நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பருவம் தவறிப் பெய்த கனமழையின் காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் 70,000 கன அடி முதல் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஆற்றின் கரையோரம் உள்ள வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெல்மணிகள் முளைவிட்டு சேதம் அடைந்தன.
தொடர்ச்சியாகப் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து பயிர்களை உரிய நேரத்தில் அறுவடை செய்து காய வைக்க இயலவில்லை. அதனால் அவை செடிகளிலேயே முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பயிர் சேதம் ஒரு பக்கம் ஏற்பட்ட நிலையில், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் குடிநீருக்காகத் தாமிரபரணி ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கின. அத்துடன், உறைகிணறுகளில் இருந்து நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நடைபெற்று வந்த குடிநீர் விநியோகமும் தடைபட்டது.
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிடுவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்தியக் குழு இன்று வந்து சேர்ந்தது. மத்திய அரசின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான குழுவில், எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குநர் மனோகரன், மத்திய அரசின் நிதித்துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மத்தியக் குழுவினர், தாமிரபரணி ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்தக் குழுவினரிடம், வெள்ளச் சேதத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விளக்கமாக எடுத்துக் கூறினார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர், மத்தியக் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மத்தியக் குழுவின் ஆய்வு குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்துக்கு 6,002 ஹெக்டேர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 163 ஹெக்டேர் நெல் பயிர்களும் 5,839 தானிய வகைகளும் அடங்கும். மொத்தம் ரூ.6,16,00,000 பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. கன மழைக்கு 18 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் சேதமடைந்தன. அதனால் ஒரு வார காலத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளால் மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற்றது” என்றார்.
நெல்லையில் மழை வெள்ளச் சேத பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்தியக் குழு, சேதம் அடைந்த கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை 20 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் பார்வையிட்டுச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றிப் பேசிய விவசாயிகள், ``வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்த அதிகாரிகள் விளை நிலங்களைப் பார்வையிட வரவேயில்லை. எங்கள் நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் நாசமடைந்த நிலையில், அவற்றைப் பார்வையிடாமல் குடிநீர் திட்டப் பணிகளை மட்டும் பெயரளவுக்குப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
மத்தியக் குழு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிடாததால் பாதிப்பு விவரங்களை மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.
source https://www.vikatan.com/news/agriculture/tirunelveli-farmers-unhappy-about-central-officers-quick-visits-on-rain-affected-areas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக