மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார் தொகுதியில் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த பவுன்ராஜை, இம்முறை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் செம்பனார்கோயில் ஒன்றிய பெரும் தலைவருமான நிவேதா.எம். முருகன் தோற்கடித்து வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்கு செல்ல இருக்கிறார்.
பவுன்ராஜ், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டு, கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக தொகுதியில் பேச்சு அடிப்பட்டது. அதனால் இம்முறை பணத்தை வாரி வீசியது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல.... விலை போன தி.மு.க.வினருக்கும்தானாம். ஓட்டுக்கு ரூ. 1,000 வீதம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பவுன்ராஜ்தான் வெற்றி பெறுவார் என்ற பேச்சு தொகுதியில் வலம் வந்தது.
ஆனால் அமைதியாக இருந்து, சுனாமி, கஜா போன்ற பேரிடர் காலங்களில் தொகுதி மக்களுக்கு தாராளமாக உதவி செய்த நிவேதா. எம்.முருகன், மக்கள் மனதில் நிற்கவே கடுமையான போட்டிக்கிடையே சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் முருகன்.
இதுபற்றி நிவேதா. எம். முருகனிடம் பேசியபோது, ``தொகுதி மக்கள் அவர்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்து இருக்கிறார்கள். இதனை நான் செவ்வனே செய்வேன். எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நல்லது நடக்க நான் பாடுபடுவேன் என்பதை உறுதி அளிக்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/dmk-won-the-poompuhar-constituency-how-did-you-succeed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக