Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

டீமே இல்லாத குஜராத்தில் ஐபிஎல்... கேரவன் ஸ்டைலில் போட்டிகள்... சென்னையில் #IPL2021 நடக்குமா?!

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத்திருவிழாவான 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையைத் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. ஆனால், 2021 ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக இந்தியாவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் 8 அணிகளும், போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் போட்டித்தொடர் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக முழுமையான ஐபிஎல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கைவைத்துள்ளன. இதனால் ஐபிஎல் அட்டவணையை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

ஐந்து நகரங்களில் போட்டிகள்!

கொரோனா சூழலால் தீவிர லாக்டெளனுக்குப் பிறகு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்தொடர் நடைபெற்றுவருகிறது. 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரை பிசிசிஐ மூன்றே இடங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டு வெற்றிகரமாக 3 டெஸ்ட்களை நடத்திமுடித்துவிட்டது. கடைசி டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளும் அஹமதாபாத்திலேயே நடைபெற இருக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெற இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகளுக்கும் இதே ஃபார்முலாவையே பிசிசிஐ பின்பற்ற இருக்கிறது.

ஐபிஎல் கோப்பை

அதாவது வழக்கம்போல ஐபிஎல், 8 அணிகளின் ஹோம் கிரவுண்டுகளில் இந்தமுறை நடக்காது. 2021 ஐபிஎல் போட்டிகளுக்கு ஐந்து நகரங்கள் மட்டுமே இறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதில் மும்பை இல்லை. சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்தமுறை ஐபிஎல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்கு ஹோம் கிரவுண்ட் மேட்ச்கள் இருக்காது எனத்தெரிகிறது. ஆனால், ஐபிஎல் அணியே இல்லாத அஹமதாபாத்தில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகளை நடத்ததிட்டமிட்டிருப்பது மற்ற அணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ப்ளேஆஃப், குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் அஹமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கேரவேன் மாடலில் போட்டிகள்!

ஐபிஎல் 2021 கேரவன் மாடலில் நடத்ததிட்டமிடப்பட்டிருக்கிறது. பயணங்களைக் கூடுமானவரை மட்டும் குறைக்கும் ஏற்பாடு இது. அதாவது இந்தமுறை எட்டு அணிகளும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நான்கு அணிகளும் தொடர்ந்து ஒரே நகரத்தில் விளையாடிவிட்டுப்பின்னர், அடுத்த நகரத்துக்குப் பயணிக்கும். இதன்படி ஒருநாள் சென்னையில் போட்டி நடந்தால் அடுத்த நாள் பெங்களூருவில் போட்டி, அதற்கடுத்த நாள் மீண்டும் சென்னையில் போட்டி என மாறிமாறி நடக்கும்.

ஐபிஎல் தேதி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்ட்போட்டி மார்ச் 8-ம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும் ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ம் தேதியே தேர்தல் முடிவடைவதால் முதல்கட்ட ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும் எனத்தெரிகிறது. 2021 ஐபிஎல் ஏப்ரல் 9 அல்லது 11-ம் தேதி சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் தேர்தல் 8 கட்டங்களாக ஏப்ரல் இறுதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் கொல்கத்தாவில் போட்டிகளை நடத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.

ஐபிஎல்

ஹோம் கிரவுண்ட் இல்லாத அணிகள், பிசிசிஐ-ன் '5 வென்யூ' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ''ஹோம் கிரவுண்ட் அணிகளுக்கே போட்டி முடிவுகள் சாதகமாக இருக்கும். ரசிகர்கள் ஆதரவும் அந்த அணிகளுக்கு மட்டுமே இருக்கும்'' என்று மற்ற அணிகள் தங்கள் கருத்துகளை பிசிசிஐ-க்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன. மும்பையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதால் மும்பையில் போட்டிகள் நடக்காது என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்குப்பின்னடைவாக இருக்கும் என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.



source https://sports.vikatan.com/ipl/caravan-model-ipl-schedule-to-be-announced-soon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக