தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த சில வருடங்களுக்கு முன், திருவள்ளுர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் காலிமனை ஒன்றினை வாங்கி சொந்தமாக்கியுள்ளார். இருப்பினும் வெளிநபர்கள் யாரேனும் தன் நிலத்தை அபகரித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக, சுமார் 6 மாத காலத்துக்கு ஒருமுறை தாம்பரத்திலிருந்து பட்டாபிராம் சென்று தன் மனையைப் பார்வையிட்டு வருவதை வெங்கடேசன் வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தன் மனைவி சுமதியுடன் பட்டாபிராமில் உள்ள தங்கள் மனையைப் பார்வையிட வெங்கடேசன் சென்றுள்ளார். காலிமனையைப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்புகையில், பட்டாபிராம் பகுதியிலிருந்து தாம்பரத்துக்குச் செல்வதற்காக பட்டாபிராம் மேம்பாலம் அருகே இருவரும் ஆட்டோவுக்காகக் காத்திருந்துள்ளனர். அப்போது வெங்கடேசன், தான் வைத்திருந்த பணப்பையை மேம்பாலத்திலிருந்து கீழே தவறவிட்டுள்ளார். தாம்பரம் செல்லும் வாகனம் வந்தவுடன் அவசரத்தில் தான் வைத்திருந்த பணப்பை கீழே விழுந்ததுகூடத் தெரியாமல் வெங்கடேசன் தன் மனைவி சுமதியுடன் ஆவடி செல்லும் வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பட்டாபிராம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் செல்வகுமார் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பாலத்தின் கீழ் செல்லும் போது சாலையின் நடுவே கைப்பை ஒன்று கிடப்பதைப் கண்டு தனது வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு கீழே இறங்கி பையைக் கையில் எடுத்துப் பார்த்தார். அப்போது அந்த பையில், ரூ.10,000 ரொக்கம், 2 சவரன் தங்க நகை மற்றும் நிலப்பத்திரம் ஆகியவை இருந்ததை அடுத்து, காவலர் செல்வகுமார் பையில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு,``உங்கள் உடைமைகள் அனைத்தும் பத்திரமாக என்னிடத்தில் இருக்கிறது. நீங்கள் எங்கு வர வேண்டும் என்று மட்டும் கூறுங்கள் நானே நேரில் வருகிறேன்" என்று கூறிவிட்டு, ஆவடி பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த அந்த தம்பதியிடத்தில் அவர்களின் கைப்பையை ஒப்படைத்தார். தங்கள் பொருள்களைப் பத்திரமாகத் தேடி வந்து திருப்பி அளித்த கண்ணிய காவலர் செல்வக்குமாருக்கு மனம் நெகிழ தங்கள் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யனிடம், வெங்கடேசன்-சுமதி தம்பதியினர் நடந்ததைக் கூறினர்.
அதைத் தொடர்ந்து, துணை காவல் ஆணையர் தீபா, காவலர் செல்வகுமாரை நேரில் அழைத்துத் தான் பாராட்டியதுடன் மட்டுமல்லாமல், அவரின் உதவி குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார். அதனையடுத்து, தலைமைக் காவலர் செல்வகுமாரை நேரில் அழைத்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அவரின் செயலை பாராட்டி அவருக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சாலையில் கிடந்த கைப்பையை உரியவர்களிடத்தில் தேடிச் சென்று ஒப்படைத்து உதவிய தலைமைக் காவலர் செல்வகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றன.
source https://www.vikatan.com/news/tamilnadu/avadi-policeman-handed-over-money-wallet-found-on-the-road-to-the-owner
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக