Ad

ஞாயிறு, 30 மே, 2021

கொரோனா தடுப்பில் சிறந்து விளங்குவது யார்? - முஷ்டி முறுக்கும் தி.மு.க - அ.தி.மு.க

கொரோனாவுக்கு எதிரான போரில், கடந்த அ.தி.மு.க அரசு விட்டுச் சென்ற பணியை தி.மு.க அரசு தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரிலே ரேஸ் பாணியில் தொட்டுத் தொடரும் இந்தப் போராட்டப் பணியில், அ.தி.மு.க - தி.மு.க அரசுகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு வாத பிரதிவாதங்களும் பரபரக்கின்றன.

கொரோனா முதல் அலையை அசால்ட்டாக ஊதிதள்ளிய இந்தியா, 2-வது அலையை எதிர்கொள்ள முடியாமல் சிக்கித் திணறிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் ருத்ர தாண்டவம் உச்சம் தொட்டுவருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா 2-வது அலையின் தாக்கம் ஆரம்பமான காலகட்டத்தில் அ.தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தது. அதுவே, தேர்தல் பரபரப்புகள் முடிந்து புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க வந்து சேர்ந்த நேரத்தில், கொரோனா நோய்த்தொற்றின் வேகம் தீவிரமடைய ஆரம்பித்துவிட்டது.

கொரோனா வைரஸ்

இப்படி பெரும் சவாலாக உருவெடுத்துவரும் கொரோனாவுக்கு எதிராக, பதவியேற்ற நாள் முதலே தி.மு.க அரசு போராட ஆரம்பித்துவிட்டாலும்கூட, நாள்தோறும் அதிகரித்துவரும் தொற்றுப் பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை, ஊரடங்கினால் ஏற்படும் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் புதிய அரசை மூச்சு மூட்டவைத்திருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்கொள்வதில் அ.தி.மு.க அரசுக்கும் தி.மு.க அரசுக்கும் இடையிலான ஒப்பீடுகள் குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கில் அதகளப்படுத்தி வருகின்றன.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கொரோனாவுக்கு எதிரான போரில், அ.தி.மு.க அரசு கையாண்ட வழிமுறைகளை தற்போதைய தமிழக அரசு கையாளவேண்டும்' என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இந்த நிலையில், அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கும் தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிந்துகொள்ளும் நோக்கில், அ.தி.மு.க செய்திதொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்....

''அ.தி.மு.க ஆட்சியில், வீடு வீடாக பரிசோதனை செய்து, லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து பள்ளி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தினோம். இப்படி நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவிட்டதால், நோய்த் தொற்றின் தீவிரத்தை பெருமளவு தடுக்க முடிந்தது.

ஆனால், தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. ஏனெனில், பல அறைகள் கொண்ட வீடுகளில் வாழ்பவர்களாக இருப்பவர்களின் சதவிகிதம் மிக மிகக்குறைவு. பெரும்பான்மையான குடும்பங்கள் ஹால், சமையல் அறை என 2 அறைகளில்தான் வாழ்க்கை நடத்திவருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட நபர் எப்படி தனிமைப்படுத்திக்கொள்ள முடியும்? எனவே, குடும்பத்திலுள்ள ஒரு நபரிடமிருந்து, அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று பரவுவதுதான் வாடிக்கையாகிவருகிறது.

கோவை செல்வராஜ்

அடுத்ததாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீதி தோறும் கிருமி நாசினி தெளித்தோம். வீடு தோறும் கபசுர குடிநீர் விநியோகம், சித்த மருந்துகள் மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. இது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் குறிப்பிட்ட பங்குவகித்தது. இப்போது அந்த நடைமுறையும் இல்லை.

மருத்துவமனையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருப்பவருக்கு உதவியாக ஒரு நபரை இப்போது அனுமதிக்கிறார்கள். தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவரை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை வழங்கவேண்டும். மாறாக நோய்த்தொற்று இல்லாத நபரை உடன் இருக்கச்சொல்லி அனுமதித்தால், நிச்சயம் அவருக்கு நோய்த்தொற்றுதானே ஏற்படும்? ஏனெனில், நோயுற்றவரின் மூச்சுக்காற்றினால் 30 அடி தூரம்வரை உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆக, அரசியலுக்காக இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனாவை ஒழிக்கும் முயற்சியாக தற்போதைய முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்தான். ஆனால், அதிகாரிகளும் அதேயளவு அக்கறையை செலுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் நோயைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் தீவிரம், கோயம்புத்தூரில் இருப்பது இல்லை. எனவேதான் கோவையில், தொற்றுப்பரவல் விகிதம் அதீதமாகியிருக்கிறது. சென்னையில், மாநகராட்சியே வீடுதோறும் காய்கறி விநியோகம் செய்கிறது. நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களை கார் ஆம்புலன்சில் அழைத்துச் செல்கிறார்கள். இதே கவனிப்பு மற்ற மாவட்டங்களிலும் வேண்டும்.

கோவையில் இப்போதுகூட 35 ஆயிரம்பேர் வரை வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள். 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சென்னையில், பாதிப்பு 2,720 என்ற அளவில் இருக்கும்போது, 33 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கோவையிலோ அதிகபட்சமாக 4,722 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, ''அ.தி.மு.க அரசு, ஆட்சியை விட்டுச்செல்லும்போது நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு என்பது தமிழ்நாடு முழுக்க 26 ஆயிரம் பேர்களாக இருந்தது. தற்போது இது 37 ஆயிரம் என்ற எண்ணிக்கை வரையிலாக உயர்ந்தது. ஆனால், தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக இன்றைய தினம் தினசரி பாதிப்பு 33 ஆயிரமாக குறைந்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகு, கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பது குறித்த எந்தவித நடவடிக்கையையும் முந்தைய அ.தி.மு.க அரசு எடுக்காமல் விட்டுவிட்டதன் வெளிப்பாடே இன்றைய மோசமான நிலைக்கு அடிப்படைக் காரணம். தேர்தல் முடிந்தபிறகும்கூட அன்றைய முதல்வர் சேலத்திலேயே தங்கிவிட்டார். வாக்கு எண்ணிக்கை வரையிலான இடைப்பட்ட அந்த ஒரு மாத காலத்தில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Also Read: நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!

மக்களின் மரண ஓலத்துக்கு இடையிலேதான் புதிதாக தி.மு.க அரசு பதவியேற்றது. ஆனால், கடந்த 15 நாட்களிலேயே தி.மு.க அரசின் தொய்வில்லாத பணிகளால் மக்களின் மரண ஓலம் கணிசமான அளவில் குறைந்திருப்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.

கடந்த ஆட்சியில், வீடு வீடாக பரிசோதனை செய்தோம் என்று சொல்கிறார்கள். சரிதான்.... ஆனால், அன்றைய தினசரி பாதிப்பு என்பது வெறும் 1,500 ஆக இருந்தது. ஆட்சியைவிட்டுச் செல்லும்போது 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் நோய்த்தொற்றை உயர்த்திவிட்டு அல்லவா சென்றிருக்கிறார்கள். நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறுமனே அட்மிஷன் மட்டும் போட்டுக்கொண்டிருந்தது அ.தி.மு.க ஆட்சி. ஆனால், நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அட்மிஷன் போடுவதோடு, ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்புகிற வேலையும் சேர்ந்துவிட்டதே...

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

நோயின் தாக்கம் உச்சம் தொட்டுவந்த வேளையிலும் தி.மு.க அரசு கையாண்ட விதத்தினால், பெருமளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால், கங்கையில் பிணங்கள் மிதந்ததுபோல் அல்லது டெல்லி சாலைகளிலேயே பிணங்கள் எரிக்கப்பட்டதுபோல் வடமாநிலங்களுக்கு இணையாக தமிழகமும் பாதிப்பை சந்தித்திருக்கும்.

உதாரணமாக அ.தி.மு.க ஆட்சியில் தினந்தோறும் 1 லட்சத்து 2 ஆயிரம் டெஸ்ட்டுகள்தான் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தினமும் 1 லட்சத்து 70 ஆயிரம் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதேபோல், தடுப்பூசிகளை வீணடித்ததில் தமிழ்நாடுதான் அன்றைக்கு முதல் இடத்தில் இருந்தது. அதாவது பயன்படுத்தாத தடுப்பூசி மருந்தின் எண்ணிக்கை 6 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அதை 1 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியை விட்டுச்செல்லும்போது தமிழ்நாட்டில் தினசரி ஆக்ஸிஜன் தேவையென்பது 220 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. தற்போது அது 610 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தேவையை பல்வேறு வழிகளில் திறம்பட பணியாற்றி பூர்த்தி செய்துவருகிறோம். அதனால்தான் 'ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை செய்துதருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக' ஐ.சி.எம்.ஆர் புள்ளிவிவரம் சொல்கிறது.

Also Read: புதுக்கோட்டை: 'சொந்த செலவில் 12 செவிலியர்கள் நியமனம்;அசத்தும் எம்.எல்.ஏ முத்துராஜா!'

அடுத்து, தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோவை மாவட்டத்தில் அதிக நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதுபோல ஒரு நிலையை செயற்கையாக உருவாக்க அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும் முயற்சி செய்துவருகிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்களது ஆட்சிக் காலத்திலேயே சென்னைக்கு அடுத்த நிலையில் அதிக பாதிப்பு கொண்ட மாவட்டமாக கோவைதான் இருந்தது. அதிலும்கூட, தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறித்து உண்மையான தகவல்களை வெளியிடவிடாமல் அன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளை மிரட்டினார் என்பது குறித்த செய்திகள் எல்லாம் அப்போதே வெளிவந்தன. ஆனால், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டது, 'உண்மை நிலவரம் என்னவோ அதை மறைக்காமல் உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லுங்கள்' என்பதுதான். மேலும் கோவை மாவட்டத்துக்கு நேரடியாக முதல்வரே விசிட் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்திவருகிறார்.

கொரோனா பாதிப்பு

கடந்த ஆட்சியில், எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் முழு ஊரடங்கு அறிவித்தார்கள். ஆனால், இன்றைக்கு குடும்பத் தேவைக்கு 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, ஊரடங்கில் வீடு தோறும் காய்கறி விநியோகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அரசின் வருமானத்துக்காக டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைக்காமல், மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளை மூடிவைத்திருக்கிறோம்'' என்கிறார் விளக்கமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-corona-prevention-who-is-the-best-dmk-vs-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக