Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

திருத்தணி: விண்ணை முட்டிய அரோகரா கோஷம்... திருத்தணியில் வள்ளிதிருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி மாத பிரம்மோற்சவத் திருவிழாவில் முருகப்பெருமான் தினமும் ஓர் அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருளினார். இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளிகல்யாணம் நேற்று அதிகாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வள்ளி திருக்கல்யாண வைபவம்

நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி திருக்கல்யாண மண்டபத்தில் மந்திரங்கள் முழங்க யாகவேள்விகள் நடைபெற்றன.

முன்னதாக, நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆறுமுக சுவாமி கோயிலுக்கு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுப் பல்லக்கில் சென்று திரும்பினார். பெருமானுக்கு தேவி வள்ளியின் சார்பாகத் திருத்தணி மலைப்பகுதியில் வசித்து வரும் குறவர் இன மக்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி சீர் கொண்டு வந்தனர்.

ஆடிப்பாடி மகிழும் குறவர் இன மக்கள்
வள்ளிக்கு சீர் கொண்டு செல்லும் பெண்கள்

சீரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட உற்சவர் குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாடவீதிகளைச் சுற்றி வலம் வந்தார். அதிகாலை 4.30 மணியளவில் தொடங்கப்பட்ட திருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வாக சுமார் 5.30 மணியளவில் முருகப்பெருமான் - வள்ளி திருக்கல்யாணம் பக்தர்களின் 'அரோகரா' கோஷங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருமண கோலத்தில் முருகப்பெருமான் - வள்ளி
வள்ளியுடன் முருகப்பெருமான்

பின்னர் 6 மணியளவில், முருகப்பெருமான் வள்ளி தேவியுடன் குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாடவீதிகளைச் சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



source https://www.vikatan.com/spiritual/temples/valli-thirukalyanam-ceremony-at-thiruthani-murugan-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக