Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

நாவில் எச்சில் ஊறும் நாடன் சிக்கன், பொலிச்சது ஃபிஷ் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes

வீட்டுச் சாப்பாடு போர்... ரெஸ்டாரன்ட் சாப்பாடுதான் வேண்டும் என வீட்டுக்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறதா?

வெளியில போய் சாப்பிடற செலவுல ஒரு வார சமையலை சமாளிச்சிடலாமே என உங்கள் மைண்டு வாய்ஸ் பட்ஜெட் பிளான் போடுதா... சரிதான். ரெஸ்டாரன்ட் சுவையில், கையைக் கடிக்காத பட்ஜெட்டில் இந்த வார வீக் எண்டுக்கு வித்தியாசமான இரண்டு நான்வெஜ் அயிட்டங்களைச் செய்துகொடுத்து பாராட்டுகளை அள்ளுங்கள்...

பொலிச்சது ஃபிஷ்

தேவையானவை:

* கறி மீன் அல்லது நெய் மீன் - 150 கிராம் (ஒரே மீன். கழுவி குடல் நீக்கியது)

* சின்ன வெங்காயம் - 50 கிராம்
* மிளகாய் வற்றல் - 4
* வெள்ளைப்பூண்டு - 4
* கொடம்புளி - 2
* தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
* கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
* உப்பு - சிறிதளவு
* சன்ஃப்ளவர் ஆயில் - தேவையான அளவு.

செய்முறை:

தேங்காய் எண்ணெயை வாணலியில் விட்டு, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, கொடம்புளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இக்கலவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல், பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். நன்கு கழுவிய மீனை இருபுறமும் இந்த பேஸ்டைத் தடவி, வாழை இலையில் (குருத்து இலை இல்லாமல் அடர் பச்சை நிறத்திலான இலையில்) வைத்துச் சுருட்டி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, அதை வாழை நாரைக் கொண்டு கட்டிக்கொள்ளவும். கட்டும்போது, மீனின் மீது நார் படக்கூடாது.

Also Read: பீட்ரூட் சாலட் | பரங்கிக்காய் கூட்டு | ப. மிளகாய் சட்னி - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes

தோசை சட்டியில் சன்ஃப்ளவர் ஆயில் விட்டு, அதன் மேல், வாழை இலையில் சுற்றிய மீனை வைத்து, இட்லி சட்டியின் மூடியால் மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மீனைத் திருப்பிப் போடவும். இப்படி 30 நிமிடங்கள் வேகவிட்டு, எடுத்தால் மசாலா மீனில் நன்றாக ஒட்டி, மீன் நன்றாக வெந்திருக்கும்.

நாடன் சிக்கன்

தேவையானவை:

* போன்லெஸ் சிக்கன்-65 (பொரித்தது) - 150 கிராம்
* மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, உப்புக் கலவை-15 கிராம்
* எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
* பெரிய வெங்காயம் - 1 (குச்சியாக நறுக்கியது)
* தேங்காய் - 100 கிராம் (குச்சியாக நறுக்கியது)
* வெள்ளைப்பூண்டு - 1 பல்
* இஞ்சி - சிறிதளவு
* தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
* கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து... பெரிய வெங்காயம், தேங்காய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மசாலா கலவையைச் சேர்த்து, 5 நிமிடங்களுக்குத் தொடர்ந்து கிண்டி விடவும். பிறகு, போன்லெஸ் சிக்கன்-65 ஐ சேர்த்து, 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். இதை, அனைத்து வகையான உணவுகளுக்கும் சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.

Also Read: கறிவேப்பிலை தோசை | அவகாடோ சாண்ட்விச் | பயறு தினை பெலாபாத் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes



source https://www.vikatan.com/food/recipes/weekend-recipes-of-fish-pollichathu-and-nadan-chicken

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக