ஜகமே தந்திரம் - Movie - Netflix - ஜூன் 18
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம், 'ஜகமே தந்திரம்'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். தவிர, கலையரசன், மலையாள சினிமாவின் சென்சேஷனான ஜோஜு ஜார்ஜ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட பல சீரிஸ்களிலும் படங்களிலும் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சுருளி எனும் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார், தனுஷ். சந்தோஷ் நாராயணன் இசை, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். லண்டனில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. தியேட்டரில்தான் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. ஜூன் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தனுஷ் படம் இது.
Loki - Series - Disney+ Hotstar - ஜூன் 9
'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' என்னும் பிரமாண்டத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். பல சூப்பர்ஹீரோக்கள் இணைந்து பாதி உலகை அழித்த தானோஸை வென்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்கும் கதை. அதில் சூப்பர்ஹீரோக்கள் ஒரு மிஷனுக்காக இறந்த காலம் செல்லும்போது தவறுதலாகக் குற்றவாளியான லோக்கி எனும் கடவுள் தப்பிக்க வழி ஏற்படுத்தி விடுகிறார்கள். செல்லும் இடமெல்லாம் குழப்பம் விளைவிக்கும் லோக்கியின் இந்த வெர்ஷன், எந்தக் காலத்துக்கும் பொருந்தாத ஒரு பிழை என்பதால் அவரை கூட்டிச் செல்கிறது கால மாறுபாடுகளைக் கண்காணிக்கும் ஓர் அதிகார அமைப்பு. லோக்கிக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டுதான். ஒன்று, கால ஓட்டத்தில் இடம்பெறாமல் யாரையும் சீண்டாமல் தனிமையில் வாழ்வைக் கழிக்கவேண்டும். இல்லையென்றால், அதிகாரிகளுடன் இணைந்து புதிதாக உருவாகும் நேரச் சிக்கல்களைச் சரி செய்ய உதவவேண்டும். இதில் குழப்பத்துக்குப் பெயர்போன லோக்கி செய்யும் சாகசங்கள்தான் கதை.
ஏற்கெனவே மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சீரிஸ்களாக 'வாண்டாவிஷன்' மற்றும் 'ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர்' வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் 'லோக்கி' மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. மற்ற இரண்டு சீரிஸ்களும் சீரியஸாக நகர்ந்ததால், மார்வெல்லின் டிரேட்மார்க் ஹூயூமர் 'லோக்கி'யில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என நம்புவோம். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் 9 முதல், வாரம் ஒரு எபிசோடாக மொத்தம் 6 எபிசோடுகள் இந்த முதல் சீசனில் வெளியாகின்றன. ஏற்கெனவே இரண்டாவது சீசனுக்கும் க்ரீன்லைட் கொடுத்துவிட்டது டிஸ்னி. லோக்கி எனும் வாத்தி கம்மிங்!
The Family Man Season 2 - Amazon Prime Video - June 4
தேசிய புலனாய்வுத்துறையில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த் திவாரி எப்படி தீவிரவாதிகளைப் பிடிக்கிறார் என்பதுதான் 'தி ஃபேமிலி மேன்' தொடரின் ஒன்லைன். இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னும் அரதப் பழைய அர்ஜூன் - விஜயகாந்த் பாணி தொடர்தான் என்றாலும், தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள், இங்கிருக்கும் சிறுபான்மையினர்களை இந்த அரசும், அது சார்ந்த அரசியல் தொண்டர்களும் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதையும் பட்டவர்த்தனமாகப் பேசியது 'தி ஃபேமிலி மேன்'.
தீவிரவாதிகளோடு வீட்டின் பிரச்னையையும் சரி செய்ய வேண்டிய இமாலய பொறுப்பு ஸ்ரீகாந்த் திவாரிக்கு. சிதையும் இந்தியாவையும், உடையும் குடும்பத்தையும் எப்படி ஒருசேர காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஸ்யமாய் சொன்னது முதல் பாகம். இரண்டாவது பாகத்தில் சமந்தா நடிக்கிறார் என்றதுமே தொடருக்கான மைலேஜ் இன்னும் கூடியது. ஆனால், டிரெய்லர் வெளியான பின்னர், தமிழகத்தில் தொடருக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் ஒருவரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். எது எப்படியோ, ஜூன் நான்காம் தேதி வெளியாகும் இந்த த்ரில்லர் தொடரைப் பார்க்க இந்தியா முழுக்க ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
Black Widow - Movie - Disney+ Hotstar - July 09
அவெஞ்சர்ஸ் எண்டு கேமுக்குப் பிறகு அடுத்தடுத்து என்ன செய்வதென மார்வெல் டீம் செம்ம பிளானிங்குடன் இருந்தது. சில கதாபாத்திரங்களுக்கு வெப் சீரிஸ், சில ஸ்டாண்டு அலோன் படங்கள் என பக்கா ஸ்கெட்ச் அது. ஆனால், நடுவில் வந்த கொரோனா அதில் கதகளி ஆடி வைக்க, பிளாக் விடோ படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம், தள்ளி தள்ளி வரும் ஜூலை மாதம் திரையரங்குகளிலும், ஒடிடியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. 'சிவில் வார்' திரைப்படத்துக்குப் பின்னர் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். பிளாக் விடோ, ரெட் கார்டியன் என ஒரு மாறுபட்ட எமோஷனல் அதிரடி படமாக வெளியாவிருக்கிறது 'பிளாக் விடோ'.
Sherni - Movie - Amazon Prime Video
'நியூட்டன்' இந்திப் படத்தை இயக்கிய அமித் மசுர்கர் இயக்கத்தில் வித்யா பாலன் நடித்திருக்கும் படம், 'ஷெர்னி'. ஒவ்வொரு படத்திலும் தன்னை வெவ்வேறு பரிமாணங்களில் காட்டும் வித்யா பாலன், இதில் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையே நடக்கிற மோதல்தான் படம். ரன்னிங், சேஸிங் என ஆக்ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், வித்யா பாலன்.
இந்தப் படம் ஜூன் மாதம் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இன்னும் எந்த தேதி என்பதை அறிவிக்கவில்லை. சென்ற வருட லாக் டெளனில் வித்யா பாலன் நடித்த 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 'நியூட்டன்' இயக்குநர் என்பதாலும் வித்யா பாலன் என்பதாலும்தான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
Toofaan - Movie - Amazon Prime Video
'ரங் தே பசந்தி', மில்கா சிங் பயோபிக்கான 'பாக் மில்கா பாக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியிருக்கும் இந்திப் படம், 'டூஃபான்'. ஃபரான் அக்தர் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் குத்துச்சண்டை வீரரைப் பற்றியது. மிருணால் தாக்கூர், பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர் இயக்கிய மில்கா சிங் பயோபிக்கிலும் ஃபரான் அக்தார்தான் ஹீரோ. இந்த முறையும் ஸ்போர்ட்ஸ் படத்தை கையிலெடுத்திருக்கின்றனர்.
அக்டோபர் 2020 தியேட்டரில் வெளியாவதாக இருந்த இந்தப் படம், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியாகவில்லை. பின், மே 21-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், சமீபமாக, அந்த ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Tomorrow War - Movie - Amazon Prime Video - July 2
30 வருடங்கள் கழித்த எதிர்காலத்தில் ஏலியன்கள் பூமியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஏலியன்களை வீழ்த்த இறந்த காலத்திலிருந்து (நம் நிகழ் காலம்) ராணுவ வீரர்களை இறக்குமதி செய்கிறார்கள். இந்தப் படை வென்றதா இல்லையா என்பதுதான் ஒன்லைன். 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' புகழ் க்ரிஸ் ப்ரேட், மூத்த நடிகர் ஜே.கே.சிம்மன்ஸ், சாம் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஒரு பெரும்படை நடித்திருக்கிறது.
எதிர்காலத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரு முழு நீள சயின்ஸ் ஃபிக்ஷனாக இருக்கும். பேரமவுன்ட் தயாரிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படம் தியேட்டர் ரிலீஸுக்குத் தயாரான நிலையில், கொரோனா காரணமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் ஜூலை 2-ம் தேதி வெளியாகிறது.
Fear Street Part 1, 2, 3 - Trilogy - Netflix - July 2
நெட்ஃப்ளிக்ஸ் தன் சப்ஸ்கிரைபர்களை தக்கவைத்துக்கொள்ள தன் ஸ்ட்ரீமிங் தளத்திலேயே பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறது. இப்போது அதன் ஒரிஜினல் வெப் சீரிஸ், படங்களைத் தாண்டி முதன்முறையாக ஒரு ட்ரையாலஜி ஈவென்டை நடத்தவிருக்கிறது. அதாவது ஒரு கதையின் அடுத்தடுத்த பாகங்களாக மூன்று படங்கள், அதை ஒவ்வொரு வார இடைவெளியில் வரிசையாக ரிலீஸ் செய்யவிருக்கிறது.
எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டைனின் புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த 'ஃபியர் ஸ்ட்ரீட்' டீனேஜ் பாத்திரங்கள் அதிகமிருக்கும் ஹாரர் சினிமா. முதல் பாகம் 1994, இரண்டாம் பாகம் 1978 மற்றும் மூன்றாம் பாகம் 1666 என மூன்று காலகட்டங்களில் நடக்கிறது. நெட்ஃப்ளிக்ஸின் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடரில் நடித்துப் புகழ்பெற்ற பலர் இதில் நடிக்கின்றனர். முதல் பாகம் ஜூலை 2-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த இரண்டு பாகங்கள் முறையே ஜூலை 9 மற்றும் 16-ல் வெளியாகும். ஹார்ர் ஃபெஸ்ட் வெயிட்டிங்!
Sweet Tooth - Series - Netflix - June 4
இது ஒரு ராபர்ட் டௌனி ஜூனியர் திரைப்படம். அட, மார்வெல் அயர்ன்மேன் ரீபூட்டா என வர வேண்டாம். டிசி காமிக்ஸில் ஹிட் அடித்த 'ஸ்வீட் டூத்' தொடரை வெப் சீரிஸாக தயாரித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியிடுகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர். ஹைப்ரிட் மரங்களைப் போல, ஹைப்ரிட் மனிதர்கள். மனிதன் பாதி மிருகம் பாதியாக உருவாகும் அந்தக் குழந்தைகளை வேட்டையாட மனிதர்கள் துரத்துகிறார்கள்.
குழந்தைப் பருவத்தைக் காட்டிலேயே கழிக்கும் மான் உருவம் கொண்ட சிறுவனான கஸ்ஸுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார். இருவரும் இணைந்து இப்படியான ஹைப்ரிட் மனிதர்களின் வேர்களைத் தேடிச் செல்கிறார்கள். டிரெய்லரிலேயே பெரும் சுவாரஸ்யத்தை உள்ளடக்கி வெளியான இத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
Ray - Series - Netflix - June 25
இந்தியத் திரைப்பட வரலாற்றை சத்யஜித்ரே இல்லாமல் எழுதவே முடியாது. அவரின் படங்களும் கதைகளும் இன்றளவும் மீடியா மற்றும் சினிமா படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக இருக்கின்றன. அவரின் சிறுகதைகளை அடிப்படையாக வைத்து தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஒரு ஆந்தாலஜி சீரிஸைத் தயாரித்திருக்கிறது.
பாலிவுட் மற்றும் பெங்காலி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான மனோஜ் பாஜ்பாய், கஜராஜ் ராவ், கே கே மேனன், ஹர்ஷவர்தன் கபூர், அலி ஃபசல், ஷ்வேதா பாஸு பிரசாத், அனிந்திதா போஸ், பிடிதா பாக் மற்றும் பலர் நடிக்கின்றனர். நான்கு கதைகள் கொண்ட இந்த சீரிஸ், காதல், காமம், துரோகம், உண்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அபிஷேக் சௌபி, ஶ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகியோர் இயக்கியிருக்கும் இந்தத் தொடர் ஜூன் 25-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
The Naked Director - Web Series - Netflix - June 24
நெட்ஃப்ளிக்ஸில் சில தொடர்களை ஹாலில் பார்க்க முடியாது. 18+ வேறு, ஹாலில் பார்க்க முடியாது என்பது வேறு என்பதைப் புரிந்துகொண்டவர்கள் அடுத்து படிக்கலாம். தலைப்புதான் இந்தத் தொடரின் ஒன்லைனும். ஜப்பானிய அடல்ட் பட இயக்குநரான டோரு முரனிஷியின் வாழ்க்கை வரலாற்றை காமெடி கலந்து சொல்கிறது இந்தத் தொடர். ஜப்பானில் அடல்ட் படங்கள், புத்தகங்கள் எவ்வாறு உருவாகின, அவை முரனிஷியின் வருகைக்குப் பின்னர் எப்படி உருமாற்றம் பெற்றன போன்றவற்றை அடுக்கிறது இந்தத் தொடர்.
உயிரோடு இருக்கும் ஒரு அடல்ட் பட இயக்குநரின் பயோபிக் என்பதால், இதில் சர்ச்சைகளும் ஏராளம். கௌரூ குரோக்கி போன்ற முன்னாள் அடல்ட் பட நடிகைகளின் முன் அனுமதி இல்லாமல், அவர்களைப் பற்றி ஏகத்துக்கும் எடுத்திருக்கிறார்கள். தன் பெயரைப் பயன்படுத்தியது தவறு என வழக்குத் தொடுத்திருக்கிறார் கௌரூ. இப்படியான தொடரின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. Strictly 18+
Lisey's Story - Web Series - Apple TV - June 4
இன்னொரு ஸ்டீபன் கிங்கின் நாவல் தொடராக வெளிவர இருக்கிறது. இந்த முறை சைக்காலஜிக்கல் ஹாரர். 2006ம் ஆண்டு கிங் எழுதிய லீஸீ'ஸ் ஸ்டோரி என்னும் நாவல்தான் ஆப்பிள் டிவியில் வரும் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. நாவலாசிரியரான ஸ்காட் லேண்டன் இறந்து போக, அவரின் எழுதி முடிக்கப்படாத புத்தகங்களை அபகரிக்க ஒரு கும்பல் வருகிறது. அதை எப்படிப் பாதுகாக்கிறார் ஸ்காட்டின் மனைவி லீஸீ எனத் தொடர்கிறது கதை.
இன்னொரு உலகம், ஸ்காட்டின் கடந்த கால வாழ்க்கை, லீஸீயைத் துரத்தும் பிரச்னைகள் என த்ரில்லர் பாணியில் நகரும் கதையில் ட்விஸ்டுகளுக்குப் பஞ்சமில்லை. கிங்கின் நாவல்களில் தென்படும், சிறுவயது பிரச்னைகள் இதிலும் தொடர்கின்றன. ஹாரர் ரசிகர்கள் நிச்சயம் இந்தத் தொடரைக் கண்டு ரசிக்கலாம். லீஸீயாக ஜூலியன் மூர் நடித்திருக்கிறார்.
source https://cinema.vikatan.com/web-series/top-ott-releases-to-watch-on-june-and-july
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக