Ad

திங்கள், 3 மே, 2021

`அனைத்து வேட்பாளர்களின் டெபாசிட்டும் காலி!’ - ஆத்தூர் ஐ.பெரியசாமியின் கோட்டை ஆனது எப்படி?

கடந்த மாதம் 6ம் தேதி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. கொரோனா காலகட்டம் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது. அதே போல, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read: `வத்தலக்குண்டைத் தொடர்ந்து நிலக்கோட்டை!' -ஐ.பெரியசாமி அசைன்மென்டால் பதறும் அ.தி.மு.க.

ஐ.பெரியசாமி

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தி.மு.க’வின் துணைப் பொதுச்செயலாளரும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளருமான ஐ.பெரியசாமி, 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 568 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவ்வளவு அதிக ஓட்டு வித்தியாசத்தில் தமிழகத்தில் யாரும் வெற்றிபெற்றிருக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், ஐ.பெரியசாமியை எதிர்த்து களம் இறங்கிய அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ம.க’வின் திலகபாமா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்கள் 19ம் பேரும் டெப்பாசிட் கூட பெறவில்லை. பா.ம.க’வின் திலகபாமா 30 ஆயிரத்து, 241 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

ஐ.பெரியசாமி

Also Read: `ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி

ஆத்தூர் ஐ.பெரியசாமியின் கோட்டை ஆனது எப்படி?

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, ஐ.பெரியசாமியின் கோட்டை என்றே கட்சியினரிடம் பேசப்படுகிறது. பா.ம.க’வின் திலகபாமா, பிரசாரத்திற்கு செல்லும் போது, பல கிராமங்களில் அவரை நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தனது சொந்த செலவில் செய்துகொடுக்கக்கூடிய நபராகவும், எளிதில் அணுகி, தங்கள் குறைகளை மக்கள் தெரிவிக்கும் அளவிற்கு எளிமையாகவும் இருப்பதால் மட்டுமே ஐ.பெரியசாமியை ஆத்தூர் தொகுதி மக்கள் இன்றளவும் வெற்றிபெற வைக்கின்றனர். தொகுதியில் உள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனும் பேசி பழகும் ஐ.பெரியசாமி, கட்சி பேதம் இன்றி அவர்கள் வீட்டு சுப, துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் பழகும் தன்மையும், எளிமையாக அணுக முடியும் என்பதும் தொடர்ந்து பெரியசாமிக்கு பெரும் வெற்றியை வழங்கி வருகிறது என்கிறார்கள். .

ஐ.பெரியசாமி

Also Read: ‘ஐ.பெரியசாமி பற்றி யாரும் பேசாத உண்மைகளை நான் பேசுவேன்!’ - ஆத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா

கடந்த 1989ம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் முதன் முறையாக ஐ.பெரியசாமி வெற்றிபெற்றார். 1991ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ஐ.பெரியசாமி, 1996ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றார். மீண்டும் 2001ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2006, 2011, 2016 மற்றும் தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-i-periyasamy-winning-in-big-margin-in-every-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக