Ad

வெள்ளி, 28 மே, 2021

நெல்லை: சிறைக் கைதி முத்து மனோ கொலை விவகாரம்.. 37-வது நாளாக உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டம்!

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. 26 வயது இளைஞரான இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் செயல்பட்டு வந்த முத்து மனோ உள்ளிட்ட நான்கு பேர் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்ததாக ஏப்ரல் 8-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட சிறைக் கைதி முத்து மனோ

கொரோனா நடைமுறை காரணமாக ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் நால்வரும் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சர்ச்சைக்குரிய சில சமூகத்தினர் தனித்தனி பிளாக்குகளில் அடைக்கப்படுவது வழக்கம். ஆனால், முத்து மனோவும் அவரது நண்பர்களும் பொது சிறையில் அடைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் சிறைச்சாலைக்குள் சென்றதும் அங்கு காத்திருந்த ஒரு கும்பல் முத்து மனோவைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

முத்து மனோ உறவினர்கள்

இந்தச் சம்பவத்தில் முத்து மனோ பலத்த காயத்துடன் அங்கேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சிறைக்குள் நடந்த கொலை குறித்து அறிந்ததும் முத்து மனோவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முத்து மனோவின் தந்தை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தன் மகனின் மறைவுக்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார். அத்துடன், முத்து மனோ கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தவும் கோரியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, துணை ஜெயிலர் சிவன், உதவி ஜெயிலர்கள் கங்காரஜன், சங்கரசுப்பு, ஆனந்தராஜ், தலைமை வார்டன் வடிவேல் முருகையா மற்றும் சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி-யான பழனி உத்தரவிட்டார்.

இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என முத்து மனோவின் பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். சிறைக்குள் அடைக்கப்பட்ட அரை மணி நேரத்தில் கொலை நடந்திருப்பதால் அதன் பின்னணியில் சிறைத்துறையினரும் இருந்திருக்க வேண்டும் என்றும் முத்து மனோ அங்கு அடைக்கப்பட இருப்பது பற்றி எதிர்தரப்பைச் சேர்ந்த கைதிகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை

அதனால் இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் கடந்த 37 நாள்களாக முத்து மனோ உடலை வாங்க மறுத்து வாகைக்குளம் கிராமத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளர் அனில்குமார், ஆய்வாளர்கள் உலகராணி, பிறைச்சந்திரன், உதவி ஆய்வாளர் பார்வதி அடங்கிய குழுவினர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினார்கள். மூன்று மணி நேரம் கைதிகளிடமும் சிறைத்துறையினரிடமும் விசாரணை நடந்தது

கொலைக்கு நீதி கேட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்

சிறைச்சாலைக்கு வந்ததில் இருந்து சக கைதிகளுடன் தகராறு ஏற்பட்டது வரையிலான விவகாரங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, முத்து மனோ கொலையில் தொடர்புடைய கைதிகள் சிலர் ஜாமீனில் இருப்பதால் அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தொடர்ந்து விசாரணையைத் தொடர இருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

சிறையில் கொலை செய்யப்பட்ட முத்து மனோ உடலை வாங்க மறுத்து வாகைக்குளம் கிராமத்தில் பெற்றோரும் உறவினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை முடிவுக்குக் கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.



source https://www.vikatan.com/news/general-news/cbcid-police-investigating-the-murder-incident-happened-in-jail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக