Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

மதுர ருசி: இட்லி, தோசை... தலைக்கறி, குடல் கிரேவி... 50 வருடங்களாக இயங்கும் குள்ளா அங்கிடி போயிருக்கீங்களா?

அனைத்து வகையான உணவுகளிலும் உன்னதமான சுவை கொடுத்து உலக சாதனை படைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

குடல் கிரேவி

ஒரே ஹோட்டலில் அனைத்து வகையான சைவ, அசைவ வகைகள் கிடைத்தாலும் அதில், மட்டன், சிக்கன், தோசை, இடியாப்பம், பொங்கல் என ஒவ்வொன்றுக்கென ஸ்பெஷல் கடைகள் நிறைய உண்டு. அப்படி மட்டனுக்கு என பெயர்போன ஒரு கடைக்குத்தான் நாம் இப்போது செல்லப் போகிறோம்.

பரபரப்பான காமராஜர் சாலையில் அலங்கார் தியேட்டருக்கு எதிரே அமைந்துள்ள சிறிய கடைதான் 'குட்டையர் கடை' என்ற ஈவ்னிங் மட்டன் ஸ்டால். இதை குள்ளா அங்கிடி என்று சவுராஷ்டிரா மக்கள் அழைக்கிறார்கள்.

ஈரல் ப்ரை

மார்னிங் மட்டன் ஸ்டால் என்றால் அது ஆட்டுக்கறி கடை என்றும், ஈவ்னிங் மட்டன் ஸ்டால் என்றால் அது மட்டன் உணவு வெரைட்டிஸ் கொடுக்கும் ஹோட்டல் என்றும் மதுரைக்காரர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

பள பள வெளிச்சத்தில் அருகிலுள்ள கடைகள் காட்சி தர, பழைய கால ஓட்டுக் கட்டடத்தில் மிக சிறியதாக பாரம்பர்யத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சி தந்தது குட்டையர் ஹோட்டல்.

குடல் ப்ரை

மதுரையில் ஆட்டுக்கறியில் பலவித வெரைட்டிகளை கொடுக்கும் ஹோட்டல்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

இதுவும் அது போன்ற மட்டன் ஸ்பெஷல் ஹோட்டல்தான். இட்லி, தோசை, கறிதோசை, ஊத்தப்பத்துக்குக்கூட ஊற்றிக்கொள்ள குழம்புகள்தான் தருகிறார்கள்.

மட்டன் சுக்கா, ஈரல் என்று பல வெரைட்டிகள் இருந்தாலும் இங்கு ரொம்ப ஃபேமஸ் தலைக்கறி ரோஸ்ட், மூளை ப்ரை, ஈரல் கிரேவி, சுவரொட்டி வறுவல், முட்டைக்கறி, குடல் ப்ரைதான்.

இதில் இவர்கள் தரும் புதுவிதமான சுவைக்காக பலரும் தேடி வருகிறார்கள்.

தலைக்கறி

பொங்கல் உட்பட, கலவை சாதம் தயாரிப்பதில் தனித்துவம் மிக்க சவுராஷ்டிரா மக்கள் அசைவத்திலும் பின்னி பெடலெடுப்பார்கள் என்பதற்கு இந்த ஹோட்டல் உதாராணம்.

மக்களுக்கு மாறாத சுவையை மட்டுமல்ல, அதே மாதிரியான சூழலை கொடுக்க வேண்டும் என்பதால் 50 ஆண்டுகளாக அதே இடத்தில் செயல்படும் இந்த ஹோட்டலை புதுப்பிக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

கடை மெனு
வீட்டு பதத்தில் தருகிற இட்லி, தோசை, ஊத்தப்பத்துக்கு ஜோடியாக மட்டன் சுக்கா, குடல் கிரேவி, குடல் ப்ரை, ஈரல் கிரேவி, மூளை ப்ரை, நாக்கு ப்ரை, தலைக்கறி ரோஸ்ட் எனத் தந்து பட்டையைக் கிளப்புகிறார்கள்.

அதிக காரம் இல்லாமல், அதே நேரம் அளவான காரத்துடன் மட்டன் வெரைட்டிகளை தயாரிக்கிறார்கள். மதுரையிலுள்ள மற்ற அசைவ ஹோட்டல்களை விட இங்கு விலை மலிவுதான். அதே நேரம் அவர்கள் கொடுக்கும் சுவையோ அதிகமானது.

மட்டன் வெரைட்டிகள்

நம்மிடம் பேசிய ஹோட்டல் நடத்தும் சகோதரர்கள் ரமேஷ்பாபு, கணேஷ்பாபு, பாஸ்கர், "எங்கள் தந்தை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ஹோட்டல் இது. அவருக்கு உதவியாக குட்டையர் என்பவர் பல வருடங்கள் இங்கு வேலை பார்த்தார். அவரை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் பெயரிலயே குட்டையர் கடை என்று அழைக்கிறார்கள். அதனால்தான் எங்க அப்பா போட்டோவோடு, அவர் போட்டோவையும் கடையில மாட்டி வச்சிருக்கோம்.

அப்போதிருந்து எங்கள் கடை சுவைக்காக ரொம்ப பிரபலமானது. அப்பா இருக்கும்போது வந்த மக்கள் இப்போதும் வருகிறார்கள் என்பதுதான் எங்கள் தொழிலின் சாதனை. பெரிய லாபகராமக கொண்டு செல்லாவிட்டாலும் நல்ல ஹோட்டல் என்ற பெருமையை தக்க வைத்திருக்கிறோம்.

வீட்டில் தயாரிக்கப்படும் மசாலா, சுத்தமான எண்ணெய், தரமான ஆட்டுக்கறி மற்றும் நாங்கள் தனிப்பட்ட முறையில் உருவாக்கிய சில மசாலா சேர்மானங்களை வைத்து உணவுகளை தயார் செய்கிறோம். மக்களின் வயிற்றுக்குப் பிரச்னை இல்லாத சுவையான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்" என்றார்.

ஹோட்டல் நடத்தும் சகோதரர்கள்

அப்புறமென்ன, மதுரை வந்தீங்கன்னா, அலங்கார் தியேட்டர் எதிரேயுள்ள குள்ளா அங்கிடி என்கிற குட்டையர் கடைக்கு ஒரு எட்டு வந்துட்டு போங்க..!



source https://www.vikatan.com/food/food/madurai-special-food-a-must-visit-traditional-restaurant-for-mutton-lovers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக