Ad

சனி, 29 மே, 2021

மதுர் தட்டை | நிம்கி | இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு - ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

நினைத்ததை நினைத்த இடங்களுக்குச் சென்று சாப்பிட முடியாமல் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது ஊரடங்கு. வொர்க் ஃப்ரம் ஹோமில் வீட்டிலிருக்கும்போதுதான் பலருக்கும் விதம் விதமாகச் சாப்பிடத் தோன்றும். வேலைக்கிடையில் வெறுப்பேற்றும் சமையல் யூடியூப் வீடியோ புரோமோக்கள் ஒரு பக்கமும், வாட்ஸ் அப்பிலும் இன்ஸ்டாவிலும் மெனு போட்டோ போட்டு காண்டு ஏற்றும் கூட்டம் இன்னொரு பக்கமுமாக, இந்தச் சூழலை எப்படித்தான் கடப்பது..?

வாரத்தில் ஒருநாள் கொஞ்சம் மெனக்கெட்டு எளிமையான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வு. அதற்குத்தான் இந்த ரெசிப்பீஸ்...

தேவையானவை:

வறுத்த ரவை, வறுத்த மைதா - தலா ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மதுர் தட்டை

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சிறிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து, சின்ன தட்டையாகத் தட்டவும். மீதமிருக்கும் மாவு முழுவதையும் தட்டை வடிவத்துக்குத் தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தட்டைகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சில்லி சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு:

* மெல்லியதாகத் தட்டினால் நன்றாக, கரகரப்பாக இருக்கும்.
* ஒரு மாதம் வரை கெடாது.

தேவையானவை:

மைதா மாவு - 2 கப்
நெய் - கால் கப்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
நெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன் (மேலே தடவ)
சாட் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

நிம்கி

செய்முறை:

தலா ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் நெய்யை ஒரு சிறிய கிண்ணத்தில் குழைத்து வைக்கவும். வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில், மைதா மாவு, நெய், உப்பு, ஓமம் ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து, அதன் மேல் குழைத்து வைத்த மைதா மாவு - நெய் கலவையை பூசவும். பிறகு, பாய் போல உருட்டி துண்டுகள் போடவும்.

துண்டுகளாக்கியதை மீண்டும் உருட்டி சிறு சிறு பூரிகளாகத் தேய்த்து சாட் மசாலாத்தூளை தூவி முக்கோண வடிவத்தில் மடித்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், முக்கோண நிம்கிகளை சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

* நிம்கி உப்பாமல் இருக்க மேலே முள் கரண்டியால் ஓரிரு இடங்களில் துளைகள் போட்டு பின்பு பொரிக்கவும்.
* இதை மாலையில் டீ, ஸ்வீட் சாஸ் அல்லது கொத்தமல்லி சாஸுடன் பரிமாறலாம்.

தேவையானவை:

கொப்பரை தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பால் பவுடர் - ஒரு கப்
பொடித்த சர்க்கரை - முக்கால் கப்
பால் - 6 டீஸ்பூன்
பாதாம் (அ) முந்திரி - அலங்கரிக்க

இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய்த் துருவல், பால் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சிறிது சிறிதாக பால் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பாதாம் அல்லது முந்திரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

தேங்காய்த் துருவலுக்கு பதில் கடைகளில் கிடைக்கும் டெஸிகேடட் கோகனட் தூளும் பயன்படுத்தலாம்.

தேவையானவை:

சோயா சங்க்ஸ் - ஒரு கப்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
ஓமம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
பெரிய வெங்காய விழுது - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

சோயா சங்க்ஸ் பக்கோடா

செய்முறை:

சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்து எடுக்கவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய், தண்ணீர் தவிர, மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்துவிடவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்து எண்ணெயில் சேர்த்து நன்கு வேகவிட்டுப் பொரித்தெடுக்கவும்.



source https://www.vikatan.com/food/recipes/maddur-thattai-coconut-laddu-and-nimki-weekend-special-snacks-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக