Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

பிரேசில் செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்கத்தயாராகும் இந்தியாவின் PSLV C51!

2021-ல், இஸ்ரோவின் முதல் விண்வெளித் திட்டம் தயார். வரும் பிப்ரவரி 28-ம் தேதி ஶீஹரிகோட்டாவில் இருந்து PSLV - C51 ராக்கெட் விண்வெளியில் செலுத்தப்படவுள்ளது.

பிப்ரவரி 28-ல் PSLV-C51-ன் (Polar satellite launch vehicle C51) மூலம் பிரேசிலின் 'அமேசானிய 1' (Amazonia 1) உட்பட 20 சிறிய செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தவுள்ளது. இந்த சிறிய செயற்கைக் கோள்களில் இந்தியத் தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்களும் அடங்கும். PSLV -C51 தான் இந்தியாவில் வணிக ரீதீயாக செலுத்தப்படும் முதல் ராக்கெட் ஆகும்.

Amazonia 1 | அமேசானியா 1

இஸ்ரோ சார்பில் 2019-ம் ஆண்டு NSIL (Newspace India Limited) என்ற அமைப்பும், 2020-ல் IN-SPACe என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. இந்த இரு அமைப்பும் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் தனியார் துறைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், 'NSIL' இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்டன. தற்போது ஏவப்படவுள்ள ராக்கெட்டில் அமேசானியா செயற்கைக் கோள்தான் முதன்மையான செயற்கைக் கோளாக இருக்கும். அதனையடுத்து இஸ்ரோவின் நானோ செயற்கைக் கோள் ஒன்றும், IN-SPACe அமைப்பில் இருந்து சிறிய செயற்கைக் கோள்கள் நான்கும், NSIL அமைப்பின் இருந்து 15 சிறிய செயற்கைக் கோள்களும் இடம்பெற்றுள்ளன.

Also Read: புதிய பிரைவசி பாலிஸியை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுமா? உண்மை என்ன?

இதில் முதன்மைச் செயற்கைக்கோளாக இருக்கும் அமேசானியா 1 செயற்கைக் கோள் பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப்பட்ட பூமியைக் கண்காணிக்கும் வகையிலான முதல் செயற்கைக்கோள். இதனைப் பிரேசிலின் விவசாயப் பயன்பாட்டிற்கும், அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் காடுகளை அழித்தல் முதலான பணிகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO Mission

அதில் ஏவப்படவுள்ள சிறிய செயற்கைக் கோள்களில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்களும் இடம் பெறும். UNITYSat எனப்படும் மூன்று சிறிய செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்ட ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் கல்லூரி உருவாக்கிய JITsat, நாக்பூர் கல்லூரி உருவாக்கிய GHRCESat மற்றும் கோயம்புத்தூர் ஶீ சக்தி கல்லூரி உருவாக்கிய Sri sakthi sat ஆகியவையும் அடங்கும்.

இந்த ராக்கெட்டானது பிப்ரவரி 28-ம் தேதி இந்திய நேரப்படி காலை 10.28-க்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.



source https://www.vikatan.com/technology/tech-news/indias-first-commercial-launch-is-on-feb-28-with-pslv-c51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக