Ad

சனி, 29 மே, 2021

`மாடியிலும் காடு வளர்க்கலாம்!' - வழிகாட்டும் பசுமை விகடனின் ஆன்லைன் நிகழ்ச்சி

கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஆக்சிஜன் முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆக்சிஜனுக்காக மக்களும், அரசும் அலையும் இக்கட்டான சூழல் நிலவியுள்ளது. இந்தக் கொடும் தொற்றிலிருந்து மனிதக் குலம் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இயற்கையிலேயே விலையில்லா ஆக்சிஜனை நமக்கு வழங்கி வருகின்றன தாவரங்கள். மனிதக் குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் வரம் தான் தாவரம். அதன் சிறப்பை மறந்து, மரங்களைக் காடுகளை அழித்ததன் விளைவு பல்வேறு சூழல்கேடுகளை அனுபவித்து வருகிறோம்.

காடு

நாம் செய்த தவறுக்கு பிராய்சித்தம் செய்தாக வேண்டும் அல்லவா? அதற்கு ஒரு வழியைச் சொல்கிறது தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். நாம் அழித்த காடுகளை நாமே உருவாக்கலாம். அதற்கு ஏக்கர் கணக்கான நிலங்கள் தேவையில்லை. ஒரு சென்ட் இடம் இருந்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா வீட்டு மொட்டைமாடியில் கூடக் காடு வளர்க்கலாம் என்கிறார் வனக்கல்லூரியின் மரச்சாகுபடி துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர். பாலசுப்பிரமணியன்.

இது தொடர்பாகப் பேசியவர், ``அடர் வனத்துக்குள் போகும் உணர்வை நாம் நகரிலேயே உணர முடியும். அதற்கு உதவுகின்றன அடர் கவின் காடுகள். இந்த முறையில் வழக்கமான வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் இல்லாமல் காடுகளில் இருக்கும் பல்வேறு விதமான மரங்களை வளர்க்கலாம். நம்மிடம் இருக்கும் இடவசதிக்கு ஏற்ப அடர் கவின் காடுகளை உருவாக்க முடியும். ஒரு ஏக்கர் நிலமாக இருந்தால் அதனை முற்றிலும் வனமாகவே மாற்ற முடியும். அங்குப் பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்கலாம். ஊர்வன, பறப்பன, சிறு பூச்சி இனங்கள், வண்ணத்துப்பூச்சிகள் எனச் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான உயிர்களுக்கான உறைவிடமாக மாற்றலாம். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நம்மால் ஆன பங்களிப்பைச் செய்ய முடியும். ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி நிர்வாகங்கள் மூலமாகக் காலி இடங்களில் அடர் கவின் காடுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யலாம். மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

பாலசுப்பிரமணியன்

காலி இடங்கள், வீட்டு மொட்டை மாடிகள் என எங்கு வேண்டுமானாலும் காடுகளை உருவாக்கலாம். பொதுவாக மொட்டை மாடியில் மரங்கள் வளர்த்தால் வேர், கட்டடத்தைப் பாதிக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், வேர் கட்டடத்தில் இறங்காமல் மரங்களை மாடியில் வளர்க்கலாம். அதற்குச் சில தொழில்நுட்பங்கள் இருக்கின்றன'' என்றார்.

தரிசு நிலங்களில், காலி இடங்களில், தொழிற்சாலைகளில், பள்ளி, கல்லூரிகளில், பொது நிறுவனங்களில் அடர் கவின் காடுகளை உருவாக்க விரும்புபவர்களுக்காக, இணைய வழி கருத்தரங்கு ஒன்றை `வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் `சோலைவனம் நாற்றங்கால்' அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன். மே 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 வரை இந்தக் கருத்தரங்கு நடைபெறும்.

ஆன்லைன் கருத்தரங்கு

இதில் முனைவர். பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு அடர் கவின் காடு வளர்க்கும் முறைகள், அதற்கான தொழில்நுட்பங்கள், அதில் வளர்க்க வேண்டிய மரங்கள்குறித்து கலந்துரையாட இருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பலன் பெறலாமென அழைக்கிறது பசுமை விகடன். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பை அழுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

https://bit.ly/3wv4Xob



source https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-webinar-on-how-can-we-build-mini-forests

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக