என் புள்ளைங்களை வளர்த்ததுலயிருந்து, இப்போ அவங்க புள்ளைங்களை வளக்குறதுவரை இந்த 67 வயசுவரை தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். இப்போ என் ஒடம்புக்கு ஓய்வு தேவைப்படுது. ஆனா, என் புள்ளைங்களுக்கு அது புரியுறதில்ல. என்னை அம்மா என்பதைவிட, அவங்க வீட்டு வேலைகளையும், அவங்க பிள்ளைகளையும் பார்த்துக்கிற ஒரு ஆளாதான் வெச்சிருக்காங்கனு, இப்போ எல்லாம் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு.
என் மகள், மருமகள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. இவங்க வீட்டுல ரெண்டு மாசம், அங்க வீட்டுல மூணு மாசம்னு நான் மாறி மாறி இருக்கேன். எங்கே இருக்கேனோ, அங்க வீட்டு வேலைகள், பேரப் புள்ளைங்கனு நான் பார்த்துக்கிறேன்.
மகள் வீட்டுலயிருக்கும்போது, சமையல், வீட்டு வேலை, புள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்ததும் கவனிச்சுக்கிறது, பக்கத்துல டியூஷன் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதுனு எல்லாம் பண்ணுவேன். ஆனா, எனக்கு ஏதாவது உடம்புக்கு முடியாம வந்து, நான் ஒரு நாள், ரெண்டு நாள் படுத்துட்டா, என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகக்கூட என் மகளுக்கு நேரமிருக்காது. மனசும் இருக்காது. ஆபீஸ் விட்டு வரும்போதே, மூட்டுவலி, காய்ச்சல், தலைவலினு மெடிக்கல்ஸ்ல சொல்லிக் கேட்டு, மாத்திரையை வாங்கிட்டு வந்து கொடுக்குறா. அதுலகூட, எனக்கு உடம்பு சரியாகணுமே என்ற அக்கறையைவிட இன்னொரு பெரிய காரணம் இருக்கு. நான் சுணக்கத்தைவிட்டு எழுந்தாதான் அவ வீட்டு வேலை சுணங்காம நடக்கும்ங்கிற சுயநலம்தான்.
மகன் வீட்டுல இருக்கும்போதும் இதே கதை. அங்க மேல் வேலைக்கு ஆள் வெச்சிருக்காங்கங்கிறதால, ஒரு வேலை குறையும் அவ்வளவுதான். ஆனா, உதாசீனம் அதேதான். மகனுக்கும் மருமகளுக்கும், வீட்டு வேலைகள் நடந்துட்டே இருக்கிறவரை என் இருப்பையே உணரமாட்டாங்க. என்கூட பேசக்கூட நேரமிருக்காது. ஏதாச்சும் ஒரு வேலையை செய்யாம விட்டுட்டா,`வாங்கிட்டு வந்த மளிகையை எல்லாம் ஏன் இன்னும் டப்பாவுல ஸ்டோர் பண்ணல?', `பையனுக்கு இன்னும் ஏன் பால் தரலை?'னு நான் செய்யாத வேலைகள் பத்தி விசாரணை பண்ணுறதுதான் அவங்க என்கூடப் பேசுற பேச்சாவே இருக்கு.
பெத்த புள்ளைங்களையே குறை சொல்றேன்னு நினைக்காதீங்க. இங்க பல பெத்தவங்களோட நிலைமை இதுதான். அம்மாவை, அப்பாவை கூடவெச்சிக்கிறோம்ங்கிற பேர்ல, சில புள்ளைங்க அவங்ககிட்ட வேலை வாங்கிட்டுதான் இருக்காங்க.
கிராமத்துல எனக்கு வீடு இருக்கு. பொண்ணுகிட்டயும் பையன்கிட்டயும், `எனக்கு மாசம் ஆளுக்கு 2,500 ரூபாய் கொடுங்க போதும்... நான் ஊருலேயே இருந்துக்கிறேனே. இங்க சிட்டியில பேச்சு தொணைக்குக்கூட எனக்கு ஆளு இல்ல. வீட்டுல இருக்குறவங்களும் என்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க'னு சொல்லியும் கேட்டுப் பார்த்துட்டேன். `பேரன், பேத்திங்க கூட இருக்கணும்னு உனக்குத் தோணலையா?'னு சொல்லி என்னை விடமாட்டேங்கிறாங்க ரெண்டு பேரும்.
உண்மைதான். என் பேரன், பேத்திங்க பேசுறதை, விளையாடுறதை, வளர்றதை பார்த்துட்டு இருக்குறதுதான் எனக்கு இப்போ இருக்குற ஒரே ஆறுதல். ஆனாலும், உட்கார ஓய்வில்லாம ஓடுற இந்த ஓட்டத்துல இருந்து எனக்கு விடுதலை வேணும்னு மனசு கேட்குது.
Also Read: ``வீடு, கார் இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கை அடிமைதான்!" - தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் #PennDiary - 01
சின்ன வயசுல அப்பா வீட்டுல, சத்தமா பேசினாக்கூட குத்தம்னு கட்டுப்பாட்டுலேயே வளர்ந்தேன். கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம், கணவருக்கு பணிவிடைகள் செய்றதும், புள்ளைகளை வளர்க்குறதும்தான் வாழ்க்கைனு இருந்துட்டேன். இப்போ புள்ளைங்களுக்கும் பேரப்புள்ளைங்களுக்காகவும் இந்த தியாக வாழ்க்கை. கடைசி காலத்துலயாச்சும் எனக்குனு கொஞ்சம் வாழ்ந்துக்கக் கூடாதுனு தோணுது. காலையில அவசரமில்லாம, நமக்கு யாரும் வேலை சொல்லாம ஒரு கப் காபி குடிக்கிறது, பிடிச்ச புத்தகங்கள் படிக்கிறது, ஊருல குளத்தை சுத்தி ஒரு நடை போடுறது, பேசி சிரிக்க நாலு நல்ல மனுஷங்கனு... என் மனசு ஆசப்படுறது இவ்ளோதான். ஊருல போய் நாம இருக்கலாம்னு தோணுது.
`பிள்ளைங்க வேலைக்குப் போற வீடுகள்ல, பெரியவங்கதானே அனுசரிச்சு இருந்துக்கணும்...'ங்கிறது எனக்கும் புரியாம இல்ல. ஆனா, பிள்ளைங்க எனக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாம இருக்கும்போது, நான் ஏன் அவங்களுக்காக இன்னும் உழைச்சு கரையணும்னு இப்போவெல்லாம் கேள்விகள் வருது.
Also Read: `என் உழைப்பையும் ஓய்வையும் பறிச்சுக்கிற அந்த ஓர் உறவு... என்ன செய்யலாம்?' #PennDiary - 02
நான் வேலை செய்யமாட்டேன்னு சொல்லல. இருக்குற வரைக்கும் புள்ளைங்களுக்கு உபயோகமா இருந்துட்டுப் போகலாம்னுதான் நினைக்கிறேன். ஆனா, நாள் ஆக ஆக, என் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. அது ஓய்வு வேணும்னு கேக்குது. இதைப் புள்ளைங்களுக்கு எப்படிப் புரிய வைக்கிறது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.
source https://www.vikatan.com/lifestyle/women/woman-reader-shares-how-her-family-treats-her-penn-diary-3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக