Ad

சனி, 29 மே, 2021

கொரோனா மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் புத்தகங்கள் : எப்படி படிக்கலாம், என்னென்ன படிக்கலாம்?!

கொரோனா பெருந்தொற்று மனிதக்குலத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனாவுக்கு முந்தைய ‘இயல்பு’ நிலைக்குத் திரும்பிச் செல்லமுடியாத, ‘புதிய இயல்பில்’ நாம் வாழத் தொடங்கியுள்ளோம். இது நம் வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது... அவற்றில் ஒன்று வாசிப்பு!

பொதுவாக கொரோனாவுக்கு முந்தைய காலத்திலேயே, பெரும்பாலானோரின் வாசிப்புச் செயல்பாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. பணிச்சூழல், நேர நெருக்கடி, கவனச் சிதறல், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற பல காரணங்களால், வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியாத நிலையைப் பலர் ஏற்படுத்திக் கொண்டனர்; ஆழமான வாசிப்பு என்பதே அருகிப் போனது. ஒரு பத்தியைக் கூட முழுமையாக வாசிக்க முடியாத நிலையில் தங்களைக் கண்டவர்கள் திகைத்துப் போயினர்!

Also Read: அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா? - தளங்கள் மாறும் வாசிப்பு!

இந்தப் பின்னணியில்தான் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உலகமே முடங்கிப் போனது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை; விமானங்கள் தரையிறங்கின, ரயில்கள் ஓடவில்லை... போக்குவரத்து நின்றுபோனது. உலகமே வீட்டுக்குள் முடங்கியது. இது நிச்சயமாகக் கொடுமையான சூழல் என்றாலும், ஏராளமான புதிய சாத்தியங்களையும் இந்த முடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை - அவற்றில் ஒன்று வாசிப்பு!

பெருந்தொற்று முடக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க வாசிப்பை முதன்மையான வழிமுறையாக மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் முன்வைக்கின்றனர்.

Representational Image

புத்தகங்கள் மனநலத்துக்கு நன்மை விளைவிப்பவை; இருந்த இடத்திலிருந்தே நம்முடைய உலகை விரிவடையச் செய்து, பல்வேறு உணர்ச்சிகளை வழங்கி நம்மைக் குதூகலிக்கச் செய்யும். எங்கும் நகர முடியாத இந்தப் பொது முடக்கக் காலகட்டத்தில் அதிகம் தேவை வாசிப்புதான் என்று நரம்பியலாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும் வலியுறுத்தினர். சக மனிதர்கள் மீதான பரிவை அதிகரிக்கச் செய்து, சமூக வாழ்வை மேம்படுத்தி எல்லோருடனும் சீரான உறவில் இருக்க வாசிப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தக் காலகட்டத்தின் அவசியத் தேவையும் இதுதான்!

ஊரடங்கு தளர்வுகளின்போது புத்தகக் காட்சிகள் பல நடந்தன; பொருளாதார நலிவு இருந்தபோதிலும், இந்தக் காலகட்டத்தில் புத்தகங்கள் கணிசமாகவே விற்றன. எனினும், ஒட்டுமொத்தமாக வாசிப்பு மேம்படவில்லை என்பதே பொதுவான உண்மையாக வெளிப்பட்டிருக்கிறது.

இப்பிரச்னைகளைக் களைந்து, வாசிப்பில் முழுமையாக ஈடுபட என்ன செய்யலாம்? சில குட்டிக் குட்டி யோசனைகளும், வழிகாட்டல்களும் இங்கே!

reading books

தியானம்: வாசிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 5 முதல் 10 நிமிடங்கள் வரை கண்களை மூடி தியானிக்கலாம். அதற்கு முந்தைய உங்கள் மனவோட்டங்களிலிருந்து விடுபட்டு, மனதை அமைதிப்படுத்தி வாசிப்புக்குள் நுழையலாம்.

சிறியதிலிருந்து தொடங்குங்கள்: எடுத்த உடனேயே நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட நாவல்கள், கதைத் தொகுதிகளுக்குள் நுழைய வேண்டாம். இரண்டு, மூன்று பக்க சிறுகதைகளிலிருந்து வாசிப்பைத் தொடங்கலாம்.

வாசித்தவற்றை வாசியுங்கள்: நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், நிலையில்லாத மனவோட்டங்களோடு புதிதாக ஒன்றை வாசிக்கத் தொடங்க வேண்டாம்; ஏற்கெனவே நீங்கள் வாசித்த, உங்களுக்குப் பிடித்த ஒன்றை மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம்; புதியவற்றை வாசிக்க இதுவொரு பயிற்சியாக, தொடக்கமாக அமையும்.

கைப்பேசியைக் கைவிடுங்கள்: கண்டிப்பாகக் கைப்பேசியை கைக்கு எட்டாத இடத்தில் வைத்துவிட்டு வாசிக்கத் தொடங்குங்கள்; இது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது!

காலை எழுந்தவுடன் படிப்பு: காலை எழுந்தவுடன், அத்தியாவசியப் பணிகளை முடித்துவிட்டு முதலில் வாசிக்கத் தொடங்குங்கள்; காலை புத்துணர்ச்சி வாசிப்பை மேம்படுத்தும்.

ஒன்றை முடிக்கும் முன்பு அடுத்தது: ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கப் போகும் தறுவாயில், இன்னொரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள்.

முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்: ஒரு புத்தகத்துக்குள் உங்களால் நுழையமுடியவில்லை என்றால் சிரமப்பட வேண்டாம், வேறு எளிமையான புத்தகத்தை வாசிக்கலாம்.

தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் இருவர், இந்தக் காலகட்டத்தில் தங்கள் வாசிப்பு குறித்த அனுபவங்களையும், வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலையும் இங்குப் பகிர்ந்துகொள்கின்றனர்.

சாரு நிவேதிதா

“வாசிப்புப் பழக்கம் இல்லாத அத்தனை பேருமே இந்த வீட்டுத் தனிமை காரணமாகப் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சாரு நிவேதிதா

வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டிய இந்தக் கட்டாயச் சூழ்நிலையிலாவது மக்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையத்தின் காரணமாக இன்று வாசிப்பதற்குப் புத்தகங்களே தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. ஒருவர் ஆயுள் முழுக்கவும் ஒரே அறையில் அமர்ந்து படித்தாலும் முடிக்க முடியாத அளவுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இலவசமாக!

ஐந்து புத்தகங்கள் பரிந்துரைக்க வேண்டுமா? 5000 உள்ளன.

தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஆதவன், புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம் என்று தேடிப் பாருங்கள். ஏராளம் கிடைக்கும்.

இது தவிர படிப்பதற்கு என் பரிந்துரைகள்:

* ஒரு யோகியின் சுயசரிதை

* ஏணிப்படிகளில் மாந்தர்கள் (தலைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் இதை எழுதிய சிவா, காஞ்சிபுரம் மஹாபெரியவரின் இளைய சகோதரர். மிக முக்கியமான நூல்)

* நிழலற்ற பெருவெளி - இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். தாஹர் பென் ஜெலோன் எழுதிய நாவல்.

* பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகள் - சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய ஒரு அறிமுக நூல்

* மஹாபாரதம் - முழுத் தொகுப்பு - அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்ப்பு

* இது தவிர ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களுக்கு Aghora: Robert Svoboda

பாவண்ணன்

“கொரோனா காலத்தில் மன உறுதி மெல்ல மெல்லத் தளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்ட நண்பர்களிடம் வாசிப்புப்பழக்கத்தை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ளும்படி சொல்லிவருகிறேன்.

ஏன் வாசிக்கவேண்டும் என்பது முக்கியமான கேள்வி.

வாசிப்பு மன உறுதியை அளிக்கிறது. அச்சம் கலந்த தருணங்களைக் கடந்து செல்ல உதவுகிறது. எழுத்தில் விவரிக்கப்படும் வேறொரு வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவுகிறது. சிக்கல்களின் தன்மைகளைக் கூர்ந்து கவனிக்கவைக்கிறது. பலவிதமான தர்க்க முறைகளை அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. கற்பனை ஆற்றலை அதிகப்படுத்துகிறது. அச்சமின்மையை அளிக்கிறது. ஆற்றலை மேம்படுத்துகிறது. வாசிப்பு என்பது போதை அல்ல, அது உறுதியூட்டும் உண்மை.

பாவண்ணன்

தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை என்பதை ஒரு சங்கட உணர்வுடன் சிலர் சொல்வதைக் கேட்கிறேன். நமக்கு மனத்தைப் பழக்கும் கலையை வீட்டிலோ, பள்ளியிலோ, நட்பு வட்டத்திலோ யாரும் சொல்லித் தருவதில்லை. சாத்தியம் என்னும் உறுதி இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களால் தொடர்ந்து வாசிக்கமுடியும்.

முயற்சி செய்தால் அனைவராலும் வாசிப்பைத் துணையாகக் கொள்ள முடியும். தொடக்கத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்களைக் களைந்துவிட்டால், நாம் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கலாம்.

நான் சமீபத்தில் படித்த ஐந்து புத்தகங்கள்

* யாத்வஷேம் – நேமிசந்திரா – கன்னட நாவல்- தமிழில் கே.நல்லதம்பி.

* மயில்புராணம் – இந்த்ஜார் ஹுசைன் –கன்னடச்சிறுகதைகள் – கே.ஈ.இராதாகிருஷ்ணன் தமிழில் கே.நல்லதம்பி

* விரும்பத்தக்க உடல் – பிரெஞ்சில் உய்பெர் அதாத். தமிழில் சு.ஆ.வெங்கடசுப்பராய நாயகர்

* மிட்டாய் பசி – நாவல் – ஆத்மார்த்தி

* கூடு – சிறுகதைகள் – கலைச்செல்வி

* மொடாக்குடியன் – சிறுகதைகள் – செஞ்சி தமிழினியன்



source https://www.vikatan.com/oddities/literature/books-reduces-mental-stress-during-this-pandemic-age-what-to-read-and-how-to-read

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக