Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

கோகுல இந்திராவுக்கு எடப்பாடி செக்; சசிகலாவுக்காகக் காய்நகர்த்தும் டெல்லி அதிகாரி! -கழுகார் அப்டேட்ஸ்

மதுரை மேற்கு தொகுதியிலுள்ள 278 பூத்களுக்கும் தலா 80 பேர் வீதம் பூத் கமிட்டியினரை நியமிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டிருந்தார். சொன்ன தேதிக்கு முன்பே பணிகளை விறுவிறுவென முடித்த கட்சியின் நிர்வாகிகள், பட்டியலை அமைச்சரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். `பரவாயில்லையே... நம்மாளுங்களுக்கு சுறுசுறுப்பு அதிகம்’ என்று உற்சாகமாகப் பட்டியலைப் பார்வையிட்ட செல்லூர் ராஜூ தரப்பினர், அதிலிருந்த சிலருக்கு போனைப் போட்டிருக்கிறார்கள். ``என்ன தம்பி... போஸ்ட்டிங் போட்டாச்சு, திருப்திதானே...” என்று கேட்க எதிர்முனையிலோ, “இதி திருப்பதி லேதுண்டி, விஜயவாடா... போனுனி பெட்டண்டி” என்று ‘மாட்டலாடி’யிருக்கிறார்கள். ‘இதென்னடா வம்பு’ என்று இன்னொரு நபருக்கு போனைப் போட்டு, “சென்னையிலிருந்து அமைச்சர் பேசச் சொன்னாரு” என்றிருக்கிறார்கள்.

செல்லூர் ராஜு

அதற்கோ, “நேனு சென்னாக்கிதி... நீனு சென்னாக்கிதியா?” என்று சேண்டில்வுட் பாஷையில் நலம் விசாரித்திருக்கிறார்கள். இவர்களாவது பரவாயில்லை... இன்னும் சிலரோ தெலுங்கிலும் கன்னடத்தில் மாறி மாறி திட்டித் தீர்த்திருக்கிறார்கள். பதறிப்போன செல்லூர் தரப்பு விசாரித்ததில், அவசரத்துக்கு எங்கேயோ ஆட்டையைப் போட்ட போன் நெம்பர் டேட்டா ஷூட்களை பட்டியலில் நுழைத்தது தெரியவந்திருக்கிறது. செம கடுப்பான அமைச்சர், நிர்வாகிகளிடம் பட்டியலை வீசியெறிந்து, ‘எனக்கே போலி பட்டியல் கொடுக்குறீங்களா? ஒரு வாரத்துக்குள்ள சரியான பெயர், மொபைல் நம்பரோட பூத் கமிட்டி பட்டியல் வந்தாகணும். இல்லைன்னா தொலைச்சுப்புடுவேன்’ என்று தாண்டவமாடினாராம்.

பூத் கமிட்டியை தோண்டினா பூதம் கிளம்புதுன்னு சொல்லுங்க!

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவைக் களமிறக்க முடிவு செய்திருக்கிறதாம் அ.தி.மு.க தலைமை. ‘‘2011-ல் சைதை துரைசாமி ஸ்டாலினுக்கு ட்ஃப் ஃபைட் கொடுத்த அளவுக்கு, 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகர் டஃப் கொடுக்கவில்லை என்று முதல்வர் நினைக்கிறார்.

அதனால்தான் கோகுல இந்திராவைக் களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்கள்’’ என்று ஒரு தரப்பினர் சொல்ல... ‘‘சசிகலாவை ஆதரித்துப் பேசிவரும் கோகுல இந்திராவுக்கு சீட் கொடுத்ததுபோலவும் ஆச்சு... ஜெயிக்கவிடாமல் செக் வைத்தது போலவும் ஆச்சு’’ என்று மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் சொன்னதுபோல எடப்பாடி மந்திரவாதி இல்லை... தந்திரவாதி!

சென்னையில் ஓய்விலிருக்கும் சசிகலா, இன்னும் சில நாள்களில் தஞ்சாவூருக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்குச் சொந்தமாகப் பரிசுத்தம் நகரில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டைப் புதுப்பித்திருப்பதுடன், பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியிருக்கிறார்கள். சசிகலாவின் தஞ்சை பயண ஏற்பாடுகளை நடராஜனின் தம்பிகளான பழனிவேல், ராமசந்திரன் ஆகியோர் செய்துவருகிறார்கள்.

சசிகலா

இந்த வீட்டிலிருந்தபடிதான் சசிகலா அரசியல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. பழனிவேலின் மருமகன் தென்னரசு ஏற்கெனவே குஜராத்தில் சூரத் மாநகராட்சியின் கமிஷனராகப் பணியாற்றியவர். கடந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது சூரத் மாநகராட்சியில் ஆளுங்கட்சிக்கு பக்கபலமாக செயல்பட்டாராம். தற்போது மத்திய அரசுப் பணியில் டெல்லி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பவர், சசிகலாவுக்காக டெல்லியில் சில காய்நகர்த்தல்களைச் செய்துவருகிறாராம். விரைவில் டெல்லியிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது சசிகலா முகாம்.

டெல்லியில் ஒரு கில்லி!

முதல்வர் பழனிசாமிக்கு கடந்த 2019-ம் ஆண்டு, சென்னை எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஆனால், இதுவரை தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட எந்தவொரு கல்வெட்டிலும், டாக்டர் என்று குறிப்பிட்டு அவரது பெயர் பொறிக்கப்படவில்லை. இந்தநிலையில், மேட்டூர் அணையிலிருந்து சேலத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா உபரிநீர் திட்டத்துக்கான கல்வெட்டில் ‘டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி’ என்று பெயர் பொறிக்க முதல்வருக்கு நெருக்கமான பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் ஆர்வம் காட்டுகிறாராம்.

“இந்தத் திட்டத்துக்கு டெல்டா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கல்வெட்டு வைத்தாலே சர்ச்சை கிளம்பும். அதோடு டாக்டர் என்று பெயர் பொறித்தால் முதலமைச்சர் மீது கோபம் அதிகரிக்கும். விஷயம் புரியாமல் இப்படி ஜால்ரா தட்டுகிறாரே!” என்று கொதிக்கிறது லோக்கல் அ.தி.மு.க.

வாங்குற காசுக்கு மேல ஓவரா கூவுறாரே!

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மயிலாடுதுறை தி.மு.க ஒன்றியச் செயலாளர் மூவலூர் மூர்த்தியின் மனைவி காமாட்சி கவுன்சிலராக வெற்றிபெற்றார். இவர் சேர்மன் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், வேறு ஒருவரைப் பரிந்துரை செய்தாராம். ஆனால், மாவட்டப் பொறுப்பாளரையும் மீறி அ.தி.மு.க ஆதரவுடன் காமாட்சி ஒன்றிய சேர்மன் ஆனார். பிரதி உபகாரமாக துணை சேர்மன் பதவி அ.தி.மு.க-வுக்குக் கிடைத்தது. இதைக் காரணம் காட்டியே, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, மூவலூர் மூர்த்தியின் ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

பிரசாந்த் கிஷோர்

இந்தநிலையில்தான் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட மூவலூர் மூர்த்தி விண்ணப்பித்திருக்கிறார். இதையடுத்து, அவருக்கு எதிர்க்கோஷ்டினர் அவரின் மனைவி காமாட்சியின் சேர்மன் பதவிக்கு வேட்டுவைக்கும் வகையில், அவருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிவருகிறார்களாம். தேர்தல் நெருங்கும் நிலையில் சேர்மன் பதவி பறிபோனால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு, மூர்த்திக்கு சீட் கிடைக்காது என்பதுதான் எதிர்க்கோஷ்டியினரின் திட்டமாம். இந்த விவகாரம் தலைமைக்கு புகாராகச் செல்ல... தலைமையோ விசாரணைப் பொறுப்பை ஐபேக் வசம் ஒப்படைத்திருக்கிறதாம்.

மூர்த்திக்கு கிடைக்குமா கீர்த்தி!

2016 சட்டமன்றத் தேர்தலில், ஈரோட்டிலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றிபெறவில்லை. அந்த அளவுக்கு ஈரோட்டில் அ.தி.மு.க வலுவாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்கிறார்கள். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ தென்னரசு, ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சிவசுப்ரமணியம், பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாலம், அந்தியூர் எம்.எல்.ஏ இ.எம்.ஆர்.ராஜா, பவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரன் என ஆறு எம்.எல்.ஏ-க்கள்மீது தொகுதி மக்கள் மட்டுமன்றி, கட்சிக்காரர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

தங்கம் தென்னரசு

ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் எதிராகக் கட்சிக்குள்ளேயே இன்னொரு கோஷ்டி தீயாக வேலை செய்கிறது. மொடக்குறிச்சி தொகுதியை மட்டும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்று ஐந்து பேர் குறிவைத்திருக்கிறார்கள். இந்த கோஷ்டிப்பூசலால், வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க-வுக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் தொண்டர்களே ஆரூடம் சொல்கிறார்கள்.

ஈரோட்டுல வேரோடு போகப்போவுதுனு சொல்லுங்க!

நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினரும், அதிகாரிகள் சிலரும் அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி பல கோடிகளைச் சுருட்டுவது அதிகரித்துவருகிறது. குந்தா பகுதியைச் சேர்ந்த ஒருவரை குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் என போலியான இருப்பிடச்சான்று கொடுத்து, குன்னூரில் வி‌.ஏ.ஓ உதவியாளராகப் பணி ஆணை வழங்கியிருக்கிறார்கள். இப்படி உதவியாளர் பணியிடத்துக்கு 7 லட்சம் ரூபாய், டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய் என விலைப்பட்டியல் வைத்து கல்லாகட்டிவருகிறார்கள். காரமடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் பட்டதாரி இளைஞர் ஒருவர், இந்த முறைகேடுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

பணம்

இதையடுத்து இந்த விவரங்களைச் சேகரிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தில் பெரும்பாலும் கல்லாகட்டியதே தி.மு.க நிர்வாகிகள்தானாம். இதை மனதில்வைத்துதான் உயரதிகாரிகள் தரப்பு, “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அடுத்து அவங்க ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்யச் சொல்வாங்க... டென்ஷன் ஆகாதீங்க” என்று சம்பந்தப்பட்டவர்களை கூல் செய்திருக்கிறார்களாம்.

திருடன் கையில சாவியைக் கொடுத்துட்டாங்க!

ஜனவரியில் பெய்த தொடர் கனமழைக்கு, நீர்ப்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 20,000 ரூபாயும், மானாவரி நெற்பயிர் தவிர, இதர மானாவரிப் பயிர்கள் அனைத்துக்கும் ஹெக்டர் ஒன்றுக்கு 10,000 ரூபாயும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, இதற்கான நிதி விடுவிக்கப்பட்டு, வேளாண்மைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also Read: தினகரனின் வேட்பாளர் பட்டியல் முதல் வேலுமணி மீது தளவாய் சுந்தரத்தின் கடுப்பு வரை... கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், பட்டியல் சரிபார்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நிவாரணம் பெற தகுதியில்லாத விவசாயிகள் பலருக்கும் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில்தான் இந்தக் குளறுபடி அதிகமாக அரங்கேறியிருக்கிறது. பணம் வந்த சில நிமிடங்களில் ‘அடிச்சது ஜாக்பாட்’ என்று பலரும் பணத்தை செலவு செய்துவிட்டார்களாம். கோடிக்கணக்கில் இப்படி வரவு வைக்கப்பட்ட பணத்தை தேர்தல் நேரத்தில் எப்படித் திருப்பி வசூலிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

நிவா‘ரணம்’னு சொல்லுங்க!

சில மாதங்களுக்கு முன்பு திருவேற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரனும், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து திருவேற்காடு நகராட்சியின் உயரதிகாரிக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

லஞ்சம்

குளுகுளு நகருக்குத் தூக்கியடிக்கப்பட்ட அந்த உயரதிகாரி, மேலிடத்தில் பேசி 70 சிறிய ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து ‘வெயில்’ நகருக்கு இடமாறுதல் வாங்கிக்கொண்டாராம். திருவேற்காடு நகராட்சியில் அமைச்சர்களின் ஆதரவுபெற்ற அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய லட்சுமிகரமான அதிகாரியும் விரைவில் மாற்றப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நடவடிக்கைக்கு பயந்த அந்த லட்சுமிகரமான அதிகாரி, அமைச்சர் அலுவலகத்திலேயே கைநிறைய ஸ்வீட் பாக்ஸ்களுடன் காத்துக்கிடக்கிறாராம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-edapaadi-move-sasikala-plan-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக