Ad

வியாழன், 27 மே, 2021

மகாராஷ்டிரா: `பாதிப்பு குறைந்திருக்கிறது; ஆனால் கட்டுப்பாடுகள் தொடரும்!’ - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த மாதம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்திருக்கிறது. அதேசமயம் பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதை அரசு தடை செய்துள்ளது. அதோடு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை மீண்டும் தொடருவதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அதோடு இது குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய சாலைகள்

இது தொடர்பாக முதல்வர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை தேவையாக இருக்கிறது. சில நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். 15 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. கருப்பு பூஞ்சையும் வேகமாக பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் அச்சுறுத்தல் இருக்கிறது. இப்போது கொரோனா தொற்று பரவல் விகிதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்த எண்ணிக்கைக்கு வந்துள்ளது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், ``தொற்று குறைவாக இருக்கும் பகுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். 21 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. எனவேதான் கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியாக இருக்காது என்று அமைச்சரவை கருதுகிறது” என்று தெரிவித்தார். மும்பையில் புறநகர் ரயிலில் மாநகராட்சி ஊழியர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலும் தற்போதைக்கு எந்த வித மாற்றமும் செய்யப்படாது என்றும் தோபே தெரிவித்தார்.

மும்பை ரயில்

புறநகர் ரயிலில் வங்கி ஊழியர்கள் கூட பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அதிகமான வங்கி கிளைகள் சொற்ப ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்து செல்லும் டப்பாவாலாக்களும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து பிற கடைகளையும் திறக்க அனுமதிக்கவேண்டும் என்று கடை உரிமையாளர்கள், ஷாப்பிங் மால் உரிமையாளர்கள் மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.



source https://www.vikatan.com/news/india/existing-restrictions-in-maharashtra-will-continue-after-june-1-uttav-thackeray

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக