Ad

ஞாயிறு, 30 மே, 2021

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 1,52,734 பேருக்கு தொற்று; 3,128 மரணங்கள்! - மத்திய சுகாதாரத்துறை #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,52,734 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,80,47,534 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,128. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,29,100 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,56,92,342 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 20,26,092 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,38,022 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 21,31,54,129 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

`ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்!’ 

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் வேகம் குறைந்து வருகிறது. என்றாலும் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தற்போதைய ஆயுதம். மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், தடுப்பூசிகளின் தட்டுப்பாடுகள் காரணமாக தடுப்பூசி திட்டம் வேகம் எடுக்கவில்லை. இரண்டாவது டோஸ் போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், முதல் டோஸுக்குக்காக மக்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தடுப்பூசி

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்தில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்துக்கு 7.94 கோடி தடுப்பூசிகள் கிடைத்தன என்றும். ம் இதில் 4.03 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டன என்றும், 3.90 கோடி நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு என்பது, அவர்களின் நுகர்வு முறை, மக்கள் தொகை, வீணாகும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விளக்கத்தையும் வழங்கி இருந்தது.

ஜூன் மாதம் தடுப்பூசி கொள்முதல்:

ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். இதில் 6.09 கோடி தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு செலுத்த முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும். மேலும் 5.86 கோடி தடுப்பசிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/31-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக