ட 30 பேருக்கு தொற்று உறுதியாகிறது. இதையடுத்து அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் இன்று ஆய்வு செய்தார். அந்த வகையில், முதலில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வை முடித்து விட்டு ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது.

ட்விட்டர் ட்ரெண்ட்

அது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டானது. கோவை வந்த ஸ்டாலின், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத வண்ணம், பி.பி.இ எனப்படும் பாதுகாப்பு முழு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிலும் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கொரோனா பாதித்த நோயாளிகளிடம் நேரடியாக நலம் விசாரித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
ஸ்டாலின்

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியார்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!” என கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/mk-stalin-coimbatore-visit-and-his-statement-regarding-corona-ward-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக