Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

`அமித் ஷாவுடன் நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை; 2011 -ஐ குறிப்பிடும் தேமுதிக!’ -தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்-இ.பி.ஸ்

தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்-இ.பி.ஸ்!

அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரையில் பா.ம.க-வுக்கான இடம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க 23 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விழுப்புரம் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து நேற்று இரவு அமித் ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே சிங், சி.டி ரவி, எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. நள்ளிரவை தாண்டி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க தரப்பில் சுமார் 30 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் அ.தி.மு.க தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடும் இடங்கள் இன்று உறுதி செய்யப்படலாம் என்ற தகவல் வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்றுமுன்தினம் அ.தி.மு.க அமைச்சர்கள் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தே.மு.தி.க நிர்வாகிகள் பா.ம.க வுக்கு நிகராக தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. முன்னதாக 2011 தேர்தலில் வெற்றிபெற்ற 29 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் தே.மு.தி.க-வுக்கு அத்தனை இடங்களை ஒதுக்க அ.தி.மு.க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இறுதியாவது தொடர்ந்து இழுபறியாகவே காணப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்திய நிலையில், தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டணி: கட்சிகள் தீவிரம்!

அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் விவகாரங்களை இறுதி செய்யும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

தி.மு.க தரப்பில் இதுவரை எந்தகூட்டணி கட்சிகளின் இடமும் இறுதி செய்யப்படவில்லை. எனினும் காங்கிரஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. அதே போன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடனான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/news/tamilnadu-election-2021-and-other-current-updates-01-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக