Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

மகாராஷ்டிரா: 28 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பரவல்! - பள்ளி தேர்வுகள் ரத்தா?

மகாராஷ்டிராவில் சற்று தனிந்திருந்த கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் 21 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது மேலும் 7 மாவட்டங்களில் பரவி இருக்கிறது. இதன் மூலம் மொத்தமுள்ள் 36 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

அமைச்சர் விஜய்

அமராவதி, அகோலா, புல்தானா, யவத்மால், நாக்பூர் மாவட்டங்களில் புதிதாக கொரோனா பரவி இருக்கிறது. அதோடு லாத்தூர், ஹின்கோலி, பர்பானி நாண்டெட் மாவட்டங்களில் கொரோனா தினத்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புனே, நாக்பூர், மும்பை, தானே, அமராவதி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முதல் ஐந்து இடத்தில் இருக்கிறது. அமராவதியில் ஒவ்வொரு வாரமும் கொரோனா பாதிப்பு 41.5 சதவீதமும், அகோலாவில் 30.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,034 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 24 மணி நேரத்தில் 8,333 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டு வருவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வந்தது. ஆனால் பொது முடக்கத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு வந்ததால் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட `Co-WIN' செயலி... இதில் என்ன பிரச்னை?

ஆனாலும் அடுத்த ஒரு வாரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் மும்பையில் புறநகர் ரயில்களில் அனைவரும் பயணம் செய்ய அனுமதித்ததும் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மீண்டும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய வதேத்திவார் தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ``மும்பையில் புறநகர் ரயில்கள் மற்றும் பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும், மார்க்கெட்கள், திருமண மண்டபங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் அது குறித்து அடுத்த வாரம் முடிவுசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் மீண்டும் இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து இருக்கிறது.

மும்பை குடிசைப் பகுதிகள்

கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் தமிழகத்தை பின்பற்றி மகாராஷ்டிரா அரசும் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலும் 11வது வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தாமலும் தேர்ச்சியடைந்ததாக அறிவிப்பது குறித்து பரீசீலித்து வருவதாக மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். அதேசமயம் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியடைய வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அமைச்சர் விஜயிடம் இது குறித்து கேட்டதற்கு, மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்



source https://www.vikatan.com/news/india/corona-spreading-speed-increased-in-maharashtra-government-planning-for-more-restrictions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக