Ad

ஞாயிறு, 30 மே, 2021

புத்தம் புது காலை : புகைப்பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் என எல்லோருக்கும் தெரியும்… ஆனால்?!

"மனிதர்களில் இரண்டே வகைதான்... ஒன்று சிகரெட் பிடிப்பவர், இன்னொன்று சிகரெட் பிடிக்காதவர்!" என்கிறார் எழுத்தாளர் சுஜாதா."புகைப்பதை விடுவது மிகவும் எளிது... நான் இதுவரை, ஆயிரம் முறை புகைப்பதை நிறுத்தியிருக்கிறேன்" என்று தனது தோல்வியை நகைச்சுவையாக சொல்கிறார், பிரபல அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வெய்ன்!


நமது நாட்டுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே பொதுவான பிரச்னைகளில் முக்கியமான ஒன்று புகைபிடித்தல். 2016-17ம் ஆண்டு செய்யப்பட்ட Global Adult Tobacco Surveyயின்படி, இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் 10 கோடிக்கும் மேல். உலகளவில் ஒன்றரை பில்லியன். இந்த எண்ணிக்கை தற்போதைய சூழலில் இன்னும் அதிகம் கூடியிருக்கும்.

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள், புகைப்பழக்கம் உள்ளவர்களிடையே இன்னும் தீவிரமடைந்து, ஐசியூ, வென்ட்டிலேட்டர், ஏன் மரணம் வரை அவர்களை அழைத்துச் செல்கிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு.

"இருக்குற டென்ஷன்ல இதுவேறயா..." என்று தங்களது புகைப்பழக்கத்தை உடனடியாக கைவிட எண்ணியவர்களின் எண்ணிக்கை மட்டும் மில்லியன்களைத் தாண்டியுள்ளது. என்றாலும், உடனடியாக புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறும் மருத்துவ அறிவியல், அது ஏனென்றும் கூறுகிறது.


காய்ந்த புகையிலைகளில் உள்ள நிகோடின், நிகோடினிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற தாவர எண்ணெய்களில், சக்திவாய்ந்த தாவர எண்ணெயான நிகோடின், உட்கொண்ட பத்து வினாடிக்குள் மூளையிலுள்ள நரம்பூக்கிகளான டோப்பமைன்களை ஊக்கப்படுத்தி தற்காலிக உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் போதையை ஏற்படுத்துகிறது.

டோபமைன்கள் மட்டுமன்றி பீட்டா எண்டார்ஃபின்களையும், இது ஊக்கப்படுத்துவதால் மன அழுத்தம் மற்றும் வலியைக் குறைப்பதுடன், உற்சாகத்திற்குத் தேவையான ஆற்றலை, அட்ரீனல் சுரப்பிகள் மூலமாக இரத்த ஓட்டத்தை அதிகரித்தும், சர்க்கரை அளவைக் கூட்டியும் சமன்படுத்துகிறது நிகோடின். ஆக, ஒரேசமயத்தில் மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும் இந்த நிகோடின் ஏற்படுத்தி கிட்டத்தட்ட கோக்கெயின், ஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு சமமாக வேலை செய்வதால், புகைப்பழக்கத்தைக் கைவிடுவது அவ்வளவு எளிதல்ல என்கிறது அறிவியல்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு புகைப்பது நல்லதுதான் போலிருக்கிறது என்று தோன்றினாலும், இந்தப் புகையிலை புகைக்கப்படும்போது இதன் நிகோடினிலிருந்து உண்டாகும் கோ-நிகோடின், பைரிடீன், கார்பன் மோனாக்சைட் போன்ற ரசாயனப் பொருட்கள் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

புகையிலைகளைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 4000த்திற்கும் மேலான ரசாயனப் பொருட்களும், நூற்றுக்கணக்கான நச்சுப்பொருட்களும் உண்மையில் மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம், நுரையீரல் நோய்கள், அல்சர், ஆகியவற்றையும் முக்கியமாக நுரையீரல், இரைப்பை, கணயம் உள்ளிட்ட அனைத்துப் புற்றுநோய்களுக்கும் காரணமாக அமைகிறது என்பது தான் வேதனை.

நான்கு வினாடிக்கு ஒரு மரணம் என்ற அளவில், வருடத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களை உலகெங்கும் பலிகொள்கிறது புகையிலை. இதில் பாசிவ் ஸ்மோக்கிங் என பெண்களையும், உதிரும் சாம்பல் மற்றும் வீடுகளில் படியும் புகை மூலமாக குழந்தைகளையும் என வருடத்திற்கு, பத்து லட்சம் புகைக்காதவர்களையும் கொன்று தீர்க்கிறது. இதில் கொரோனாவும் சேர்ந்து புகைப்பவர்களை அதிகம் கொன்று குவிக்க, புகைப்பழக்கத்தை கைவிடும் வழிமுறைகள் மிகவும் அவசியமான ஒன்றாக இப்போது கருதப்படுகிறது.

ஒரு தேதியைக் குறித்துக் கொண்டு, cold turkey எனும் ஒரேநாளில் புகைப்பழக்கத்தை நிறுத்துவது, அல்லது tap tapering என படிப்படியாகக் குறைத்து, பிறகு நிறுத்துவது என இரண்டு வழிமுறைகளுமே ஏற்புடையது.


புகையிலைக்கான மாற்றாக உலர் திராட்சை, கிராம்பு, ஏலக்காய் அல்லது Nicotine Replacement Therapy எனும் குறைந்த அளவு நிகோடின் கொண்ட சூயிங்கம் அல்லது மிட்டாய்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்துவதுடன், மெடிட்டேஷன், மியூசிக், மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்வது மனதை ஒருநிலைப்படுத்த இதில் உதவுகிறது.


அனைத்திற்கும் மேலாக, 'Reward Yourself'. அதாவது புகைப்பழக்கத்தை நிறுத்திய ஒரு வாரம், ஒரு மாதம் என குடும்பத்துடன், நண்பர்களுடன் கொண்டாடுவது இன்னும் அதிகம் பயனளிக்கிறது என்று கூறும் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு புகைப்பழக்கத்தை நிறுத்த முனைப்புடன் செயல்பட்ட நாடுகளை, இந்த உலக புகையிலை எதிர்ப்பு நாளன்று கௌரவப்படுத்த உள்ளது.

இந்த வழிமுறைகளை நாமும் கடைபிடித்து, நமது நண்பர்களை புகைப்பழக்கத்திலிருந்து மீட்கலாமே என்று தோன்றுகிறதல்லவா?

ஆம்... Quitters are Winners!



source https://www.vikatan.com/health/healthy/people-know-smoking-causes-cancer-but-why-they-are-not-quitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக