Ad

ஞாயிறு, 30 மே, 2021

`ஊரைச் சுற்றி 700 மரக்கன்றுகள்; தொடர் பராமரிப்பு!' - கிராமத்தைப் பசுமையாக்கும் கரூர் இளைஞர்கள்

``மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்'னு சும்மா விழிப்புணர்வு பண்றதோ, மரக்கன்றுகளை வைத்துவிட்டு, அதைத் தண்ணீர் விட்டு வளர்க்காமல் விட்டுவிடுவது என்பதோடு இருந்துவிடக் கூடாதுனு நினைச்சோம். அதனால், வறண்ட எங்க கிராமத்தைப் பசுமையாக்க ஊரைச் சுற்றி 700 மரக்கன்றுகள் வைத்திருக்கிறோம்.

தண்ணீர் பாய்ச்சும்போது...

அதைக் காப்பாற்றி மரமாக்க, மாதத்துக்கு இரண்டு முறை பணத்துக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றி வளர்க்கிறோம். மரங்களை வளர்த்தால், அது மனிதகுலத்தைக் காக்கும்" என்று உற்சாகமாகப் பேசுகிறார்கள், `பசுமைக்குடி' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வ.வேப்பங்குடி. இந்தக் கிராமத்தை உள்ளடக்கிய வரவணை ஊராட்சியில் அனைத்துக் கிராமங்களும் வறட்சி நிறைந்த கிராமங்கள். மழைப் பொழிவு மிகவும் குறைவு. இங்குள்ள நீர்நிலைகள் வறண்டே கிடக்கின்றன. இந்த நிலையில், வ.வேப்பங்குடியைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்பவர், அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றுகிறார். இவர், தனது கிராமத்தைப் பசுமையாக்க, `பசுமைக்குடி' என்னும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். அதில், உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களைக் கொண்டு வரவணை ஊராட்சியில் 700 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அந்த மரக்கன்றுகளுக்குத்தான், கடந்த இரண்டு வருடங்களாக விலைக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்றி வருகிறார்.

இதுகுறித்து, மரக்கன்றுகளுக்கு வாகனம் மூலம் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த `பசுமைக்குடி' அமைப்பைச் சேர்ந்த காளிமுத்துவிடம் பேசினோம்.

காளிமுத்து

``பசுமை மாற்றத்தின் மூலமாக மட்டுமே இந்த உலகை மீட்டெடுக்க முடியும் என்று உணர்ந்து, முடிந்த அளவு பசுமைப்பணிகளை ஆற்றி வருகிறோம். வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களிலெல்லாம் மரக்கன்றுகள், காய்கறி விதை, விதைப்பந்து, பனைவிதை, மரப்போத்துகளை 10 அடி மரமாக வளர்த்து நடுவது, மக்களுக்கு பழவகை மரங்கள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று தொடங்கி அழகு தாவரங்கள் மற்றும் பூச்செடிகள்கூட கொடுத்திருக்கிறோம். `நாங்கள் நட்டு வைத்த மரங்கள் இந்த வெயிலில் காய்ந்துவிடக் கூடாது' என்று இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, இதுவரை நட்ட மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். எங்களோடு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் திலகேஷ்வரன், 1-ம் வகுப்பு படிக்கும் கபில்ராஜ் ஆகியோரும் சமூக இடைவெளியுடன் மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றும் பணியைச் செய்கிறார்கள்.

இதுபோல, பசுமைப்பணியின் மீதான ஆர்வமுள்ள மாணவர்களை, சமூக அக்கறை கொண்ட மாணவர்களை உருவாக்கி எனது ஊர் இன்னும் செழிக்க இது போன்ற மாணவர்கள் வரும்போது அவர்களை ஊக்கப்படுத்த, பள்ளி திறந்ததும் அவர்களுக்கு பரிசளிக்கவும் இருக்கிறோம். இதுவரை, எங்க ஊராட்சியில் மட்டும் 700 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அதற்கு, கடந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் என நான்கு மாதங்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் வாங்கி ஊற்றி பராமரித்தோம். இந்த வருடம் மரக்கன்றுகள் கொஞ்சம் பெரிதாக வளர்ந்துள்ளதால், மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே தண்ணீர் ஊற்றுகிறோம். இங்கு சுத்துப்பட்டில் உள்ள எந்தக் கிராமத்திலும் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. அதனால், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவரிடம் ஒருமுறைக்கு ரூ. 2,500 க்கு தண்ணீர் வாங்கி, டிராக்டரில் கொண்டு வந்து அதை மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகிறோம்.

தண்ணீர் பாய்ச்சும் சிறுவன்

மார்ச் மாதத்தில் இருந்து ஊற்றுகிறோம். வரும் ஜூலை முதல் வாரம் வரை ஊற்ற இருக்கிறோம். தண்ணீர் ஊற்றவே எங்களுக்கு ரூ. 20,000 வரை செலவாகிறது. அந்தத் தொகையை நரேந்திரன்தான் தருகிறார். அதேபோல், இந்த ஆண்டு எங்களது இலக்கு 15,000 மரங்கள். இதற்கு ஏதுவாக இந்த முறை மரங்கள் வளர்த்து நடுவதற்கு நர்சரி உருவாக்க முயன்றோம். ஆனால், அதற்கான சூழல் சரியாக அமையாததால், வெளியே வாங்கித்தான் நட வேண்டும். மரங்கள் காசுகொடுத்து வாங்கி விடலாம். ஆனால், அந்த மரங்களைப் பாதுகாக்க பல தன்னார்வலர்கள் உதவி தேவை.

புவிவெப்பமயமாதல் பிரச்னையில் சிக்கியிருக்கும் இந்தப் பூமியைப் பாதுகாக்க, இது போல ஒவ்வொருவரும் முடிந்த அளவு மரங்களை நடுங்கள். அதை வலியுறுத்த, `குளம் காப்போம், மனித குலம் காப்போம்'ங்கிற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். `நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் வாக்கு பலருக்கும் தெரியும். ஆனால், நாம் வாழும் இந்தப் பூமியில் எவ்வளவு தண்ணீர்தான் உள்ளது. அதில், எவ்வளவு சதவிகிதம் கடல்நீர், மீதமுள்ள தண்ணீரில் எத்தனை சதவிகிதம் நன்னீர், எத்தனை சதவிகிதம் பனிக்கட்டி, எத்தனை சதவிகிதம் சாக்கடை என்று யோசிக்கிறோமா? மக்களுக்கு ஏதோ சொற்ப சதவிகிதம் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், அந்த சொற்ப நீருக்கும் நாம் மழையை மட்டுமே நம்பி இருக்கிறோம். மழை பெற மரம் வேண்டும் என்று புரிய வைக்கதான், நாங்கள் `குளம் காப்போம், மனித குலம் காப்போம்' என்ற முழக்கத்தின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள குளங்களில் மரக்கன்றுகள் நடுகிறோம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம் நூலில் காரியாசான்,

தண்ணீர் பாய்ச்சும் காளிமுத்து

`குளந்தொட்டு கோடு பதித்து வழி சித்து /

உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு /

பாடுபடுங் கிணற் றோடொன்றில் வைம்பாற் /

கடுத்தான் ஏகு சுவர்க்கத் தினிது'

என்ற பாடலின் மூலம் நீர்நிலையின் சிறப்பை விளக்கியுள்ளார். அதாவது, இப்பாடலின் விளக்கம், ஒரு ஏரியை மேற்சொன்ன பாடலில் உள்ள 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்துக்குப் போவான் என்கிறார்.

நம்மால் ஒரு மரம் நடுவதன் மூலம் இப்புவியில் இருக்கும் மக்களின் நீராதாரத்தை மேம்படுத்த முடியும். இந்த நம்பிக்கையில்தான், இந்த மனித குலத்தைக் காக்க நாங்கள், `குளம் காப்போம், மனித குலம் காப்போம்' என்ற முழக்கத்தின் மூலம் குளம்தோறும் மரங்கள் நட்டு பராமரிக்கிறோம்.

அதேபோல், `சாலைதோறும் சோலைகள்' என்ற திட்டத்தின் மூலம் சாலைதோறும் மரங்கள் நடுவது எங்கள் அடுத்த இலக்கு. 200 ஆண்டுகள் முன்பு நடந்து சென்றிருப்போம். அதன் பின்னர், மாடு, குதிரை வண்டிகள் பயணம் பெரிய கௌரவம். நவீன காலத்தில் குளிர்சாதன வசதி கொண்ட வாகனங்கள் எல்லாமே வந்துவிட்டன. ஆனால், கொரோனாவுக்கு முன்னான காலத்தில் என்னதான் சொகுசுப் பயணமாக இருந்தாலும், கானல் நீரை பார்த்துக்கொண்டேதான் பயணிக்க முடிந்தது.

தண்ணீர் பாய்ச்சும் சிறுவன்

இவை எல்லாவற்றிற்கும் தீர்வு என்ன மரங்கள்தானே? ஏன், நாம் சாலைதோறும் மரம் நடக் கூடாது. இயற்கையைப் பாதுகாத்தால், அடுத்த தலைமுறை உயிர் வாழும். அதற்காக, ஊர்கூடி ஊர்கோடியில் மரக்கன்றுகள் நடுவோம். மறக்காமல், அதற்கு தண்ணீர் ஊற்றி, மரமாக்குவோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/environment/karur-youngsters-planted-700-trees-to-increase-their-village-green-cover

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக