Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

கரூர்: பாதியில் நிற்கும் சாலை; முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கரூரில் அவசரகதியில் முழுமை பெறாத பணிகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்த சம்பவம், கரூர் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இந்த திறப்பு விழாக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதில் நிற்கும் சாலை அமைக்கும் பணி

கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழி சாலை வரை, ரூ. 21.12 கோடியில் அம்மா சாலை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. இந்தப் பணியை அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த அன்பழகன் துவக்கி வைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்பணிகளில் நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைக்கும் பணி என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதாக, நேற்று மதியம் 12 மணியளவில் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அவசரகதியில் அம்மா சாலை திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அம்மா சாலையை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி திறந்து வைத்தார்.

மலர்விழி

அந்த நிகழ்ச்சியில் பேசிய, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, "போக்குவரத்துத் துறை அமைச்சரின் கனவு திட்டமான அம்மா சாலை திட்டம் நிறைவேற, நீதிமன்றத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது" என பேசினார்.

ஆனால், இந்த அம்மா சாலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 7 முதல் பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே முறை பாலம் வரை மட்டுமே பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. முழு பணியியும் முடிவடைவதற்குள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இப்படி திறந்துள்ளார்கள். இந்த சாலை திறக்கும் நிகழ்ச்சி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புதான், அவசரகதியில் சாலையோர நடைபாதை கல் பதிப்பு மற்றும் வண்ணம் பூசும் வேலைகள் நடைபெற்றது. ஆனால், பெரிய குளத்துப்பாளையம் முதல் கரூர் ரயில்வே சந்திப்பு வரை பணிகள் முழுமை பெறாமல் மண் சாலைகளாக மட்டுமே உள்ளன.

Also Read: கரூர்: வேட்பாளரை அறிவிக்கவில்லை... இருந்தும் பிரசாரத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி!

கடந்த வாரம் பிப்ரவரி 12 - ஆம் தேதி சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், அம்மா சாலை பணிகள் ரயில்வே துறை நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் நடைபெறுவதாகக் கூறி அங்கு திடீர் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்தனர். இதனால், அங்கு விரைந்து வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் நகராட்சி ஆணையர் ஆகியோர், ரயில்வே துறை அதிகாரிகளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், 'முறையான அனுமதி கிடைத்த பின்னர் பணிகள் நடைபெறும்' என உறுதி அளித்திருந்தனர். இச்சம்பவம் நடைபெற்று பத்து நாள்களே ஆகியுள்ள நிலையில், தற்போது அம்மா சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடைமேடையுடன் கூடிய பூங்கா திறப்பு

மேலும், கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழிச்சாலை வரை ரூ 21 கோடியில் துவக்கப்பட்ட பணிகளில், தற்போது ரூ.18 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக, பெரியார் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 இணைப்பு சாலை வரை மட்டுமே அமைக்கப்பட்ட ரூ. 18 கோடி மதிப்பிலான சாலை மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகை தெரிவிக்கிறது.

இது இப்படியென்றால், கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் நடைமேடையுடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காவை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் கரூர் நகராட்சி ஆணையர் சுதா மற்றும் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், தமிழ்நாடு காகித ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அங்கும் பணிகள் நிறைவு பெறாமல், சுற்று சுவர் மட்டுமே வண்ணம் பூசப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, தோரணக்கல்பட்டியில் புதிதாக அமைய உள்ள கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், அவ்விடத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை வைத்து, திடீர் சிலை திறப்பு விழாவை மேற்கொண்டனர்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலை திறப்பு

இப்படி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் சிலமணி நேரத்திற்கு முன்பு, கரூரில் அடுத்தடுத்து அவசரகதியில் நடைபெற்ற திறப்பு விழா சம்பவங்கள், நேற்று மாலை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக வேலைகள் முழுமையாக முடியாத பணிகள் ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்து திறக்க வைத்துள்ளது கொடுமை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/controversy/karur-collector-opened-half-finishing-government-schemes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக