Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

பன்னீரின் பரிகார பூஜை முதல் அமைச்சர் பாஸ்கரனிடம் கடுகடுத்த எடப்பாடி வரை... கழுகார் அப்டேட்ஸ்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்குச் சென்ற பிறகுதான் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார் என்ற சென்டிமென்ட் தென்மாவட்ட அ.தி.மு.க-வினரிடம் உண்டு. அதனால், வரும் மார்ச் 4-ம் தேதி நடக்கும் அய்யா அவதார தினவிழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவிருக்கிறார். சாமித்தோப்பில் தரிசனம் செய்யும் பன்னீர், கையோடு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிலும் கலந்துகொள்ளவிருக்கிறார்.

2017-ல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடிமரத்தை ஓ.பி.எஸ் உபயமாக வழங்கிய அன்றுதான், அவரது முதல்வர் பதவியை சசிகலா தரப்பு பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பகவதி அம்மன் கோயிலில் பரிகார பூஜை செய்யவிருப்பதன் மூலம் மீண்டும் தனக்கு முதல்வர் யோகம் அடிக்குமா என்று ஜோசியர்களிடமும் ஆலோசித்துவருகிறாராம்.

கட்சி ஆலோசனையைவிட பலத்த ஆலோசனையா இருக்குதே!

அ.தி.மு.க தலைமையகத்தில் ஒருபக்கம் விருப்ப மனு வாங்கும் வைபவம் கனஜோராக நடைபெற்றுவரும் நிலையில், இன்னொரு பக்கம் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூம்புகார் அரசு கைவினை அங்காடியில் 1,100 ரூபாய் விலையுள்ள ஜெயலலிதாவின் சிலையை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு நடக்கிறது.

‘எஃப்2பி’ எனப்படும் கலவையில் செய்யப்பட்டிருப்பதால், இந்தச் சிலையை வெளியே வைத்திருந்தாலும் கருத்துப்போகாதாம். விற்பனை சூடுபிடித்ததால், பூம்புகார் நிறுவனமும் ‘ஹாப்பி.’ ஆனால், எம்.ஜி.ஆர் படங்களையும் சிலைகளையும் வாங்கத்தான் ஆள் இல்லை.

எம்.ஜி.‘யார்’னு நினைச்சிட்டாங்களோ?

கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் சம அளவில் கவுன்சிலர்களைப் பெற்றன. இதனால், குலுக்கல் முறையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிவகுமார் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டாக பதவியிலிருக்கும் சிவகுமாருக்கு, ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை தி.மு.க ஜெயித்து ஆட்சி அமைத்துவிட்டால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நம்மைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்களோ...’ என்று பயம் வந்துவிட்டதாம். அதனால், தி.மு.க., அ.தி.மு.க கவுன்சிலர்களை கூவத்தூர் பாணியில் ‘குளிர்விக்க’ முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக, அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்துக்கொண்டு ஒரு வாரம் அந்தமான் சுற்றுலாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார் என்கிறார்கள். சுற்றுலா செல்வதற்கு தி.மு.க கவுன்சிலர்களும் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகத் தகவல்.

அப்படியே சென்டினல் தீவுக்கு ஒரு எட்டு போயிட்டு வாங்க பாஸ்!

பிப்ரவரி 26-ம் தேதி, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக சில எம்.எல்.ஏ-கள் முதல்வர் பழனிசாமியிடம் நன்றி தெரிவித்தார்களாம். அப்போது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் எம்.எல்.ஏ-க்கள் சிலர், அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் முதல்வரிடம் சென்று, ‘தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலெல்லாம் சசிகலாவுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அவரைச் சேர்க்காமல் தனித்து நின்றால் சரியாக இருக்காது. ஓட்டுகள் பிரிந்துவிடும்’ என்றார்களாம்.

சசிகலா

இதைக் கேட்ட எடப்பாடி, ‘அந்த அம்மா குற்றம் செஞ்சுட்டு தண்டனை அனுபவிச்சவங்க. இப்படிப்பட்டவரை தமிழக மக்கள் எப்படி ஏற்பார்கள்?’ என்று கடுகடுத்து அனுப்பியிருக்கிறார். இதே குழுவினர், அடுத்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து, அதே கதையைச் சொன்னார்களாம். அவரோ, “நாமெல்லாம் தோக்கணும்னுதானே அவரு இந்த வேலையைச் செய்யறாரு!” என்று கொந்தளித்தாராம். இது எங்கே போய் முடியும் என்று நகம் கடிக்கிறார்கள் டெல்டா மாவட்டத் தொண்டர்கள்.

நண்டு காலை வாருன கதையாயில்ல இருக்கு!

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சுமார் 50 மலை குவாரிகளை வெட்டியெடுக்க ஆளுங்கட்சி வி.ஐ.பி-கள் களத்திலிறங்க... கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமாரும், தருமபுரி தி.மு.க முன்னாள் எம்.பி தாமரைச்செல்வனும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களைக் காட்டி தனித்தனியாகத் தடை வாங்கினார்கள். இது தெரிந்த செய்திதான். ஆனால், இந்தத் தடையையும் பொருட்படுத்தாமல், சமீபத்தில் மீண்டும் 30 குவாரிகளை அபேஸ் செய்ய ஆளுங்கட்சி வி.ஐ.பி-க்கள் மும்முரமானார்கள். இதற்கும் நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது.

ஆனாலும், உள்ளூர் அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் புள்ளிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு, அனுமதியே இல்லாமல், சட்டவிரோதமாக குவாரிகளில் கற்களை வெட்டியெடுத்து கபளீகரம் செய்துவருகிறார்கள். கேட்டால், `இந்த எலெக்‌ஷனுக்குள் கலெக்‌ஷன் பார்த்தால்தான் ஆச்சு’ என்கிறார்கள் வில்லங்கமாக.

குவாரியில வாரிக் குவிக்குறாங்க!

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத தனியார் தங்கும் விடுதி வளாகத்துக்குள், உணவு தேடி வந்த ஆண் காட்டு யானையின்மீது எரியும் தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அல்லவா... இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இருவர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரிசார்ட் உரிமையாளர் ரிக்கி ராயனை மட்டும் இதுவரை கைதுசெய்யவில்லை.

தீ வைக்கப்பட்ட யானை

இவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ‘ரிக்கி ராயனைக் கைதுசெய்ய வனத்துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வனத்துறையின் மேலதிகாரிகளை நன்றாக அவர் ‘கவனித்து’விட்டதால், வனத்துறையினருக்குத் தெரிந்தே ரகசிய இடத்தில் அவர் தங்கியிருக்கிறார்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

காட்டுத்தனமா கவனிச்சிருப்பாரோ!

மதுரை, செல்லூர் ரவுண்டானாவில் அழகுமுத்துக்கோன் சிலைவைக்க அனுமதி கேட்டதற்கு, போக்குவரத்து காரணங்களைக் கூறி மாவட்ட நிர்வாகம் மறுத்தது. ஆனால், அதே இடத்தில் கபடி வீரர்கள் சிலைவைக்க அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டினார். இந்த விவகாரம் வழக்காக உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ‘அரசியல் தலைவர்கள் மற்றும் சாதித் தலைவர்களின் சிலை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும், ஆனால், கபடி வீரர் சிலையால் பிரச்னை வராது’ என்று சொல்லி சமாளித்தது மாவட்ட நிர்வாகம். தொடர்ந்து, கபடி வீரர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

செல்லூர் ராஜு

சமீபத்தில் கருணாநிதிக்கு சிம்மக்கல்லில் சிலை வைத்திருக்கிறார்கள். ‘வலையங்குளத்தில் முத்தரையர் சிலை அமைக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருமங்கலத்தில் மருது பாண்டியருக்கும், உசிலம்பட்டியில் மூக்கையாத் தேவருக்கும் சிலை அமைத்துவருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ஆனால், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மட்டும் மதுரையில் இடமில்லையா என்று அ.தி.மு.க மீது கடும் கொதிப்பில் இருக்கிறார்கள் யாதவர் சமூகத்தினர்.

சிலை அரசியல்... அது பிழை அரசியல்!

சட்டம்-ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் இருந்தபோது, ரௌடிகளை நல்வழிப்படுத்த, அவர்களை அருகிலுள்ள முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு, காவல் அதிகாரிகளைக் கலங்கடித்திருக்கிறார். சுவாமிமலை, திருச்செந்தூர், சென்னிமலை, மருதமலை என்று கோயில்களை அவரே ஃபிக்ஸ் செய்தாராம்.

ராஜேஷ்தாஸ்

‘அழைத்துச் செல்லும்போது ரெளடிகள் தப்பிச் சென்றுவிட்டால் யார் பதில் சொல்வது?’ என்று பதறிய அதிகாரிகள், வேறு வழியில்லாமல் வேன்வைத்து அழைத்துப் போனார்களாம். இப்போது ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பதில் அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள்.

ஹல்ல்ல்லோ... டி.ஜி.பி திரிபாதி ஆபீஸா, எப்ப சார் எஃப்.ஐ.ஆர் போடுவீங்க!

நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, `தமிழ் தேசியப் புலிகள் கட்சி’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். இதன் பின்னணியை விசாரித்தால், ‘‘பட்டுக்கோட்டை அல்லது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் சீட் கேட்டார்.

மன்சூர் அலிகான்

ஆனால், ‘சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சீமான் கூறிவிடவும், மன்சூர் அலிகானின் முகம் வாடிவிட்டது. ‘சரி எடுத்துக்கொள்கிறேன்’ என்று சீமானிடம் சொல்லிவிட்டு வந்தவர், இரண்டொரு நாளில் புதிய கட்சியைத் தொடங்கிவிட்டார்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பாவம் அந்தப் புலி!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-ops-pooja-palanisamy-angry-on-minister-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக