Ad

வியாழன், 20 மே, 2021

`தினமும் தேவைகள் அதிகமாகிட்டே இருக்கு!' - நெருக்கடிகளைக் கடந்து உதவும் உள்ளங்கள்

ஒவ்வொரு பேரிடர் காலத்திலும் தன்னார்வலர்களின் உதவியால் மனிதம் காக்கப்படுவதுடன், ஆபத்தில் இருக்கும் மக்களும் விரைவாக மீண்டெழுவார்கள். கொரோனா முதல் அலையில் உயிரையும் பொருள்படுத்தாமல் உணவு, மருத்துவ உதவிகள் பலவற்றையும் செய்த தன்னார்வலர்கள், தற்போதைய கொரோனா இரண்டாம் அலையிலும் பெரும் இன்னல்களுக்கு நடுவே மக்களின் தேவையறிந்து உதவி வருகின்றனர்.

வரலாறு காணாத இந்தக் கொடுமையான சூழலில், சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்காமல் மனித உயிர்கள் எதிர்கொள்ளும் துயரம் வேதனையின் உச்சம். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் அத்தகைய மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்து உதவுகின்றனர், சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள். வெவ்வேறு அமைப்புகளையும், குழுக்களையும் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாக இணைந்து, நாள்நோறும் 25 பேருக்கு ஆக்ஸிஜன் வழங்கிவருவதுடன், தினமும் பல நுறு பேருக்கு உணவும் வழங்குகின்றனர். இது குறித்து அந்தக் குழுவைச் சேர்ந்த அறிவரசனிடம் பேசினோம்.

``தனியார் அமைப்பு ஒண்ணுல வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். பேரிடர் காலங்கள்ல மக்களுக்கு உதவுவோம். போன வருஷம் கொரோனா வந்தப்போ பல்வேறு தேவைகளுக்கு உதவினோம். கொரோனா ரெண்டாவது அலையில ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. இந்தச் சிக்கலால் பாதிக்கப்படுற மக்களுக்கு உதவணும்னு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களும் ஒன்றிணைந்தோம். 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட டி வகை ஆக்ஸிஜன் சிலிண்டரை வாங்கி, கொரோனாவால பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு முன்பும் பின்பும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடால அவதிப்பட்ட மக்களுக்கு வீட்டுக்கே கொண்டுபோய் உதவினோம்.

தன்னார்வலர்களின் உதவி

இந்த நிலையில, நிலைமை ரொம்பவே மோசமா இருக்கிற மருத்துவமனைகள்ல எங்களோட பங்களிப்பைக் கொடுக்க நினைச்சோம். போன வாரம் ஓமந்தூரார் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு, பி வகையில ரெண்டு சிலிண்டரைக் கொண்டுபோனோம். படுக்கை வசதி கிடைக்காததால, அடுத்தடுத்து வரும் ஆம்புலன்ஸ் அணிவகுக்க, அதுல இருந்தபடியே கொரோனா பாதிப்பாளர்கள் சிரமப்பட்டாங்க. அப்படியான சிலருக்கு முதல் நாள் உதவினோம். பலரும் எங்ககிட்ட ஆக்ஸிஜன் உதவி கேட்டாங்க. தேவை அதிகரிச்சுகிட்டே இருக்கிறதை உணர்ந்து, அன்னிக்கு இரவே டி வகை பெரிய சிலிண்டர்கள் நிறைய வாங்கினோம். அதைவெச்சு ஏராளமான நோயாளிகளுக்கு உதவ முடிஞ்சது.

ஒருவர் மூலமா வாகன வசதி கிடைச்சது. அதுலதான் தினமும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வர்றோம். கொரோனா பாதிப்பு அதிகமா இருக்கிற பலரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்கள்ல ஏறவே சிரமப்படுறாங்க. படுக்கை கிடைக்காம ஆஸ்பத்திரி வாசல்ல காத்திருக்கும் அந்த பாதிப்பாளர்களோட இடத்துக்கே சிலிண்டரைத் தள்ளிகிட்டே கொண்டுபோய் ஆக்ஸிஜன் சுவாசத்துக்கு உதவுறோம். குறைவான அளவுலயே சிலிண்டர் கிடைக்கிறதால தினமும் சராசரியா 25 பேருக்குத்தான் எங்களால ஆக்ஸிஜன் தேவைக்கு உதவ முடியுது.

தன்னார்வலர்களின் உதவி

அதுக்கே, காலி சிலிண்டர்கள்ல ஆக்ஸிஜன் நிரப்ப தினமும் சென்னை முழுக்க அலையுறோம். தேவை அதிகமா இருக்கிறதால, இன்னும் அதிகமானோருக்கு உதவ தயாரா இருந்தாலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் பெரிய சிக்கலா இருக்குது. தொடர்ந்து ஏழு நாள்களா இதே முறையிலதான் வேலை செய்யுறோம். எங்க டீம்ல பலரும் பிரதிபலன் பார்க்காம இரவு பகலா வேலை செய்றாங்க. அதுல, ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் ஆக்ஸிஜன் ரெகுலேட்டர் வாங்குறது, ஆக்ஸிஜன் நிரப்புறது, உணவு விநியோகம், நிதியுதவி திரட்டுறது, மருத்துவமனையில களத்துல இறங்கி வேலை செய்றதுனு எங்க டீம்லயே பலரும் பல்வேறு குழுக்களா வேலை செய்யுறாங்க. இயன்ற உதவிகள் செய்யுறதோடு, பாசிட்டிவ்வான வார்த்தைகள் சொல்லி கொரோனா பாதிப்பாளர்களுக்கும் அவங்க உறவினர்களுக்கும் நம்பிக்கையும் கொடுக்கிறோம்” என்றார்.

இந்தக் குழுவில் உணவு வழங்கும் பணிகளைச் செய்துவரும் வழக்கறிஞர் சிவகுமாரன், ``சிகிச்சையில இருக்கிறவங்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே உணவு கொடுக்குது. ஆனா, அவங்களோட உறவினர்கள் எல்லோருக்கும் சரிவர உணவு கிடைக்கிறதில்ல. அவங்களைப்போல தேவையுள்ள 500 பேருக்கு மூணு வேளையும் உணவு கொடுக்கிறோம். இந்த உணவு கொடுக்கிறதை ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிகள்ல மட்டும் செய்யுறோம். தவிர, ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு வரும் பாதிப்பாளர்கள்ல ரொம்ப முடியாதவங்களுக்கு மருத்துவர்களோட உதவியுடன் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யுற பணிகளையும் செய்யுறோம்.

தன்னார்வலர்களின் உதவி

Also Read: `யாரும் இங்க பட்டினி கிடக்கக்கூடாது!' - `மதுரை'யின் பசியாற்றும் தன்னார்வலர்கள் #SpreadPositivity

எங்களைப்போல வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இயன்ற உதவிகளைச் செய்யுறாங்க. ஆனா, வருத்தப்படக்கூடிய விஷயம், தேவைகள் அளவுக்கு அதிகமா இருக்குது. பாதிப்பாளர்கள் வந்து குவிஞ்சுகிட்டே இருக்காங்க. அந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க ரொம்பவே வருத்தமா இருக்குது. சூழல் ரொம்ப மோசமா இருக்குது. இதையெல்லாம் கண்கூடப் பார்த்தால்தான், நிலைமையின் தீவிரம் பலருக்கும் புரியும். ஆனா, அந்தச் சூழல் யாருக்கும் வரக்கூடாது. அதனால, எல்லோரும் வீட்டுல பத்திரமாவும் பாதுகாப்பாவும் இருக்கணும்” என்று வேண்டுகோளுடன் முடித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/chennai-volunteers-tirelessly-helps-covid-patients-to-get-oxygen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக