Ad

ஞாயிறு, 30 மே, 2021

வரும் கல்வி ஆண்டு முதல் 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடம்... சாதக, பாதகங்கள் என்னென்ன?

பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் நடத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதியளித்துள்ளது. அது வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி ஆகிய எட்டு மொழிகளில் கற்பிக்கவும், அந்த மொழியிலேயே தேர்வுகளை எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே பேசும்போது, ''தொழில்நுட்ப கல்வியைத் தாய் மொழியில் கற்பதன் வாயிலாக, அதன் அடிப்படைகளை மாணவர்கள் நன்கு கற்று தேர்ச்சி அடைய முடியும். எனவே, தமிழ் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில், 11 பிராந்திய மொழிகளுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகம்

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு எட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புகள் தயாராக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் பொறியியல் படிப்புகளை கற்பிக்க விரும்பும் கல்லுாரிகள், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாகவும், மாநிலத்தின் முன்னணி கல்லுாரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கல்லுாரியாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதலாகவே தமிழ் வழியில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. அப்படிப் படிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் 20 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பேசினோம்,

'' பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களே, தமிழ்வழியில் பொறியியல் படிக்க ஆர்வமாக முன்வருவதில்லை. கடந்த கால வரலாறு நமக்கு அதைத்தான் காட்டுகிறது. அண்ணா பல்கலைக் கழக மெயின் கேம்பஸில்கூட, கவுன்சிலிங்போது மற்ற பிரிவுகள் எல்லாம் எடுத்த பிறகு, கடைசியாகத்தான் தமிழ்வழி பிரிவுகள் மாணவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. கடந்த வருடம், ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகத்தான் இருந்தன. அதற்குக் காரணம், இன்றைய போட்டி உலகத்தில், இங்கிலீஷ் கம்யூனிகேஷன் ஸ்கில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. தாய்மொழியில் கல்வி கற்பது மிகவும் நல்ல விஷயம்தான். பாடங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், வேலைவாய்ப்புகளைப் பொறுத்தமட்டில், ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க கம்பெனிகள் முன்வரவேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசாங்கம் கொடுத்தால்தான், மாணவர்களின் கவனம் தமிழ்வழி கல்வியின் மீது திரும்பும்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

தற்போது பொறியியல் மாணவர்கள் படிக்கும் சிலபஸ் 60 சதவிகிதத்துக்கும் மேலாக காலாவதியாகிவிட்டது. அதனால் வெறும் டிகிரியை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைத் பற்றித் தெரிந்துகொள்ள, உலகளாகவிய அளவில் புதுப்புது ஆன் லைன் கோர்ஸ்கள் வந்துவிட்டன. அதையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதெல்லாம் தமிழில் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். தவிர, இனிவரும் காலங்களில், தனியார் நிறுவன வேலைகளுக்கான தேர்வு முறைகள், 60-70 சதவிகிதம் வரை கேம்பஸ் இன்டர்வியூவ் மூலமாக இல்லாமல் போட்டித் தேர்வுகளின் வாயிலாகவே நடக்கப் போகிறது. அது அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் தனியார் நிறுவனங்கள் நடத்துமா அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் கொடுக்குமா?

முதுநிலை பொறியியல் படிப்புக்கும் மத்திய அரசின் அரசு வேலைகளுக்கும் கேட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதையும், பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறதா, அதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்க முடியுமா?...மத்திய அரசும் மாநில அரசுகளும் இதற்கான உத்தரவாதங்களை எல்லாம் தந்தால் நிச்சயமாக மாணவர்களும் ஆர்வமாக தங்கள் தாய்மொழிகளில் படிக்க முன்வருவார்கள்'' என்கிறார் அவர்.

வினோத்

அடுத்ததாக இந்த அறிவிப்பு குறித்து, ஐ.டி ஊழியரும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர் சங்கத்தின் தலைவருமான வினோத் பேசும்போது,

'' அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இந்த அறிவிப்பை நான் முழுவதுமாக வரவேற்கிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் இருக்கின்றன. தற்போது அனைத்துப் பாடப்பிரிவுகளும் வரவிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. தவிர, மாநிலத்தின் தனிப்பட்ட முயற்சியால் தாய்மொழியில் இருப்பதற்கும், தற்போது ஏ.ஐ.சி.டி.இ யே அதை நேரடியாகக் கொண்டு வருவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கும். தற்போது, ஆங்கில வழியில் பொறியியல் சிலபஸ் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகளில் தமிழில்தான் பாடம் நடத்தப்படுகிறது. காரணம், தாய்மொழியில் படிக்கும்போதுதான் மாணவர்களுக்கு எளிதில் புரியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மொழி ஆங்கிலமாக இருப்பதால் மட்டுமே ஆங்கிலம் தேவைப்படுகிறது. அதாவது, வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read: ‘கூண்டு எலி’களான பொறியியல் மாணவர்கள்! - மீட்சிக்கு என்ன வழி?

ஏன்...ஐ.டி நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் நாங்கள் உரையாடும்போது, அனைவரும் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால், தமிழில்தான் பேசிக்கொள்வோம். காரணம், தாய்மொழியில் உரையாடும்போது எங்களுக்கு தொழில்நுட்பம் குறித்து இன்னும் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. கிரியேட்டிவ்வாக யோசிக்க முடிகிறது. வேலைகளை மிக வேகமாக செய்து முடிக்க அது உதவுகிறது. ஆனால், மக்கள் மனநிலையில் ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அது ஒரு மாயபிம்பம்தான். கான்செப்ட்தான் முக்கியமே தவிர மொழி என்பது கம்யூனிகேஷனுக்காக மட்டும்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்கள் தமிழ்வழியில் வருவது எதிர்காலத்துக்கு நல்லது. அதுதான் பரந்துபட்ட பெரிய அளவிலான மக்கள் திரளுக்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார் அவர்.

பொறியியல் மாணவர்கள்

பொறியியல் கல்லூரி உதவிப்பேராசியர் ஒருவர் பேசும்போது,

'' கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், தமிழ்வழியில் பாடங்கள் இருந்தால் நாங்களும் பொறியியல் படிப்போம் எனக் கூறியதாகவும் அதனாலேயே பிராந்திய மொழிகளில் கொண்டு வரப்படுவதாகவும் பார்த்தேன். இது மிகவும் நல்ல விஷயம்தான். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படிப்பதற்கும் விஞ்ஞானிகளாக பலர் உருவெடுப்பதற்கு இது உதவும். ஏற்கெனவே, தமிழ்நாட்டில், மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ் வழியில் இருந்தாலும் ஒரு சில அரசுக் கல்லூரிகளில் மட்டும்தான் அந்த வசதி இருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் அனைத்துக் கல்லூரிகளிலும் வந்தால் மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் பொறியியல் படிப்புகள் சேருவார்கள். தமிழ் வழியில் அவர்கள் பாடங்களைப் படித்தாலும் கம்யூனிகேஷனுக்காக ஆங்கிலம் தேவையாக இருக்கிறது. அதனால், கல்லூரிகள் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

தமிழகத்தில் ஈரோடு செங்குந்தர் கல்லூரியும், கோயம்புத்தூர் ரத்தினம் பொறியியல் கல்லூரியும் விண்ணபித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை கற்பிக்க விரும்பும் கல்லுாரிகள், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாகவும், மாநிலத்தின் முன்னணி கல்லுாரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கல்லுாரியாகவும் இருக்க வேண்டும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன. அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்.பி.ஏ அங்கீகாரம் பெறாத கல்லூரிகள்தான். எனில் இந்த அறிவிப்பு வந்தும் பெரிய பயனில்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/education/engineering-subject-in-tamil-from-the-coming-academic-year-what-are-the-pros-and-cons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக