Ad

திங்கள், 31 மே, 2021

கரூர்: `டி.என்.பி.எல் ஆலையில் 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்!' - திறந்து வைத்தார் முதல்வர்

கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய கூடத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கையில் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் செந்தில் பாலாஜி

Also Read: நாமக்கல்: "அலட்சியமாக போன் இணைப்பைத் துண்டித்தார்" -ஆணையரைக் குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரூர் புகளூரில் இயங்கி வரும் டி.என்.பி.எல் ஆலையில், ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தார். இந்த நிலையில், இன்று அந்த கொரோனா சிறப்பு மையத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா சிறப்பு மையத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும், 48 ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

நாளொன்றுக்கு, 200 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 6 மருத்துவர்கள் தலைமையில் ஒரு செவிலியர் கண்காணிப்பாளர், 10 செவிலியர்கள், 4 சுகாதாரத் துறை பணியாளர்கள், 4 தூய்மைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளர், மற்றும் 3 தரவு உள்ளீட்டாளர்கள் என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி வழங்குவதற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 உருளைகள் தயார் நிலையில் பயன்படுத்த வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உள்ள சிறப்புகள் குறித்து பேசிய டி.என்.பி.எல் அதிகாரிகள்,

"தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் 200 படுக்கைகளுடன் இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அனுமதிக்கப்படும் நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவர்களால் முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். எந்த ஒரு நோயாளியும் நேரடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயளிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தால் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி வழங்கப்பட இருக்கிறது.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

தவிர, நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், சக்கர நாற்காலி மற்றும் இதர உபகரணங்கள் பயன்பாட்டிற்கு உள்ளன. நோயாளிகளுக்கு மூன்று வேளையும், நோயின் தன்மைக்கு ஏற்ப சுகாதாரமான மற்றும் தரமான முறையில் உணவு வழங்கப்பட இருக்கிறது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஜெனரேட்டர் வசதியும் மற்றும் குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு, சித்த மருத்துவர்களால் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில், உடனடியாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு, நான்கு 108 அவசரகால ஊர்திகள் பயன்பாட்டிற்கு உள்ளன" என்றார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/mkstalin-open-corona-special-treatment-ward-in-karur-tnpl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக