Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

குக்கு வித் கோமாளி : உண்மையாவே சமைக்கிறாங்களா... இல்ல நடிக்கிறாங்களா?!

அப்படி இப்படிப் பயணித்து டாப் 5 போட்டியாளர்கள் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த வாரம் டாப் 5 செலிப்ரேஷன் ரவுண்ட். வேறென்ன... எலிமினேஷன் இல்லை, ஜாலியாக இன்னும் ஒரு வார்த்தைக் கடத்தும் ஐடியாதான்.

'ச்சில் ப்ரோ’ பாடலுடன் பட்டாஸாய் வந்தார்கள் கோமாளிகள். ஐந்து பேரில் யார் திறமைசாலி என்று ரக்‌ஷன் கேட்க, ’தர்மசாலி மீனிங்... மீனிங்?” என்று அழுத்திக் கேட்டார் சுனிதா.

கத்தியோட என்ட்ரி ஆனார் வெங்கடேஷ் பட். தங்கதுரை லீடெடுத்து, “இதவெச்சு ஒரு ஜோக் சொல்றேன். ஒருத்தன் கத்தி சாணை பிடிக்க பத்து ரூவான்னானாம்” என்று ஆரம்பிக்க, இடைமறித்த புகழ் “கத்தாம சாணை பிடிக்க அஞ்சு ரூவா. ஜோக் முடிஞ்சது” என்று அதை உடைத்துவிட்டார். இப்போதெல்லாம் காமெடியைவிட அந்த காமெடிக்கு முன்னும் பின்னும் நடப்பவைதான் காமெடியாக இருக்கிறது . விஜய் டிவிதான் அந்த டிரெண்டை உருவாக்கிவிட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஷகிலா, கனி, பாபா பாஸ்கர், அஷ்வின் ஆகியோர் என்ட்ரி ஆனார்கள். பவித்ரா ஏனோ தவிர்க்க முடியாத காரணத்தால் வரவில்லை. கோமாளிகளைப் பாராட்டினார் பாபா பாஸ்கர். கனி டான்ஸை கமென்ட் அடித்தனர். பொண்ணு வேண்டாம் என்று பாபா பாஸ்கர் சொன்னதைக் கேள்வி கேட்டார் ரக்‌ஷன்.

சில வாரங்களாக ஒரு புது கன்டென்ட் பிடித்திருக்கிறது டைரக்டர் டீம். அதாவது ஷூட் செய்யும்போது பேசியதை, எடிட் முடிந்தபின் ஹாட் ஸ்டாரிலோ, டிவியிலோ ரியாக்‌ஷனுடன் பார்த்திருப்பார்கள் அல்லவா? அதை வைத்து பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு கன்டென்ட் எடுக்கிறார்கள். நல்ல ஐடியாதான்.

குக்கு வித் கோமாளி

அதன்படி, சென்ற வாரம் தன்னை முதுகுக்குப் பின் கலாய்த்தவர்களை ஒரு பிடிபிடித்தார் பாபா பாஸ்கர். அவருக்கு சப்போர்ட் செய்த புகழிடம் ‘வெட்கம் மானம் சூடு சொரணை இல்லயாடா?” என்று கேட்டார் அஷ்வின். உடனே புகழ், “அட... யாரு இது விஜய் டிவிக்கு புதுசா வந்திருக்காரு போல” என்று கையெறி குண்டைப் பிடித்துத் திருப்பி அடித்தார். “இன்னைக்கு வேற லெவலா வெளையாடலாம்” என்றார் பாபா பாஸ்கர்.

“இந்த செலிபிரேஷன் ரவுண்ட் சீசன் 1, வெர்சஸ் சீசன் 2” என்று அசத்தல் அறிவிப்பை வெளியிட்டார் செஃப் வெங்கடேஷ் பட். தொடர்ந்து ரக்‌ஷன் “இந்த டாப் 5 செலிப்ரேஷ் ரவுண்ட் கலக்கப்போவது யாருல....” என்று தப்பாய் சொல்ல அனைவரும் கத்தி கூச்சலிட்டனர். எடிட்டர் சாமி... யார்யா நீ! இதையும் வெச்சுருலாம் என்று முடிவெடுத்து, அதோடவே காட்டியது நன்றாகவே இருந்தது. (எடிட்டர் நான் தான்... ஆனா ஐடியா டைரக்டர் ஓகே சொன்னது என்று அவர் மைண்ட் வாய்ஸ் சொல்லக்கூடும்.)

சீசன் ஒன்னில் போட்டியிட்ட வனிதா, உமா ரியாஸ், ரேகா ஆகியோர் வந்தார்கள். அடுத்ததாக ஆரவார என்ட்ரி கொடுத்தார் ரம்யா பாண்டியன். பாபா பாஸ்கருக்கும் வனிதாவுக்கும் கொஞ்சநேரம் வார்த்தை WWF நடந்தது. ரம்யா பாண்டியன் புகழை கொஞ்சநேரம் ஓட்டினார். அஷ்வினை உமா ரியாஸ் பாராட்டினார். போனவாரம் இங்கே நான் எழுதிய “பிக்பாஸை விட, குக்கு வித் கோமாளி பாசிட்டிவா இருக்கறதால எல்லாருக்கும் பிடிக்குது'' என்பதைச் சொல்லி கைதட்டல் வாங்கினார் ரம்யா பாண்டியன்.

குக்கு - கோமாளிகள் ஜோடி சேரும் படலம். வொர்க் ஸ்டேஷனில் ஒவ்வொரு குக்குகளாய் நிற்கச் சொன்னார் செஃப் வெங்கடேஷ் பட். அதன்பிறகு கோமாளிகள்தான் குக்குகளைத் தேர்வு செய்வார் என்றார். கோமாளிகள் படம் பொறித்த கொடி வைக்கப்பட்டது. கோமாளிகள் அதை எடுத்து தங்கள் குக்குகளை தேர்வு செய்வார்கள் என்றார்.

குக்கு வித் கோமாளி

முதலில் புகழை அழைத்தார்கள். ரம்யா பாண்டியனைத்தான் அவர் ஜோடி சேர்வார் என்பது பச்சைக்குழந்தைக்கும் அறிந்த ரகசியம். “புகழுக்கு குரு உச்சத்துல இருக்கு” என்று மணிமேகலை சொல்ல “யார் குரு?” என்று செம சீரியஸாகக் கேட்டார் சுனிதா.

புகழ் கொடியுடன் வர, அதைப் பிடுங்க பாலாவும் அஷ்வினும் மோதிக்கொண்டனர். எல்லா இடையூறுகளையும் தாண்டி ரம்யா பண்டியனுடன் ஜோடி சேர்ந்தார் புகழ். அடுத்து பாலா, வனிதாவைத் தேர்ந்தெடுத்தார். பாபா பாஸ்கர் அப்செட்டாக தனியாகப்போய் “உங்களுக்கு சண்டை நடக்குது. டிவில பார்த்தா தெரியும்” என்றார் பாலா. ''ஓகேடா'' என்று சமாதானமானார் பாபா பாஸ்கர்.

சரத், அஷ்வினைத் தேர்வு செய்ய வைத்தார். அடுத்து ஷிவாங்கி. ‘நான்தான் பாலாவை பாபா பாஸ்கருடன் சேரச் சொன்னேன். அஷ்வினுடன் சரத்தை சேரச் சொன்னேன்” என்று எல்லா ட்விஸ்டையும் உடைத்தார் ஷிவாங்கி. மேட்ச் ஃபிக்ஸிங் படி, பாபா பாஸ்கருடன் ஷிவாங்கி சேர்ந்தார். சுனிதா அடுத்து அழைக்கப்பட்டார். அவர் கனியுடன் சேர்ந்தார். மணிமேகலை ரேகாவுடன் சேரவே மாட்டேன் என்றவர், அவர் வொர்க் ஸ்டேஷனில் நிற்க ரேகா அழுதுவிட்டார். தங்கதுரை ஷகிலாவுடனும், சக்தி உமா ரியாஸுடனும் சேர்ந்தனர்.

செஃப் தாமு செட்டுக்குள் வந்தார். அட்வான்டேஜ் ரவுண்ட் ஒன் ஆரம்பமானது. மோமோஸ் சேலஞ்ச். குக்குகள் கண்களைக் கட்டிக்கொண்டு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக்கொண்டே கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடத்துக்கு கோமாளிகள் கண்களைக் கட்டிக்கொள்ள குக்குகள் சமைக்க வேண்டும்.

ஆரம்பமானது அமர்க்களம். கண் கட்டை சரியாகக் கட்டிவிடச் சொன்ன ரம்யா பாண்டியனுக்கு 'மாங்கல்யம் தந்துநானே' முடிச்சுப்போல பீலாகிக் கட்டினார் புகழ். அஷ்வின் டேபிளுக்குப் போய் டூயட் பாட்டு சொல்லிக் கொடுத்தார் ஷிவாங்கி. பாபா பாஸ்கரை அலைக்கழித்து வம்பிழுத்தார் செஃப் வெங்கடேஷ் பட். பழைய்ய்ய்ய்ய ஜோக்கை சொல்லி பரிதவிக்க விட்டார் தங்கதுரை.

குக்கு வித் கோமாளி

கோமாளிகள் கண்களைக் கட்டிக்கொண்ட 10 நிமிடத்தில் இன்னும் ரணகளம் நடந்தது. ஜோக்கும் வொர்க்குமாய் கடந்தது. ரம்யா பாண்டியனின் குக்கர் விசிலடித்தது. ”அதெப்படி நீ விசிலடிக்கலாம்?” என்று அந்த குக்கரை அடித்தார் புகழ். ரொம்ப ஒவராத்தான் போறீங்கடா டேய்!

ஆளாளுக்கு சமர்ப்பித்ததில், எட்டு பேரில், கனி- சுனிதா அதிக மோமோஸ் செய்திருந்தனர். அடுத்தடுத்த இடங்களில் உமா ரியாஸ் - சக்தி, வனிதா - பாலா, ரம்யா பாண்டியன் - புகழ் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்குப் போனார்கள்.மோமோஸின் மடிப்பு மிகச் சரியாய் அமைந்ததற்கு உமா ரியாஸ் ஸ்பெஷல் மென்ஷனில் பாராட்டுப் பெற்றார்.

ரவுண்ட் 2. யார் அதிக பானி பூரி சாப்பிடும் சேலஞ்ச்.

ஐந்து நிமிடம் கோமாளிகள், ஐந்து நிமிடம் குக்குகள் மீண்டும் ஐந்து நிமிடம் கோமாளிகள் பானி பூரி சாப்பிடவேண்டும்.

100 பானி பூரி உள்ள கூடை கொடுக்கப்பட்டது. புகழும் பாலாவும் போட்டி போட்டுக் கொண்டு பானி பூரியை அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்தனர். ரகளையும் ரணகளுமுமாய் நடந்த அந்த சேலஞ்சில் புகழும் ரம்யா பாண்டியனும் முழு கூடையையும் காலி பண்ணினார்கள். புகழ் 70, ரம்யா பாண்டியன் 30 என்ற கணக்கில் சாப்பிட்டிருந்தார்கள். எழுபது பானி பூரி! “ஏன்ப்பா அதென்ன வாயா வாய்க்கலா?” என்ற டயலாகை ஏனோ டிஜே போட மறந்துவிட்டார்.

அடுத்த நாள் சண்டே எபிசோடில் மெய்ன் டாஸ்க். சூப்பர் டபிள்ஸ் சேலஞ்ச். சீசன் ஒன், சீசன் 2 இரண்டு டீமும் சேர்ந்து சமைக்க வேண்டும். தனித்தனியாக சமைத்து, நடுவர்களிடன் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இரண்டும் சேர்ந்துதான் மார்க் போடப்படும் என்றார்கள் நடுவர்கள்.

ரம்யா பாண்டியன் - பாபா பாஸ்கர் ஒரு டீம்: ரேகா - ஷகிலா ஒரு டீம்: உமா ரியாஸ் - கனி ஒரு டீம்: வனிதா - அஷ்வின் ஒரு டீம் என்று செட் ஆனார்கள்.

அட்வான்டேஜ் டாஸ்க்கில் ஜெயித்த ரம்யா, தன் போட்டியாளர்களில் இரண்டு டீமுக்கு எக்ஸ்ட்ரா டிஷ் சமைக்கச் சொல்லலாம் என்று சொன்னார் நடுவர். அதன்படி உமா ரியாஸ், வனிதா இந்த டீமுக்கு எக்ஸ்ட்ரா டிஷ் சமைக்க உத்தரவிட்டனர் பாபா பாஸ்கர் & ரம்யா டீம்.

அஷ்வின் வனிதா டீமுக்கு அகத்திக்கீரையும், உமா ரியாஸ் - கனிக்கு வாழைப்பூவையும் கொடுத்தார் ரம்யா. கோமாளி குக் இருவரும் கைகளை சேர்த்து கட்டிக்கொண்டு ஆளுக்கொரு காலில் பக்கெட்டை வைத்துக்கொண்டே நடந்து சமைக்கத் தேவையான பொருட்களை எடுத்துவரவேண்டும். அப்படியே சமைக்க வேண்டும் என்பது இன்றைய விதி. அட்வாண்டேஜ் டாஸ்க் ஜெயித்ததால், ரம்யா பாண்டியன் - புகழுக்கு பத்து நிமிடம் விதிவிலக்கு. “அதெல்லாம் வேண்டாம். நாங்க கை கட்டிட்டே இருக்கோம்” என்று அடம்பிடித்தார் புகழ்.

குக்கு வித் கோமாளி

ஆளாளுக்கு சமையலை ஆரம்பித்தனர். யார் என்ன செய்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. சமையலை விடவும் பேச்சும் ரகளையும்தான் அதிகம் காட்டப்பட்டது. ஷகிலா - ரேகா டீம் முதலில் வந்தனர். ரேகா ‘சிங்கப்பூர் பிளாக் பெப்பர் கிராப்’ செய்திருந்தார். ஷகிலா “கீமா பிரியாணி” செய்திருந்தார்.

அடுத்து வனிதா - அஷ்வின் டீம். வனிதா, ஸ்பெய்னின் ‘சீ ஃபுட் பேல்யா’ செய்திருந்தார். அஷ்வின் ‘பீட் நட்ஸ் ஸ்பெகட்டி” செய்திருந்தார்.

பாபா பாஸ்கர் ‘வெஜ் ஸ்டஃப்ட் சிக்கனும், ஹாலன்டைன் சாஸும் செய்திருந்தார். ரம்யா பாண்டியன் பாவ் பாஜி செய்திருந்தார்.

கனி ‘குத்தி வங்காய் பிரியாணி’ செய்திருந்தார். உமா ரியாஸ் ‘செஷ்வான் நூடுல்ஸ் ரைஸ் வித் சில்லி ஃபிஷ்’ செய்திருந்தார்.

இவர்களில் நான்கு பேர்... அதாவது ரெண்டு குக்கிங் ஜோடிகள் அடுத்த சுற்றுக்குப் போகும். நடுவர்கள் முடிவுப்படி உமா ரியாஸ் - கனி மற்றும் ரம்யா பாண்டியன் - பாபா பாஸ்கர் இவர்கள் வென்று அடுத்த சுற்றுக்குப் போனார்கள்.

இந்த நால்வரும் ஃபைனல் குக் ஆஃபில் மோதிக் கொண்டனர். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் கொடுக்கப்பட்டது. ரம்யா பாண்டியன் கர்நாடகாவும், உமா ரியாஸ் கேரளாவும், பாபா பாஸ்கர் மற்றும் கனி ஆந்திராவையும் தேர்வு செய்தனர். ஏதோ ஒரு மாநிலத்தை இருவர் தேர்ந்தெடுக்கலாம் என்று நடுவர் சொல்லியிருந்தார்.

‘பாபா பாஸ்கர் தான் டைட்டில் வின்னர்’ என்று பாபா பாஸ்கரே சொன்னார். தான் ஒரு சிங்கப்பெண் & சிங்கிள் பெண் என்று ரம்யா பாண்டியன் சொன்னார்.

இரண்டாவது சுற்றில் சிக்கன் கீ ரோஸ்ட் செய்திருந்தார் ரம்யா பாண்டியன். செம பாராட்டு பாராட்டினர் செஃப் இருவரும். பாபா பாஸ்கர் கோங்குரா பிரான் செய்திருந்தார். அதுவும் நல்ல பாராட்டைப் பெற்றது.

குக்கு வித் கோமாளி

கனி, ‘மிரபக்காய கோடி வேப்புடு’ என்ற ஆந்திரா டிஷ்ஷை செய்திருந்தார். ’டாப் டாப் டாப் நாட்ச்’ என்று தாமு உருகி உருகிப் பாராட்டினார். வெங்கடேஷ் பட், இன்னும் ஒரு படி அதிகமாகப் பாராட்டினார். உமா ரியாஸ், கேரள ஸ்பெஷல் புட்டு கடலக்கறி செய்திருந்தார். அந்தக் கடலக் கறிக்கு அவுட் ஆஃப் த வேர்ல்ட் என்ற பாராட்டை அளித்தார் தாமு.

இறுதியில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாயின்ட் ஃபைவ் மார்க்கில் ரம்யா பாண்டியன் வெற்றியைத் தவறவிட்டார். கனிக்கும் சுனிதாவுக்கும் பரிசளிக்கப்பட்டது. அடுத்த வாரம் எலிமினேஷன் இருக்குமா.... இல்லை இன்னுமொரு கொண்டாட்டமா என்பது... யாமறியோம் பராபரமே. அப்புறம் இவங்களாம் உண்மையாவே சமைக்கிறாங்களா, நடிக்கிறாங்களான்னு ஒரு டவுட் இருக்குல்ல... சீக்கிரமே ஸ்பாட் விசிட் அடிச்சிடுவோம்!



source https://cinema.vikatan.com/television/cooku-with-comali-season-2-review-episodes-of-february-2728

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக