Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

`எங்கள் கட்சியினரை அனுமதியுங்கள்’ -போலீஸ் மீது கடுப்பான பா.ஜ.க-வினர்... கோவை மோடி கூட்டம் ரிப்போர்ட்

சட்டசபை தேர்தல் நெருங்க, நெருங்க தேசிய கட்சி தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மோடி கூட்டம்

Also Read: கோவை: `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க எப்படி நடத்தியது என தமிழக மக்களுக்குத் தெரியும்!’ - பிரதமர் மோடி தாக்கு

மோடி கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து தனது பரப்புரையை தொடங்கியிருக்கிறார். பிரதமர் வருகை என்பதால், ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. அரசு விழா, கட்சி கூட்டம் என 2 நிகழ்வுகள். இரண்டிலும் ஒருங்கிணைப்பில் பல சொதப்பல்கள்.

அரசு விழாவுக்கு செல்லும் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல, கறுப்பு நிறத்தில் மாஸ்க் கூட அணிய கூடாது என்பதில் தொடங்கி பல்வேறு நடைமுறைகள் பின்பற்றினாலும், அரசு விழாவில் சில ஊடகங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.

அரசு விழா

அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, கோவை முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அரசு விழா அரங்கில் மோடி நுழையும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

கட்சி விழாவில் ஊடகங்களுக்கு முறையான தகவலும் வழங்காமல், கடைசி நேரத்தில் காவல்நிலையத்தில் வைத்து பாஸ் வழங்கப்பட்டது. நோ பார்க்கிங் அட்டை (வீட்டு கேட்டில் வைப்பது) போன்று, ஓர் அட்டையில் மோடியை வரவேற்று, அதை கோவை முழுவதும் வைத்திருந்தனர். அவிநாசி சாலையில் ஓர் இடத்தில் மோடியை வரவேற்று பெரிய பலூன் பறக்கவிட்டிருந்தனர்.

மோடி பலூன்
மக்கள்

மோடி வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே ஊடகங்கள் ஆஜர் ஆகிவிட வேண்டும் என்பது உத்தரவு. கொடிசியா வளாகம் அருகே பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வினர் பேனர், கட்அவுட்களை குவித்திருந்தனர்.

முக்கியமாக, அவிநாசி சாலையில் மேம்பால பணிக்காக கட்டப்பட்ட தூண்களிலும் பேனர்களை குவித்திருந்தனர். மேலும் கூட்டத்தில் மோடி, நட்டா, எல்.முருகன், சுதாகர் ரெட்டி, சி.டி ரவி ஆகியோருடன் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆருக்கும் கட்அவுட் வைத்திருந்தனர்.

பேனர், கட்அவுட்
பேனர், கட்அவுட்

நட்டா, முருகன் கட்அவுட்களை விட மோடியின் கட்அவுட் சிறிதாக தான் இருந்தது. நிகழ்ச்சிக்கு முன்பு, 5 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க-யினர் கூறிவந்தனர். ஆனால், மொத்தமே சுமார் 30,000 பேர்தான் கூடியிருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பா.ஜ.க மற்றும் போலீஸாருக்கு இடையே முட்டிக் கொண்டிருந்தது. பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், “எங்கக் கட்சிகாரங்களை விட மாட்றீங்க. எல்லாம் அங்கங்க லாக் ஆகி நின்னுட்டு இருக்காங்க. ரோடை ஓன்வே ஆக்கறேனு சொன்னீங்க. அதையும் பண்ணல. எந்த விஷயத்துக்கும் போலீஸ் ஒத்துழைக்கல.

மோடி

இப்படியே இருந்தா, எங்களை ஊர்வலம் போகற சூழ்நிலைக்கு கொண்டு போய்டாதீங்க” என்று கொந்தளித்தார். அதேபோல, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “கடைசியாக சொல்கிறோம். ஆனால் கனமாக சொல்கிறோம் எங்கள் கட்சியினரை அனுமதியுங்கள்” என்று பேசினார்.

மற்ற நிர்வாகிகளும், “இந்த சைடு சேர் காலியா இருக்கு, அங்க பில் பண்ணுங்க. நீங்க எல்லாம் ஏன் நின்னுட்டு இருக்கீங்க?” என்று இருக்கைகளை நிரப்ப கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தனர். எஸ்.ஆர் சேகர் பேசும்போது, பொன்.ராதாகிருஷ்ணனை வாழும் காமராஜர் என்று புகழ்ந்தார்.

மோடி
மோடி

வானதி சீனிவாசன் பேசும்போது, “பெண்கள் அம்மாவின் சாயலை மோடியிடம் பார்க்கின்றனர்” என்று பேசினார். முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் குறித்து பேசும்போது எஸ்.ஆர்.சேகர், ராமன்/லிங்கம் அதாவது ராமர், சிவன் இருவருமே நம்மிடம் இருக்கின்றனர் என்று பில்டப் கொடுத்தார்.

மோடிக்கு ஒரு புறமும், மற்றவர்களுக்கு ஒரு புறமும் பேச ஏற்பாடு செய்திருந்தனர். சி.பி.ராதாகிருஷ்ணன், முருகன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் என்று அனைவருமே ஒரு பக்கம் இருந்த மைக்கில்தான் பேசினர். ஆனால், கே.பி. ராமலிங்கம் மோடிக்கு ஏற்பாடு செய்திருந்த மைக் போடியத்தில் பேசினார்.

மைக்
மோடி

இதனால், பாதுகாப்பு அதிகாரிகள் சற்று ஜர்க் ஆகினர். அவர் பேசி முடிந்ததும், எஸ்.ஆர் சேகரும் அங்கு நின்று 2 நிமிடங்கள் பேசினார். இருவர் பேசி முடிந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்தனர்.

மோடி வந்தால், எப்படி கோஷம் போட வேண்டும், அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்கு ரிகசலும் கொடுத்தனர். மோடி மேடை ஏறியதும் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியர் சீனிவாசன், மோடியின் பேச்சை மொழி பெயர்த்தார். ஆனால், அவர் பெரிதாக மெனக்கெடவில்லை.

மோடி
மோடி

ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த பேப்பரை பார்த்துதான் அவர் படித்துக் கொண்டிருந்தார். அவ்வபோது மட்டும் குறிப்புகளை எடுத்துக் கொண்டார். மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, மேடை மீது ஏற்றப்பட்டிருந்த பா.ஜ.க கொடிகளில் ஒன்று இறங்கிவிட்டது.

பாப்பம்மாள் மோடி

டெல்லி புறப்படும் முன்பு, பத்மஶ்ரீ விருது பெற்றுள்ள தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாளை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கினார் மோடி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-modi-bjp-public-meeting-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக