Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஒரே பள்ளியைச் சேர்ந்த 229 மாணவர்களுக்கு தொற்று! - கொரோனா அலர்ட்டில் மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. வாசிம் என்ற இடத்தில் உள்ள பள்ளி மாணவர் விடுதியில் தங்கிப்படித்த 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் 327 பேர் தங்கிப் படிக்கின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாது 3 ஊழியர்களையும் கொரோனா பாதித்துள்ளது.

கொரோனா எச்சரிக்கையுடன் மாணவிகள்

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அமராவதி, ஹின்கோலி, நாண்டெட், வாசிம், புல்தானா, அகோலா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கிப் படிக்கின்றனர். அமராவதி, அகோலா ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த இரு மாவட்டங்களிலும் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, லாத்தூர் என்ற பகுதியில் 39 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வாசிம் விடுதியில் கொரோனா பரவியிருப்பது பெற்றோரை அச்சம் அடையச் செய்துள்ளது.

மும்பை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அதிகரித்துள்ள கொரோனாவின் தாக்கம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர 80 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இது வரை கொரோனாவிற்கு 51,937 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 1,167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Also Read: கொரோனா அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

இரண்டு மாதங்களுக்கு பிறகு, இப்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும், இந்நாட்களில் மக்கள் மிகவும் பொறுப்புடன் சமூக இடைவெளி விட்டு, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதே போன்று மாநிலம் முழுவதும் சோதனைகளை அதிகரிக்கும் படி முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண், டோம்பிவலி பகுதியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு, எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/corona-surge-in-maharashtra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக