Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

`ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவைச் சந்திப்பார் மோடி!’ - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளில் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் களை கட்டியுள்ளன.

மேற்கு வங்கத்தில் தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

விளையாட்டு மைதானம்:

மம்தா பேசுகையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தை நீங்கள் (பா.ஜ.க) விளையாட்டு மைதானமாக நினைத்தால், நான் கோல் கீப்பராக இருப்பேன். உங்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. உங்களின் பந்து கோல் போஸ்ட்டைத் தாண்டி மேலே எழும்பிச் செல்லும். இந்த விளையாட்டில் மேற்குவங்க மக்கள் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும். பா.ஜ.க மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நிச்சயமாக நாட்டிலிருந்து தூக்கி எறியப்படும். அவர்கள் விடைபெறுவது நிச்சயம்” என்றார்.

மம்தா - மோடி

பெண்கள் பாதுகாப்பு

“பா.ஜ.க-வில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. அந்தக் கதைகளை நான் இன்று வெளியே சொன்னால் பா.ஜ.க-வினர் தலைகள் அவமானத்தில் கவிழும். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நாங்கள் பெண்கள் தாயைப் போல் மதிக்கிறோம். சகோதரியாகப் பாவிக்கிறோம்" என்று பேசினார்.

கலவரக்காரர்

மேலும் அவர், “பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதை விட மோசமான முடிவுதான் மோடிக்கு ஏற்படும். வன்முறையால் எந்த பலனையும் பெற முடியாது.” என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/politics/mamata-banaerjee-attacked-modi-in-election-campaign-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக