ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை தொடர்பாக வைத்திலிங்கத்தின் சம்மந்தி மிரட்டல் விடுத்ததாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இளைஞரின் உறவினர்கள் வைத்திலிங்கத்தின் சம்மந்தி மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதுார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு வினோத்குமார் (32) என்ற மகனும், வினோதினி என்ற மகளும் இருந்தனர். வினோத்குமார் தஞ்சையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார்.
கோவிந்தராஜனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் குணசேகரன். இவரது மகன் டாக்டர் கார்த்தி. இவர் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும்,எம்.பி.யுமான வைத்திலிங்கத்தின் மகள் பிரதீபாவை திருமணம் செய்துள்ளார்.
குணசேகரனுக்கும், கோவிந்தராஜனுக்கும் இடையே சில ஆண்டுகளாக இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வினோத்குமார், `எங்க இடத்தை அபகரிச்சு வச்சுகிட்டு அடிக்கடி சண்டையும் போடுறாங்க இவங்களால எங்க நிம்மதியே போச்சு அவங்க பின்னாடி வைத்திலிங்கம் இருப்பதால் தான் பயமே இல்லாம இப்படி செய்றாங்க’ என புலம்பி வந்துள்ளார்.
குணசேகரனும் வைத்திலிங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, `உன்னால முடிஞ்சதப் பார்த்துக்க. என்னை எதுவும் செய்ய முடியாது’ எனக் கூறி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வினோத்குமாருக்கும், குணசேகரின் மகனும், வைத்திலிங்கத்தின் மருமகனுமான டாக்டர் கார்த்திக்கும் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரத்தநாடு போலீஸார் வந்து பிரச்னையை தீர்த்து விட்டுச் சென்றாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை, வினோத்குமார் தனது வீட்டில் உள்ள அவரது அறையில் வேட்டியில் துாக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். விடிந்ததும் இதனை பார்த்த கோவிந்தராஜன் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சில தினங்களுக்கு முன் வினோத்குமாரின் தங்கை வினோதினிக்கு திருமணம் நடந்துள்ளது. அதற்காக போடப்பட்ட பந்தல்கூட இன்னும் பிரிக்கவில்லை. ``திருமண வீட்டை இழவு வீடா மாத்திட்டாங்களே... என் மகன் இனி வருவானா... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என் மகன் போலீஸ்ல புகார் கொடுத்தான். அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தா, இப்ப என் மகன் செத்துருக்க மாட்டான்’’ என வினோத்குமார் அப்பா கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வினோத்குமார் தரப்பில் விசாரித்தோம். ``கோவிந்தராஜனுக்குச் சொந்தமான இடத்தை குணசேகரன் தரப்பு அபகரித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினோத்குமார் ஒரு வருடத்துக்கு முன்பே ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது இரு தரப்பையும் போலீஸார் அழைத்துப் பேசினர். அப்போது, `எங்க இடத்தை மீட்டு கொடுங்க’ என வினோத்குமார் கூறினார். குணசேகரன் போலீஸார் முன்னிலையிலேயே வினோத்குமாரைத் தகாத வார்த்தையில் பேசினார். இதனை போலீஸ் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே குணசேகரன் தரப்பு வினோத்குமாரை கடுமையாகத் தாக்கினர். உடல் முழுக்க கீறல்களுடன், கண்ணிலும் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Also Read: மகனுக்காகக் குறிவைக்கும் வெல்லமண்டி; எச்சரித்த வைத்திலிங்கம்!-என்ன நடக்கிறது திருச்சி அதிமுக-வில்?
மருந்துவமனைக்கு வந்த போலீஸார், வினோத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். ஆனால், `என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். ஆனால், இதில் வைத்திலிங்கம் தலையிட்டு, `என் சம்மந்தி மற்றும் மருமகன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது’ என போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தார். அப்போதிலிருந்தே வினோத்குமார் மன வருத்தத்தில் இருந்தார்.
மேலும், இரு தரப்புக்கும் அவ்வப்போது பிரச்னை தொடர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வைத்திலிங்கத்தின் மருமகன் டாக்டர் கார்த்தி போலீஸாரிடம் வினோத்குமாரைக் கைது செய்ய வலியுறுத்தினார். உடனே, போலீஸ் வினோத்தை ஸ்டேஷனுக்கு அழைத்தனர். ஆனால், மகனை ஸ்டேஷனுக்கு அனுப்ப கோவிந்தராஜ் மறுத்தார்.
இதையடுத்து, `காலையில் ஸ்டேஷனுக்கு வர வேண்டும்’ எனக் கூறிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் இரவே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் வினோத்குமார். போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், `குணசேகரன், கார்த்தி, சங்கர், டாக்டர் மணி உள்ளிட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம்’ என கோவிந்தராஜ் தரப்பில் தெரிவித்தனர். போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு உலை பெற்றுக் கொண்டோம்’’ எனத் தெரிவித்தனர்.
குணசேகரன் தரப்பில் பேசினோம். ``வினோத்குமார் நாங்க செல்ல முடியாத அளவுக்குப் பாதையை மறைத்து குழிவெட்டித் தடுத்தார். இதனைக் கேட்ட குணசேகரனைத் தாக்கினார். இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். சம்பவதன்று வினோத் குடிபோதையில் வேறு இருந்தார். எங்களுக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’’ என தெரிவித்தனர்.
போலீஸ் தரப்பில் பேசினோம், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்பதோடு முடித்துக்கொண்டனர்.
source https://www.vikatan.com/news/crime/youth-committed-suicide-over-former-minister-vaithilingam-relatives-threat-alleges-family
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக