Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

டிசில்வா, மஹனமா, சங்ககாரா... இலங்கை கிரிக்கெட்டைக் காப்பாற்றிக் கரைசேர்ப்பார்களா?

மார்ச் 17,1996... இன்னும் சில வாரங்களில் இலங்கை கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றதன் வெள்ளிவிழா கொண்டாட்டம். ஆனால், கொண்டாடக்கூடிய நிலையில் இலங்கை இல்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

90'களில் கிரிக்கெட் ஆடப்பட்ட முறையை மாற்றி எழுதிய அணி இலங்கை. 96 உலகக்கோப்பையில் இருந்து இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்த அணி. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, கலுவித்தரானா, அர்ஜுனா ரணதுங்கா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன்... என இந்தப் பெயர்களைக் கேட்டாலே இந்திய ரசிகர்கள் அப்போது தூக்கம் தொலைப்பார்கள்.

1996 உலகக்கோப்பை வின்னர், 2003-ல் அரையிறுதி, 2007, 2011... தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பைகளில் ரன்னர் அப் என கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கிரிக்கெட்டின் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தவர்கள் இப்போது இருக்கும் இடம்தெரியாமல் தொடர் தோல்விகளால் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் இப்போது கிட்டத்தட்ட முடங்கிப்போயிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் என ஒரு முழுமையானத்தொடரில் விளையாட கரீபியன் தீவில் போய் இறங்கியிருக்கிறது இலங்கை.

சமிந்தா வாஸ்

ஆனால், இலங்கை அணி விமானம் ஏறும் முன் பல சம்பவங்கள் இலங்கை கிரிக்கெட்டில் நடந்துவிட்டன. இலங்கை கரீபியன் தீவுகளுக்குப் பறக்க 12 மணி நேரங்களே இருந்த நிலையில் பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் பதவி விலகினார். பெளலிங் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே நடந்திருக்கிறது இந்த விலகல்.

சமிந்தா வாஸுக்கும், இலங்கை கிரிக்கெட்டும் என்னதான் பிரச்னை?!

பணம்தான் இருவருக்கும் இடையிலான பிரச்னை. வாஸுக்கு முன்பாக பெளலிங் பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகெருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கிக்கொன்டிருந்தது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். சமிந்தா வாஸ் ஹை பர்ஃபாமென்ஸ் பயிற்சி மையத்தின் தலைவராக கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது பெளலிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருப்பதால் சம்பளத்தில் 5000 அமெரிக்க டாலர் (3.62 லட்சம்) உயர்த்திகொடுக்கும்படி கேட்டார். இலங்கை கிரிக்கெட் வாஸின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கடைசி நேரத்தில் பதவி விலகிவிட்டார்.

ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைத் தவிர்த்திருக்கமுடியும். ஆனால், அவர்கள் செய்யவில்லை. இலங்கை பாராளுமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்த பல்வேறு ஒப்பந்தங்களை தூசுதட்டி விசாரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே முத்தையா முரளிதரனும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருக்கிறார். இப்படிப் பல்வேறு சட்டசிக்கல்களிலும் இருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களில் மட்டும் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடர்ந்து 2 டெஸ்ட் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் தோல்வி என நான்கு தொடர் தோல்விகளை சந்தித்திருக்கிறது இலங்கை அணி. இதனால் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க, இலங்கை விளையாட்டு அமைச்சகம் களத்தில் இறங்கி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்த முன்னாள் கேப்டன்கள் அரவிந்த டி சில்வா, குமார் சங்ககாரா, ரோஷன் மஹானமா ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இவர்கள் மூவரும் பதவியேற்றதும் செய்த முதல் விஷயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு இயக்குநரை நியமிக்க முடிவெடுத்தது. இப்பணிக்கு இவர்களின் தேர்வு முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி. இலங்கை அணியின் பயிற்சியாளராக 2005 முதல் 2007 வரை இருந்தவர்தான் டாம் மூடி. இவரின் காலத்தில்தான் இலங்கை அணி நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளை அவர்கள் மண்ணிலேயே தோற்கடித்தது. இங்கிலாந்தை 5-0 என வொயிட்வாஷ் செய்தது. 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. உலகக்கோப்பை முடிந்ததும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டாம் மூடியின் ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் நீடித்தது. ஆனால், மூடி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவேண்டும் என்கிற காரணம் சொல்லி வெளியேறினார்.

அரவிந்த டி சில்வா

டாம் மூடி என்ன செய்யப்போகிறார்?!

டாம் மூடி தற்போது ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். அதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முழுநேர இயக்குநராக பணியாற்றமுடியாது எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் வருடத்துக்கு 180 நாட்கள் மட்டும் இலங்கையில் தங்கியிருந்து, இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடுகளை சீர்படுத்தக்கேட்டிருக்கிறது டிசில்வா, சங்ககாரா, மஹனாமா டீம். இதற்கு மூடியும் ஒப்புதல் தந்திருக்கிறார். உள்ளூர் போட்டிகள், அண்டர் 17, அண்டர் 19 போட்டிகள் என டாம் மூடி அனைத்தையும் கண்காணித்து சரிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் 26 உள்ளூர் ஃபர்ஸ்ட் கிளாஸ் அணிகள் இருக்கின்றன. 138 கோடி மக்கள் தொகைகொண்ட இந்தியாவிலேயே 38 அணிகள் மட்டுமே இருக்கும் நிலையில், வெறும் 3 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கைக்கு இது மிகவும் அதிகம். அதனால் இப்போது இதை 5 அணிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டும், சர்வதேச கிரிக்கெட்டும் இடையில் இருக்கும் மிகப்பெரிய தர இடைவெளியை இந்த அணிகளின் குறைப்பு சரிசெய்யும் என நம்பலாம்.

1996-ல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான உலகக்கோப்பை வெற்றி இலங்கையில் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே மாற்றியமைத்தது. அதுவரை கொழும்பு, கண்டி, காலே என நகரங்களுக்கான விளையாட்டாக மட்டுமே இருந்த கிரிக்கெட் இலங்கையின் எல்லா மூலை முடுக்குக்கும் பரவியது. இப்போது இலங்கையின் நம்பிக்கைத்தரக்கூடிய இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்தில் இருந்து உருவாகியிருக்கிறார். அதேபோல் லசித் மலிங்காவை பிரதியெடுத்ததுபோல பந்துவீசும் செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறார். இவரை எல்லோரும் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் எனக் கொண்டாடுகிறார்கள்.

1996 உலகக்கோப்பைக்கு முன் 100 பள்ளிகளே கிரிக்கெட்டில் பங்கேற்றன. இப்போது 1000 பள்ளிகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றன. வாரவிடுமுறைகளில் கிரிக்கெட் அகாடமிக்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இவ்வளவு ஆர்வத்தையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னுடைய தவறால் மொத்தமாக மூழ்கடித்துவிட்டது.

இலங்கை கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாளர்களிடம் இருந்து வந்த 1,80,000 அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய்) பணம் எப்படி மெக்ஸிகோவில் தனியார் அக்கவுன்ட்டில் பதுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்துவருகிறது இலங்கை பாராளுமன்றம்.

அதலபாதாளத்தில் இருக்கிறது இலங்கை கிரிக்கெட். இப்போது ஐசிசி போட்டிகளில் இலங்கை நேரடியாக விளையாடமுடியாது. தகுதிப்போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய நிலை. இதைவிட ஆபத்தானதாக இருப்பது வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் அண்டர் 19 அணிகள் எல்லாம் தொடர்ந்து இலங்கையின் அண்டர் 19 அணிகளை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிப்பதுதான்.

இதுமட்டுமல்லாமல் இலங்கை கிரிக்கெட்டில் எழுந்திருக்கும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஐசிசி விசாரித்துவருகிறது. ஏகப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், பிட்ச் க்யூரேட்டர்கள் ஐசிசியின் ஊழல் மற்றும் கண்காணிப்பு அமைப்பால் தடை செய்யப்பட்டுள்ளார்கள். 35 கோடிக்கு விலைபோன இலங்கை கிரிக்கெட்டின் டிவி ஒளிபரப்பு உரிமம் இப்போது இதில் பாதித்தொகைக்குத்தான் விற்பனையாகிறது. காரணம் விளம்பரதாரர்கள் குறைந்துவிட்டார்கள்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது. எல்லா சிக்கல்களில இருந்தும் இலங்கை கிரிக்கெட் நிச்சயம் மீண்டுவரும் என நம்புவோம். டிசில்வா, சங்ககாரா, மஹானமா காப்பாற்றுவார்கள் எனக் காத்திருப்போம்!


source https://sports.vikatan.com/cricket/can-de-silva-mahanama-and-sangakkara-redeem-srilankas-cricket

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக