சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டன. இந்தநிலையில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்...
''அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் படத்தை சுவரொட்டியில் பயன்படுத்துவதில் என்ன தவறு?''
''2017-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு-செயற்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளை திருத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுவிட்டதோடு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியில் தலைமை அதிகாரம் படைத்தவர்கள். இந்தத் தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக திறம்பட கட்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சசிகலா, அ.தி.மு.க உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்கவில்லை. எனவே அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!''
''கட்சியின் பொதுச்செயலாளர் பதவி குறித்து, சசிகலா தாக்கல் செய்துள்ள வழக்கின் அடிப்படையில் முடிவெடுத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்களே?''
''பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் எனக்கு நன்றாகத் தெரியும். அடுத்து, 'பொதுச்செயலாளர் பதவி குறித்த பிரச்னைக்கு நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள்' என்று தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலின்போது ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு கொடுத்த 'ஏ ஃபார்ம், பி ஃபார்ம்' அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கித்தந்தது; அ.தி.மு.க-வினரும் போட்டியிட்டோம். எனவே, இதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை!''
''ஜெ.நினைவிடத்தை மூடுவதும், டி.ஜி.பி-யை நேரில் சந்தித்து மனு கொடுப்பதுவும் சசிகலாவைக் கண்டு ஆளுங்கட்சியினர் பயப்படுவதைத்தானே காட்டுகிறது?''
''ஜெ. நினைவிடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதில் ஆரம்பித்து அருங்காட்சியகம், அழகுபடுத்துதல் என நிறைய பணிகள் நடைபெற வேண்டியதிருக்கின்றன. எனவே, பணிகள் முழுமையடைகிற வரை நினைவிடத்தை மூடி வைப்பதென்று முடிவெடுத்துள்ளது தமிழக அரசின் பொதுப்பணித்துறை. எனவே இந்த நடவடிக்கைக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
'அ.தி.மு.க-வினர் எங்களைப் பழிவாங்குகிறார்கள்' என்று சசிகலா ஆதரவாளர்கள் எங்கள் மீது பழிசொல்வார்கள். அதனால்தான் முறையாக சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதைச் செய்துதரும்படி காவல்துறையினரிடத்தில் அமைச்சர்கள் புகார் மனு கொடுத்தனர். எந்தவித குழப்பமும் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையிலேயே ஜனநாயக முறைப்படி அமைச்சர்கள் செயல்பட்டனர். இதில் என்ன தவறு?''
''எடப்பாடி பழனிசாமி, சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல் அமைச்சரா அல்லது எம்.எல்.ஏ-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரா?''
''சட்டமன்றத்துக்கு வெளியே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 124 பேரும் ஒருமனதாக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுத்து கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர். எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபித்துக் காட்டினார்.
அன்றைய காலகட்டத்தில், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா இருந்துவந்ததால், இந்த நடவடிக்கைகளின்போது அவரும் உடனிருந்தார். அவ்வளவுதான். மற்றபடி அவரே தனிப்பட்ட முறையில் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பதுதான் சட்டதிட்டம். எனவே, 'சட்டமன்ற உறுப்பினர்களால்தான் நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்' என்று எடப்பாடி பழனிசாமியும் சொல்கிறார்!''
Also Read: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!
''சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளை நீக்கிய கட்சித் தலைமை, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?''
''நீங்கள் குறிப்பிடுகிற தலைவர்கள், 'சசிகலா உடல்நலம் பெற்றுத் திரும்பவேண்டும்' என்றதோடு, சசிகலாவுடனான தங்கள் நினைவுகளையும்தான் பகிர்ந்துகொண்டனர். மற்றபடி அ.தி.மு.க-வுக்குள் சசிகலா வரவேண்டும் என்றோ அல்லது பொறுப்பெடுத்து செயல்பட வேண்டும் என்றோ சொல்லவில்லை. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை!''
''அப்படியென்றால், 'அ.தி.மு.க-வில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள்' என்று அமைச்சர் ஜெயக்குமார் யாரைக் குறிப்பிடுகிறார்?''
''கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மற்றும் அவருக்கு வாகனம் கொடுத்து உதவியவர்கள் ஆகியோரைத்தான் குறிப்பிட்டார். மற்றபடி கட்சியிலுள்ள தலைவர்கள் யாரையும் அவர் குறிப்பிடவில்லை!''
Also Read: சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகார்! - சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சிக்கியது எப்படி?
''ஜெ. மரண மர்மம் குறித்த விசாரணையில் தொடர்ந்து 8 முறை ஆஜராகாமல் ஓ.பி.எஸ் தவிர்த்து வருவது ஏன்?''
''துணை முதல்வர் தனது ஒரு மாத கால சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர். எனவே, விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஆஜராக வேண்டும் என்றால், சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு வசதியான தேதியை, ஆணையம் முன்கூட்டியே நோட்டிஸாக அனுப்பவேண்டும். ஆனால், திடீரென 4 நாட்கள் அவகாசத்தில் ஆஜராகச்சொல்லி ஆணையம் நோட்டிஸ் அனுப்பும்போது, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய முடிவதில்லை! மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை!''
''ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவருவதைவிடவும் முக்கியமானது அரசு சார்ந்த நிகழ்ச்சி என்று தற்போது ஓ.பி.எஸ் கருதுகிறாரா?''
''விசாரணை கமிஷனை தவிர்க்கவேண்டும் என்ற எண்ணமே ஓ.பி.எஸ்-ஸுக்கு கிடையாது. தன்னுடைய நிலைப்பாட்டை ஆணையத்தின் முன் எடுத்துச்சொல்லவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கிறார். ஆனால், அரசு சார்ந்த நிகழ்வுகளை ரத்துசெய்துவிட்டு அவரால் வரமுடியவில்லை. அதாவது நேர, கால, சூழ்நிலை அவருக்கு சரிப்பட்டு வரவில்லையே தவிர... இதில் வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை!''
source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-is-not-aiadmk-general-secretary-kovai-selvaraj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக