Ad

வெள்ளி, 28 மே, 2021

பத்திரப்பதிவில் மோசடி; அரசுக்கு வருவாய் இழப்பு! - சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்கு

வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. இவர், தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்குச் சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த எஸ்.எம்.சுந்தரம், கணேசன், சதானந்தன், தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குமரேசன், காட்பாடியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, ஜி.எம்.ஜெகன்நாதன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து வாங்கினர். அந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி ‘வி.ஐ.பி கார்டன்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தனர். இதில், எதிர்பார்த்த அளவுக்கு மனைகள் விற்பனையாகவில்லை.

சேகர்ரெட்டி

இதையடுத்து, விற்பனை ஆகாத 5 ஏக்கர் 27 சென்ட் நிலத்தை ஏழு பங்குதாரர்களும் தலா 75 சென்ட் வீதம் பாகம் பிரித்து தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொண்டனர். இந்த நிலத்தை பவர் ஏஜன்ட் பரசுராமன் என்பவர் மூலம் பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு 2016 டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ஏழு பங்குதாரர்களும் விற்றனர். கையோடு, காட்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்தனர். இங்குதான் உள்ளடி வேலைகள் நடந்திருக்கின்றன. வீட்டுமனைகளாக விற்கப்பட்ட இடத்தை விவசாய நிலமாகக் காட்டி அரசின் நில வழிகாட்டு மதிப்பில் மோசடி செய்திருக்கிறார்கள்.

Also Read: சேகர் ரெட்டி வழக்கு: `சிறப்புப் பரிசு' ரெட்டிக்கா.. அ.தி.மு.க-வுக்கா?

நிலத்தின் உண்மையான மதிப்பு 13,72,14,000 ரூபாய். ஆனால், அவர்கள் வெறும் 2,46,98520 ரூபாய் மதிப்புக்கு நிலத்தை பதிவு செய்தனர். வித்தியாசம் மட்டும் 11,25,15,480 ரூபாய். இதன் மூலம் முத்திரைக் கட்டணம் 78,76,090 ரூபாய் மற்றும் பதிவுக் கட்டணம் 11,25,155 ரூபாய் ஆகியவைச் சேர்த்து மொத்தம் ரூ.90,01,245 தொகையை அரசுக்கு வருவாய் இழப்பாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறார்கள்.

சேகர்ரெட்டி

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், அப்போதைய காட்பாடி சார்பதிவாளரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சார்பதிவாளராகப் பணிபுரிந்து வரும் சம்பத் ‘முதல்’ குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். மோசடிக்கு மூலக்காரணமாக கருதப்படும் தொழிலதிபர் சேகர்ரெட்டி நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர்கள் உள்பட அப்போதைய முத்திரைக் கட்டணப்பிரிவு துணை ஆட்சியரும் தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தருமபுரி மண்டல மேலாளராகப் பணியாற்றிவரும் அப்துல் முனீர், நிலத்தின் பவர் ஏஜன்ட் பரசுராமன் மற்றும் நிலத்தை விற்பனை செய்த பங்குதாரர்கள் 7 பேர் என மொத்தம் 11 பேர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தெளிவான தகவலின் அடிப்படையில், குற்றச்சாட்டப்பட்ட 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சேகர்ரெட்டி உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/shekar-reddy-case-on-revenue-loss-vellore-land-registration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக