கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாகாணமே பனியால் சூழப்பட்டு டெக்ஸாஸ் வாசிகள் மின்சாரம் இன்றி கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (அதனைப் பற்றி முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யும்.) இந்த நேரத்தில் டெக்ஸாஸில் சூழ்ந்திருக்கும் பனியானது இயற்கையானது இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட பனியை வைத்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என சில நகரவாசிகள் சில காணொளிகளை டிக்-டாக் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
அப்படிப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் ஒரு நபர், வெளியில் இருக்கும் பனியைக் கொஞ்சம் எடுத்து வந்து லைட்டர் மூலம் பனியைச் சூடாக்குகிறார். ஆனால், அந்தப்பனி உருகுவதற்குப் பதிலாக எரியும் வகையில் பனியின் மேல்புறத்தில் கொஞ்சம் கரி படர்கிறது. இதனைப் போலப் பல காணொளிகள் சமூக வலைத்தளம் எங்கும் பதிவிடப்பட்டு அதன் மூலம், இது அரசு, மக்களை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
Also Read: கடுங்குளிர், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை... டெக்ஸாஸ் திணறக் காரணம் என்ன?!
இந்தக் காணொளிகளில் காண்பிக்கப்படுவது உண்மையா எனக் கேட்டால், முற்றிலும் உண்மைதான். பனி உருகுவதற்குப் பதில் அதன் மேல் கரி படிகின்றதுதான். ஆனால் அது செயற்கைப் பனி அல்ல. இது ஒரு சிறிய அறிவியல் செயல்பாடுதான் என அறிவியல் விளக்கங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் பனிப்பொழிவு ஏற்படுவது இது முதல் முறை அன்றே. 2014-ல் இதே போல அட்லான்டாவில் பனிப்பொழிவு ஏற்பட்ட பொழுதும் இதே போலப் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் படையெடுத்தன. அப்போதே இதற்கான பல விளக்கக் காணொளிகளும், கட்டுரைகளும் ஏழுதப்பட்டுவிட்டன. எனினும் மீண்டும், அதே போல ஒரு சம்பவத்தை அமெரிக்க வாழ் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர், முக்கியமாக டிக்-டாக்கில்.
நாம் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பனிக்கட்டிகளை எடுத்து சூடாக்கினால், அது உருகி தண்ணீராக மாறும். ஏன் என்றால், இந்தப் பனிக்கட்டிகள் முழுவதும் தண்ணீரால் ஆனது. ஆனால், பனி என்பது முழுவதும் தண்ணீரால் ஆனது கிடையாது. பனியில் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும். அதுவும் ஓர் இடத்தில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அதில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகளின் அளவும் மாறுபடும். அவையும் காற்று மூலக்கூறுகளால் சூழப்பட்டிருக்கும். எனவே, அவற்றைச் சூடாக்கினால் தண்ணீராகும் மாறும் என்ற கூற்றே தவறுதான். லைட்டரால் பனியை சூடாக்கும் போது கரி போன்று படிவதற்கும் பனிக்கும் சம்பந்தமில்லை. அவை லைட்டரில் இருக்கும் பியூட்டேன் (Butane) என்ற எரிபொருள் ஆக்ஸிஜனுடன் கலக்கும் போது நிகழும் வேதியியல் நிகழ்வால் ஏற்படுகின்றன.
அதேபோல், இதற்கு காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, நெருப்பில்பட்ட பனி உருகும்போது உருவான தண்ணீரை, இன்னமும் கெட்டியாக இருக்கும் பனி நன்றாக உறிஞ்சிக் கொள்கிறது. அதனால்தான் தண்ணீர் வெளியே சொட்டவில்லை என்கிறார்கள். இரண்டாவது காரணமாக முன்வைக்கப்படுவது 'Sublimation' எனும் வேதியல் நிகழ்வு. கற்பூரம் தீயில் பட்டதும் நீராக மாறாமல் நேரடியாக காற்றில் கலந்துவிடும். அதேபோலதான் இங்கே பனிக்கட்டி, தீயில் பட்டவுடன், நேரடியாக ஆவியாகிவிடுகிறது. இதற்கு காரணம், அந்தப் பனியில் குறிப்பிட்ட அளவு கலந்திருக்கும் கார்பன் கனிமங்களே!
இவ்வாறாகப் பல விளக்கக் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்குத்தான் புரளி பரப்புபவர்களுக்கு நேரமில்லை.
source https://www.vikatan.com/news/viral/fake-texas-snow-videos-spamming-social-media
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக