Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சென்னை: ஆட்டோ திருடிய வழக்கு - புதுச்சட்டையால் சிக்கிய இளைஞர்கள்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் சத்யாநகர் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (45). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 13 -ம் தேதி இரவு ஆட்டோவை வீட்டின் அருகில் நிறுத்தினார். பின்னர் (பொங்கலுக்கு முந்தைய நாள்) மறுநாள் காலை நிறுத்திய இடத்தில் ஆட்டோ இல்லாதததைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்தையா, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆட்டோ குறித்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அதனால், ஆட்டோவைத் திருடியவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

சிசிடிவி

இந்தநிலையில், சங்கர் நகர் போலீஸார், அனகாபுத்தூர் பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீஸார் நிறுத்தினர். ஆட்டோவுக்குள் இருந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். ஆட்டோவின் ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. அதனால் போலீஸாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

Also Read: சென்னை: திருட்டு புல்லட் இன்ஜினில் குட்டி கார்... சினிமா ஷூட்டிங்! - இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் விரட்டியபோதும் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து ஆட்டோவை காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். பின்னர் விசாரித்தபோது பொங்கலுக்கு முந்தைய நாள் திருடப்பட்ட முத்தையாவுக்குச் சொந்தமான ஆட்டோ எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ கிடைத்த தகவலை முத்தையாவுக்கு போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சமயத்தில் ஆட்டோவுக்குள் ஒரு பார்சல் இருந்ததைப் போலீஸார் பார்த்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது புதிய சட்டைகள் இருந்தன. அந்தச் சட்டைகள், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வாங்கியிருப்பது தெரியவந்தது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்

இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் விவரத்தைக் கூறி சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 இளைஞர்கள் புதிய சட்டைகளை வாங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாப் (19), திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த வினோத் (25) மற்றும் பாஸ்கர்(24) ஆகிய 3 பேர் என தெரியவந்தது.

அதனால், அவர்களின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது, வினோத் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்றவர்கள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் விசாரித்தபோது ஆட்டோவைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``ஆட்டோ திருட்டு வழக்கில் கைதான விஜயபிரதாப், பாஸ்கர், வினோத் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக ஒன்றாகச் சேர்ந்து பைக்குகள், ஆட்டோவைத் திருடி அதை விற்று வந்தது தெரியவந்தது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்

ஆனால், போலீஸாரிடம் இதுவரை சிக்கவில்லை. முதல் தடவையாக ஆட்டோ திருட்டு புகாரில் சிக்கியிருக்கின்றனர். வாகனங்களைத் திருடும் இவர்கள் அதைக் குறைந்தவிலைக்கு விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். மூன்று பேரும் எங்கெல்லாம் வாகனங்களைத் திருடினார்கள் என்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள வினோத்தை தேடிவருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-two-youths-in-auto-theft-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக