Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

வெஸ்டர்ன் கழிவறை, டி.வி, மெத்தை... நாடு கடத்தப்படும் நிரவ் மோடிக்கு தயாராக இருக்கும் வி.ஐ.பி சிறை!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பொதுத்துறை வங்கியில் கடன் பெற்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உட்பட பல தொழிலதிபர்கள், கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பல ஆயிரம் கோடிகளை, வாராக் கடனில் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டது. இதில் பொதுத்துறை வங்கிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன.

ஆர்தர் ரோடு சிறை

அந்த வரிசையில், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ்மோடியை, இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2011ம் ஆண்டில் இருந்து நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைரம் வியாபாரத்திற்காக கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார். மொத்தம் 14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது, வங்கித் துறையை ஆட்டம் காண வைத்தது. அவருடன் சேர்ந்து அவரது உறவினர் மெஹுல் சோக்‌சியும் தன் பங்கிற்கு கணிசமான அளவு கடன் வாங்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 2018ம் ஆண்டு இந்த மோசடி வெளியுலகத்திற்கு வரும் முன்பாகவே இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தப்பிச்சென்ற பிறகுதான் அவர்களின் மோசடியை வங்கிகள் வெளியில் சொல்ல ஆரம்பித்தன. இந்த மோசடியில் வங்கி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் நிரவ்மோடி இங்கிலாந்தில் பதுங்கி இருந்ததையடுத்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. நிரவ்மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் விசாரணை நடைபெற்றால், நியாயமான முறையில் நடக்காது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து அவரை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதேசமயம் அவர் மோசடி செய்த வங்கிக் கிளை மும்பையில் இருப்பதால் அவரை மும்பைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

நிரவ் மோடி

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்தர் ரோடு சிறையில் ஏற்கனவே வி.ஐ.பி.க்களுக்காக பிரத்யேக பிளாக் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதில் வெஸ்டர்ன் கழிவறை, டிவி, கண்காணிப்பு கேமரா, மெத்தை, போதிய வெளிச்சம் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். ஏற்கனவே விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வரும்போது, அங்கு அவரை அடைக்க ஒரு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பிளாக்கில் மொத்தம் 3 அறைகள் இருக்கிறது. அதில் ஒன்றில் தான் நிரவ்மோடி அடைக்கப்பட இருக்கிறார். நீரவ்மோடி நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டால் அவரை அடைக்க வி.ஐ.பி.அறை தயார் நிலையில் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறை மும்பை தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை அடைக்க பிரத்யேகமாக கட்டப்பட்டது. பலத்த பாதுகாப்போடு சிறை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள சிறைகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறித்தான் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தன்னை இந்தியாவிற்கு அனுப்பவேண்டாம் என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்த்தக்கது. அதன் பிறகு ஆர்தர்ரோடு சிறையில் வி.ஐ.பி.க்களுக்காக கட்டப்பட்டுள்ள சிறை அறையை வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் தான் இங்கிலாந்து பிரஜை என்பதால் தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது என்று மல்லையா வாதிட்டார்.

மெஹுல் சோக்ஸி

நிரவ் மோடியும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பிறகு, பல காரணங்களை கூறி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கொடுக்கப்படவில்லை. இப்போதும் கோர்ட் நிரவ் மோடியை நாடு கடத்த உத்தரவிட்டுள்ள போதிலும், உடனடியாக அது நடக்குமா என்பது சந்தேகமே என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/india/mumbai-arthur-road-jail-ready-to-welcome-neerav-modi-who-bankrupted-punjab-national-bank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக