சென்னையில் உள்ள ‘தமிழக காவல்துறை தலைமை அலுவலகம்’ கடந்த சில தினங்களாக, பரபரப்பாகவே காணப்படுகிறது. அதற்கு, டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் இளம் பெண் ஐபிஎஸ் ஒருவர் தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது கொடுத்த பாலியல் சீண்டல் புகாரே காரணம். புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதோடு ராஜேஷ்தாஸ் வகித்து வந்த பதவியிலிருந்து நீக்கி விட்டு அவரைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டிருக்கிறார். ராஜேஷ்தாஸுக்குப் பதிலாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் உடனடியாக பதவியை ஏற்றுக் கொண்டார்.
ராஜேஷ்தாஸ் மீது கொடுக்கப்பட்டிருக்கும் பாலியல் சீண்டல் புகார் குறித்து டிஜிபி அலுவலகத்தில் விசாரித்தோம். ``ராஜேஷ்தாஸ் மீது ஏற்கெனவே சில சர்ச்சைகள் நிலுவையில் இருந்தன. அதையும் மீறித்தான் அவர், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர், தமிழக சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவி என்பது காவல் துறையில் முக்கியமானதாகும். அந்தப் பதவியில் திரிபாதி இருக்கும்போது எதற்காக சிறப்பு டிஜிபி என்ற பதவியை ராஜேஷ்தாஸுக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமையைப் போல தமிழக காவல்துறைக்கும் இரட்டை தலைமையா என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்பின. கடும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் மேலிட செல்வாக்கு காரணமாக ராஜேஷ்தாஸ், அந்தப் பதவியில் நீடித்தார். பதவிக்கு வந்ததும் தமிழக காவல்துறையினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் வார விடுமுறை அறிவிப்பை வாய்மொழியாகவே அறிவித்தார்.
தமிழகத்துக்கு விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால்தான் சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பே ராஜேஷ்தாஸின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பாலியல் சீண்டல் புகார் காரணமாக சிறப்பு டிஜிபியின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி, புகாரோடு சில ஆதாரங்களையும் உள்துறைச் செயலாளர், டிஜிபியிடம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புகார் கொடுத்த டெல்டா மாவட்ட பெண் எஸ்.பியான இளம் ஐபிஎஸ் அதிகாரி, டெல்டா மாவட்டத்திலிருந்து சென்னை வருவதற்குள் சில தடைகளை சந்திருக்கிறார்.
அதுதொடர்பாக தனக்கு வேண்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் அவர், என்ன நடந்தது என்று கூறி வருத்தப்பட்டிருக்கிறார். அதைக்கேட்ட சீனியர் மற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், புகார் கொடுத்த டெல்டா மாவட்ட இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆறுதல் கூறியதோடு, ‘நாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள்’ என்று கூறியிருக்கின்றனர் போன்ற தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
இதுகுறித்து சீனியர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் ராஜேஷ்தாஸ் குறித்து சில முக்கிய தகவல்களைக் கூறினர்.
”தான் உண்டு, தன் வேலை உண்டு இருந்த டெல்டா மாவட்ட இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் மேலதிகாரி என்ற முறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட பெண் எஸ்.பியும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அடுத்து, ராஜேஷ்தாஸும், டெல்டா மாவட்ட எஸ்.பியும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அலுவல் பணியைத்தாண்டி மொழி அடிப்படையில் இருவரும் நட்பாகப் பேசி வந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் ராஜேஷ்தாஸிடமிருந்து வந்த மெசேஜ்களைப் பார்த்த டெல்டா மாவட்ட எஸ்.பி சுதாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதன்பிறகும் ராஜேஷ்தாஸிடமிருந்து மெசேஜ்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. விவரத்தை குடும்பத்தினரிடமும் தனக்கு வேண்டப்பட்டவர்களிடமும் டெல்டா மாவட்ட எஸ்.பி பகிர்ந்தபோது கவனத்துடன் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். அதனால் முன்பை விட டெல்டா மாவட்ட பெண் எஸ்.பி மிகுந்த எச்சரிக்கையுடனே செயல்பட்டு வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் கடந்த 21-ம் தேதி டெல்டா மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்வரின் பாதுகாப்புப் பணிக்காக டெல்டா மாவட்டத்துக்குச் சென்றிருக்கிறார் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். அதனால் டெல்டா மாவட்டங்களில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தங்களின் எல்லைகளில் ராஜேஷ்தாஸை வரவேற்கக் காத்திருந்தனர். அதைப் போல டெல்டா மாவட்டப் பெண் எஸ்.பியான இளம் ஐபிஎஸ் அதிகாரியும் காத்திருந்தார்.
ராஜேஷ்தாஸின் கார் வந்ததும் மற்றவர்களுடன் டெல்டா மாவட்ட பெண் எஸ்.பியும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி-யின் அருகே கார்வந்ததும் கண்ணாடியைக் கீழே இறக்கி “மேடம், உங்களிடம் முக்கியமான தகவல் பேச வேண்டும், காரில் ஏறுங்கள்” என்று ராஜேஷ்தாஸ் கூறியிருக்கிறார். உடனடியாக பெண் எஸ்.பி-யும் கதவைத் திறந்து காருக்குள் ஏறி அமர்ந்திருக்கிறார். பாதுகாப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த ராஜேஷ்தாஸ், அடுத்த சில நிமிடங்களில் பெண் எஸ்.பி-க்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகப் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கிய பெண் எஸ்.பி, வேகமாக காரை விட்டு தூரமாக சென்றிருக்கிறார். அங்கு கூட்டமாக சக காவல்துறையினர் நின்ற இடத்துக்குச் சென்ற பெண் எஸ்.பி, வழக்கத்தை விடப் பதற்றமாக காணப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து காருக்குள் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடமும் தனக்கு வேண்டப்பட்டவர்களிடமும் பெண் எஸ்.பி பகிர்ந்திருக்கிறார். அதன்பிறகு, டெல்டா மாவட்டத்திலிருந்து காரிலேயே சென்னை நோக்கி வந்திருக்கிறார். அப்போது ஐஜி அந்தஸ்திருக்கும் ஒருவரும் எஸ்.பி ஒருவரும் பெண் எஸ்.பியிடம் மேலதிகாரி மீது புகார் கொடுக்க வேண்டாம் என்று ராஜேஷ்தாஸுக்கு ஆதரவாக சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனால் பெண் எஸ்.பியோ, புகார் கொடுக்கும் முடிவில் உறுதியாக இருந்ததால் சில அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். அதையும் மீறித்தான் பெண் எஸ்.பி, சென்னை வந்து உள்துறைச் செயலாளர், டிஜிபியைச் சந்தித்து புகார் கொடுத்ததோடு சில ஆதாரங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.
தேர்தலையொட்டி ஆளுங்கட்சியினர் நம்பிக்கை வைத்து ராஜேஷ்தாஸை இந்தப் பதவியில் பணியமர்த்தியிருந்தனர். அதனால், பெண் எஸ்.பி-யின் விவகாரத்தை பேசி முடிக்கும்படி மேலிடத்திலிருந்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே பெண் எஸ்.பி-க்கு வேண்டப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குரூப்களில் டெல்டா மாவட்ட எஸ்.பி-யின் பிரச்னையை சூசகமாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகே இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் என ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
அதன்பிறகே பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் விவகாரம் வெளியில் தெரியத் தொடங்கியது. உடனடியாக எதிர்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூகவலைதளங்களில் தகவலைப் பதிவு செய்து கண்டனங்களை தெரிவித்தனர். அது, ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துகளாக பதிவாகத் தொடங்கியதும் உடனடியாக ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து சிக்னல் வந்திருக்கிறது. அடுத்த சில மணி நேரத்திலேயே புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட குழு, ராஜேஷ்தாஸ் பதவி பறிப்பு என உத்தரவுகள் பிறக்கப்பட்டன. தமிழக ஐபிஎஸ் சங்கம் சார்பிலும் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்.பி ஒருவர் கொடுத்த பாலியல் புகார் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதைப்போலவே டெல்டா மாவட்ட எஸ்.பி-யின் புகாரையும் கிடப்பில் போட முயற்சிகள் நடந்ததால்தான், இந்தத் தடவை பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டரீதியாக போராடத் தயாராக இருக்கிறார்கள். புகார் கொடுத்த பெண் எஸ்.பி-க்கு சீனியர்கள் உரிய பாதுகாப்பையும் கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.
யார் இந்த ராஜேஷ்தாஸ்?
ஒடிசாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேஷ்தாஸ், 1989-ல் தமிழக ஐபிஎஸ் அதிகாரியானார். இவருக்கு ஒரியா, இந்தி, ஆங்கிலம், தமிழ் என 4 மொழிகள் தெரியும். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள வாழையடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ ராணி தம்பதியினரின் மகளான முன்னாள் சுகாதாரச் செயலாளர் பீலாவை காதலித்துக் கரம் பிடித்தவர் ராஜேஷ்தாஸ். இவர் மீது சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கை. இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, கூடங்குளம் அணு மின்நிலைய துப்பாக்கிச் சூடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், திருச்சி காவலர் தாக்கப்பட்ட சம்பவம், பெண் டி.எஸ்.பி-க்களின் புகார்கள் என அவற்றைப் பட்டியலிடலாம். மாநில மனித உரிமை ஆணையம், ராஜேஷ்தாஸுக்கு அபராதம் விதித்தது. இப்படி ராஜேஷ்தாஸை சுற்றிய சர்ச்சைகளோடு டெல்டா மாவட்ட பெண் எஸ்.பியும் புகாரும் இப்போது சேர்ந்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/young-lady-ips-officer-complaint-against-special-dgp-rajesh-das-ips
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக