கோவை குறிச்சி பகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தராத அ.தி.மு.க அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து தி.முக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ``இவர்களின் ஆட்சியில் தமிழகம் திவாலாகிக் கொண்டிருக்கிறது.`கருணாநிதி 1 லட்சம் கோடி ரூபாய் கடனாய் வைத்திருக்கிறார். அவருக்கு ஆள உரிமை இருக்கிறதா?’ என ஜெயலலிதா கேட்டார்.
Also Read: “துரோகி எடப்பாடி... ஆள்காட்டி பன்னீர்!” - பிரித்துமேயும் நாஞ்சில் சம்பத்
இப்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என மக்கள் கேட்க மாட்டார்களா? கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சியில் (மாநகராட்சி, நகராட்சி) தேர்தலே நடத்தாமல் கடத்தியிருக்கிறார்கள். இன்னும் மூன்று மாதங்களில் மூட்டை, முடிச்சுகளோடு புறப்படபோகிறார்கள். நாட்டு மக்கள் வரிப்பணத்தில் லஞ்சம் குடிக்கின்றனர்” என்று சாடினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத்,``இந்த ஆட்சி துப்புகெட்ட ஆட்சி என்பதை விட, இந்த ஆட்சி முட்டாள்களின் சொர்க்கத்தில் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. இவர்களுக்குக் குழி தோண்டப்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த ஆட்சி புதைக்கப்பட போகிறது என்பது அர்த்தம். இந்த அரசாங்கத்துக்கு ஆயுள் முடியப் போகிறது. குரைக்கிற நாய் சாகிற நேரத்தில் கூரை மீது ஏறித் தாவும்.
அணையப்போற விளக்கு பிரகாசமாக எரியும். அப்படித்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அஸ்தமனம் ஆகிக் கொண்டிருக்கிறது. சூரியன் உதிக்கப் போகிறது. கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார்.
Also Read: 'ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி; உழுவார் உலகத்தாருக்கு!' -வள்ளுவரை மேற்கோள் காட்டிய முதல்வர்
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 7,000 கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்தார். ஆட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்பதற்காக இவர்கள் விவசாயக் கடனை ரத்து செய்துள்ளனர். ஆனால், இவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலின் சொல்வதுதான் தற்போது நடந்துள்ளது. பேருக்குதான் எடப்பாடி முதலமைச்சர், ஆனால், பெருமை கொள்ளக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின்தான் இருக்கிறார்” என்றார்.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து கீழே வந்த நாஞ்சில் சம்பத் மற்றும் தி.மு.க-வினரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, போலீஸார் வாகனத்தை தி.மு.க-வினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தி.மு.க-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/nanjil-sampath-slams-admk-government-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக