Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

''அஹமதாபாத் டெஸ்ட் மிகப்பெரிய அவமானம்... ரசிகர்கள் திருடப்பட்டார்கள்!'' - ஜோ ரூட்!

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என பிரமாண்டமாகத் தொடங்கிய இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் இரண்டே நாட்களில் முடிந்துபோனது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களை அதிரவைத்துள்ளது. 1935-க்குப்பிறகு ஒரு டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைவது இதுதான் முதல்முறை.

ஆட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று 17 விக்கெட்டுகள் இரண்டே செஷன்களில் சரிந்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் இங்கிலாந்தின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

போட்டிக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட், அஹமதாபாத் பிட்ச் குறித்து தனது அதிருப்தியை மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ''பிட்ச் மிகப்பெரிய அவமானம். ஆட்டத்தை நேரில் காண 40,000 ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். ஒரு ஐகானிக் போட்டியை நேரில் காணப்போகிறோம் எனவந்திருந்த அவர்களை ஏமாற்றியது மிகவும் வருத்தப்படவேண்டியது. ஜிம்மி ஆண்டர்சனின் பந்தை விராட் கோலி எப்படி எதிர்கொள்வார், ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துகளை எப்படி பென் ஸ்டோக்ஸ் எதிர்த்து ஆடுவார் எனப் பல கனவுகளோடு மேட்ச் பார்க்கவந்தவர்களை இந்த மைதானம் ஏமாற்றியிருக்கிறது.

நீங்கள் இஷாந்த் ஷர்மாவின் 100வது டெஸ்ட் போட்டியின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிட்டீர்கள். ஒரு சில ஓவர்களே அவர் பந்துவீசினார். ரசிகர்கள் திருடப்பட்டுவிட்டதாக நான் உணர்கிறேன். பும்ரா, இஷாந்த், ஆண்டர்சன், பிராட், லீச் என முக்கிய வீரர்களின் பந்துவீச்சையெல்லாம் பார்க்கவந்தவர்கள் என்னுடைய பெளலிங்கைப் பார்க்கவேண்டிய துரதிஷ்ட நிலைக்குத்தள்ளப்பட்டார்கள்'' எனப் பேசியிருக்கிறார் ஜோ ரூட்.

அஷ்வின்

ஜோ ரூட்டின் குற்றச்சாட்டுகளுக்கு ரோஹித் ஷர்மா பதில் சொல்லியிருக்கிறார். '' பிட்ச்சில் எந்த பூதமும் இல்லை. இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களுமே தவறிழைத்ததால் ஆட்டம் இரண்டு நாட்களில் முடிந்தது. பேட்ஸ்மேன்கள் நேரான பந்துகளில்தான் அவுட் ஆனார்கள். நான் உள்பட அவுட் ஆனது பேட்ஸ்மேன்களின் தவறுதான். பிட்ச்சை குறை சொல்லமுடியாது'' என்று சொல்லியிருக்கிறார் ரோஹித்.

ஆனால், அஹமதாபாத் பிட்ச்சில் பந்து மேலெழும்பிய வரவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட அண்டர் ஆர்ம்ஸ் விளையாடுவதுபோல பேட்ஸ்மேன்கள் பந்துகளை உருட்டி உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது பார்க்கவே பரிதாபமாகத்தான் இருந்தது.



source https://sports.vikatan.com/cricket/joe-root-criticizes-ahmedabad-pitch-for-the-batting-collapse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக