Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..! உடைகிறதா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் குறித்து தெளிவாக உள்ளன என்றாலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தத் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பனவற்றில் தொடர்ந்து இழுபறி நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது. “பிப்ரவரி 25-ஆம் தேதி தி.மு.க உடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று காங்கிரஸ் அறிவித்தபடி, நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுச்செயலளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருடன் காங்கிரஸ் கட்சியின் உம்மன் சாண்டி, ரன் தீப் சிங் சுர்ஜிவாலா, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள், கே.எஸ்.அழகிரி

பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தி.மு.க. தலைவர்களுடன் கூட்டணி சம்பந்தமாக பேசியிருக்கிறோம். நல்ல முறையில் பேசினோம். மகிழ்ச்சிகரமாக பேசினோம். எங்களுடைய கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இரண்டு தரப்புமே அவரவர் கட்சித் தலைமையுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பொத்தாம் பொதுவாக பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். உண்மையில் தி.மு.க - காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்...

Also Read: கூட்டணிக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்... சைலன்ட் தி.மு.க! - மக்கள் நீதி மய்யத்தின் ரியாக்‌ஷன் என்ன?

“வரும் சட்டமன்ற தேர்தலில் 54-க்கும் குறையாமல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், தி.மு.க தரப்பில் 20 அல்லது 25 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறினர். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் தலைவர்கள் தீர்க்கமாக இருந்தனர். “ ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பரப்புரை கூட்டங்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார். உங்கள் கட்சிக்கு கூடுதலாக தொகுதி ஒதுக்குவது குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதனால், கூடுதல் தொகுதியை ஒதுக்குவது குறித்து தலைவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்” என தி.மு.க தரப்பில் கூறிவிட்டனர். அதனால் தற்போதைக்கு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கும் வரவில்லை” என்றவர்கள்... “2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9-இல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம். தோல்வி அடைந்த தேனி தொகுதியில் கூட அ.தி.மு.க வேட்பாளருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் வெறும் 1% வாக்குகள் வித்தியாசம்தான்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை

அதுமட்டுமல்ல கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தற்போது வெறும் 20 தொகுதிகள் மட்டும்தான் ஒதுக்குவோம் என்று கூறினால் அது ஒரு தேசியக் கட்சியை அவமானப்படுத்துவதல்லவா? காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதியை ஒதுக்காவிட்டால் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில்தான் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்...” என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து தி.மு.க தரப்பினரிடம் பேசினோம். “2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டன. 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களிலும், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் தோல்வி தான் தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாததற்கு காரணம். இதைப் புரிந்துகொள்ளாமல் 50-க்கும் மேல் இடத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கேட்கின்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு தி.மு.க வாக்குகள்தான் காரணம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட அவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் பலர் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டனர். அதனால்தான் கள நிலவரத்தைப் பார்த்துவிட்டு தொகுதிப் பங்கீடு குறித்து பேசுங்கள் என குண்டுராவிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தார். தேசியக் கட்சி என்ற மரியாதையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.

திமுக தலைவர்கள்

ஆனால், இது சட்டப்பேரவை தேர்தல். இங்கு தி.மு.க தான் பிரதான கட்சி. தலை நிமிரட்டும் தமிழகம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என பல திட்டங்களை வகுத்து தேர்தல் பரப்புரை செய்துவருவது தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்பதால்தான். 2016-இல் நடந்தது போல காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தி.மு.க விரும்பவில்லை. தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பிரதான நோக்கமும்... அதை உணர்ந்து காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ள வேண்டும்” என்றனர்.

இரு கட்சியினரும் அவரவர் நியாயங்களில் உறுதியாக உள்ளனர். கூட்டணிப் பேச்சின் ஆரம்ப நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவதும் நடைமுறைதான். கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு யாருக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் தெரியவரும்.



source https://www.vikatan.com/news/politics/controversy-in-block-allocation-assembly-seat-is-dmk-and-congress-breaking-up-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக