Ad

வெள்ளி, 28 மே, 2021

Covid Questions: ஆவி பிடித்தால் கறுப்புப் பூஞ்சைத் தொற்று வரும் என்பது உண்மையா?

ஆவி பிடித்தால் கறுப்புப் பூஞ்சைத் தொற்று வரும் என்பது உண்மையா?

- சரஸ்வதி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா.

``முதலில் ஆவி பிடித்தலின் சரியான முறையை விளக்குகிறேன். வெறும் வெந்நீரில் தைலமோ, வேறு மருந்துகளோ எதுவும் சேர்க்காமல் ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு அல்லது வாயால் ஆவியைப் பிடிக்கலாம். ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆவி பிடிக்கக்கூடாது. பெட்ஷீட் மாதிரி எதையும் கொண்டு மூடிக்கொண்டும் பிடிக்க வேண்டியதில்லை. அந்தச் சூட்டிலேயே மூக்கிலுள்ள சளி உருகி வெளியேறும். மூக்கைச் சிந்தும்போதும் ஒரு பக்க துவாரத்தை மூடிக்கொண்டு சிந்தினால்தான் சளி வெளியே வரும்.

மருத்துவர் தீபிகா

ஆவி பிடிக்கும்போது மியூகோசிலியரி கிளியரன்ஸ் (Mucociliary clearance) என்ற பகுதி அழுக்கு, சளி போன்றவற்றை வெளியேற்றும். அளவுக்கதிமாக ஆவி பிடிக்கும்போது இந்த மியூகோசிலியரி பகுதி பாதிக்கப்படும். இயற்கையான பாதுகாப்புச் செயல்முறையே பாதிக்கப்படுவதால், கறுப்புப் பூஞ்சை மட்டுமல்ல எந்தவிதத் தொற்றும் சைனஸ் பாதையில் சேர வாய்ப்புகள் அதிகம். கறுப்புப் பூஞ்சைத் தொற்றின் ஆரம்ப அறிகுறி மூக்கில் ஏற்படும் வறட்சி.

நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களையே இந்தத் தொற்று அதிகம் தாக்கும். கோவிட் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்புவரை, இந்தத் தொற்றை, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களிடம்தான் அதிகம் பார்த்துக்கொண்டிருந்தோம். காரணம் அவர்களுக்கெல்லாம் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும். கோவிட் தொற்றிலும் எதிர்ப்புத்திறன் குறைகிறது. நீரிழிவு இருந்து, அவர்களுக்கு கோவிட் தொற்றுக்கு ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்படும்போது நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகக் குறைகிறது.

சாதாரணமாக ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தானது புரதத்துடன் இணைந்தே இருக்கும். ஆனால், கோவிட் தொற்று ஏற்படும்போது உண்டாகும் வீக்கம் காரணமாக அந்த இரும்புச்சத்தானது தனியே இருக்கும். கறுப்புப் பூஞ்சை வளர்வதற்கு அந்த இரும்புச்சத்தும் குளுக்கோஸும் தேவை என்பதால் இந்தச் சூழலில் அது பல்கிப் பெருகும்.

Steam Inhalation

Also Read: Covid Questions: `ஆவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?' - விளக்கும் மருத்துவர்

எனவே, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்தச் சர்க்கரையின் அளவானது சாப்பிடுவதற்கு முன் 110, சாப்பிட்ட பிறகு அதிகபட்சம் 200 என்ற அளவைத் தாண்டக் கூடாது. கோவிட் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு கொடுக்கும்போது இன்சுலினும் கொடுக்க வேண்டியிருக்கும். மிக மிக அவசியம் என்றால் மட்டும்தான் ஸ்டீராய்டு கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டீராய்டு கொடுக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பும்போது கறுப்புப் பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகளைச் சொல்லி எச்சரித்துதான் அனுப்புவோம். மூக்கில் வறட்சி, மரத்துப்போவது, கண்கள் சிவந்துபோவது, கண்களைச் சுற்றியுள்ள தசைகள் பாதிப்பதன் விளைவாகக் காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரிவது, கண்களில் வீக்கம் போன்றவை இருந்தால் உடனே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக விட்டாலும் பார்வை பறிபோகலாம். இந்தத் தொற்றின் முதல் அறிகுறி மூக்கிலிருந்து ஆரம்பிப்பதால் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை அவசியமாகிறது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/is-there-any-link-between-black-fungus-infection-and-steam-inhalation-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக