வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயலானது கடந்த மே 26ம் தேதி ஒடிசா மேற்கு வங்கத்திற்கு இடையில் கரையை கடந்தது. இதனால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று (28.05.2021), புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி, நேரில் சென்று ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் ஆய்வு நடத்திய மோடி அதன் பிறகு நடத்திய ஆய்வுக் கூட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் விதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு முதலில் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துவிட்டு, அம்மாநில மூத்த நிர்வாகிகளுடன் பாதிப்புகள் குறித்தும், அதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின், ஹெலிகாப்டர் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல், புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், கடுமையாக காயப்பட்டோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிரதமர். இது குறித்து ஆலோசிக்க அன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு திட்டமிட்ட நேரத்திற்கு பிரதமர் மோடி, அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர், அம்மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து அதிகாரி ஆகியோர் கூடிவிட்டனர். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாகவே வந்துள்ளார். வந்தவர் மாநிலத்தில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்த அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு 15 நிமிடங்கள் பிரதமருடன் தனியாக ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் கிளம்பிவிட்டார். இச்சம்பவம் பா.ஜ.க. நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, பங்கேற்காததற்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுவேந்து அதிகாரி வந்ததால் தான் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளவில்லை என்று ஒரு தரப்பினரும், அரசியல் காரணங்களுக்காகத்தான் மம்தா இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார் என்று மற்றொரு தரப்பிலும் விமர்சனம் எழுந்து வருகிறது. மத்திய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மம்தாவின் செயல் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல் மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து அதிகாரி, “மம்தாவைப் போல் எந்தவொரு முதல்வரும் நடந்துகொள்ளவில்லை. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தை சீரமைப்பதற்கான வழி குறித்து சிந்திப்பதை விடுத்து இதில் அரசியல் செய்து வருகிறார். அவரது மரியாதையற்ற போக்கை இது பிரதிபலிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
அதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த அலபன் பாண்டியோபாத்யாவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பணியாளர் பயிற்சி மையத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளனர். அலபன் பந்த்யோபாத்யாய் மந்தாவிற்கு நிர்வாகத்தில் மிகவும் நெருக்கமாக அதிகாரியாகும். ஒருசில தினங்களுக்கு முன்புதான் அவருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் திடீர் பணிமாற்றம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுந்துள்ளது. தேர்தலின்போது மேற்கு வங்கத்தை டார்கெட் பாயிண்ட்டாக வைத்து செயல்பட்ட பா.ஜ.க. மந்தாவை கடுமையாக விமர்சித்ததும், பின்பு தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் வாழ்த்து தெரிவிக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/politics/mamata-banerjee-meets-pm-for-15-mins-over-cyclone-then-skips-larger-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக